Sports

டென்னிஸ் ஜாம்பவான் ஃபெடரரை திணற வைத்த இந்திய இளம் வீரர் : சர்வதேச அளவில் குவியும் பாராட்டுகள் !

டென்னிஸ் அரங்கில் கிராண்ட்ஸ்லாம் மாதிரியான உயரிய சர்வதேச தொடர்களில் இரட்டையர் பிரிவில்தான் பெரும்பாலும் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். மகளிரில் சானியா மிர்சா, ஆடவரில் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி என இந்திய நட்சத்திரங்கள் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் பதக்கங்களை அறுவடை செய்துள்ளனர். ஒற்றையர் பிரிவில் சமீபத்தில் சர்வதேச அரங்கை திரும்பி பார்க்க வைத்துள்ளார் இந்திய வீரர் சுமித் நாகல்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் தொடர் நியூயார்க்கில் களைகட்டி வருகிறது. இதில், 3 தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று பிரதான சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார் இந்திய வீரர் சுமித் நாகல். தனது முதல் சுற்றிலேயே ஜாம்பவானான ரோஜர் ஃபெடரர் உடன் மல்லுக்கட்டினார்.

முதல் செட்டில் ஃபெடரர் செய்த சிறு சிறு தவறுகளை தனக்குச் சாதகமாக்கிய நாகல், அதனை 6க்கு 4 என கைப்பற்றி ஒட்டுமொத்த அரங்க ரசிகர்களையும் புருவம் உயர்த்த வைத்தார். போட்டியின் முடிவில் ஃபெடரர் 3க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இருப்பினும், ஃபெடரரை முதல் செட்டில் வீழ்த்தியதற்காகவும், அவரை சுலபமாக வெற்றி பெற விடாமல் பெரும் சவாலாய் இருந்ததற்காகவும் சுமித் நாகலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அலங்கரித்த ரோஜர் ஃபெடரை, ஒரு செட்டில் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் சுமித் நாகல். “நாகலின் ஆட்டத்திறன் கண்டு வியந்த ஃபெடரர், அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவும், வியக்கத்தக்க வகையில் விளையாடியதாகவும் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்”.

மேலும், “ எப்படி விளையாட வேண்டும் என்பதை மனதில் வைத்து சுமித் நாகல் விளையாடினார். டென்னிஸ் அரங்கில் அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. இது மிகவும் பிரமிப்பாக இருந்தது. கிராண்ட்ஸ்லாம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தொடர்களில் விளையாடுவது என்பது ஒவ்வொருவரின் கனவு. என்னை பொறுத்தவரை நாகல் மிகவும் அற்புதமாக தனது திறமையை வெளிப்படுத்தினார்”.

தற்போதைய தரவரிசையில் 190வது இடத்தில் இருக்கும் 22 வயதே ஆன நாகல், 3வது இடத்தில் உள்ள ஃபெடரரை அசர வைத்த தருணம் உலகெங்கும் உள்ள டென்னிஸ் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது.