Sports
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் வீரர் !
நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரோடு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்தது பி.சி.சி.ஐ.
பயிற்சியாளரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட கபில்தேவ் தலைமையிலான தேர்வு குழு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தது. 2021ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை வரை ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் உள்ளிட்ட துறைகளுக்கான பயிற்சியாளரை இந்திய அணியின் தேர்வுக்குழுவே தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு கமிட்டி மும்பையில் கூடி மேற்கண்ட பதவிகளுக்கான நேர்காணலை நடத்தியது.
அதன் முடிவில், இந்திய அணியின் தற்போதைய பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக உள்ள பரத் அருண் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் தொடர்ந்து நீடிப்பார்கள் எனவும் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பாங்கர் மட்டும் நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினரான விக்ரம் ரத்தோர் இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் ரத்தோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டி மற்றும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோல் 2016ம் ஆண்டு வரை சந்திப் பாட்டில் தலைமையிலான இந்திய தேர்வு குழு கமிட்டியின் உறுப்பினராக விக்ரம் ரத்தோர் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தியா ஏ அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வந்தார்.
மேலும், நடப்பாண்டில் நடைபெற உள்ள ஃப்ரீடம் தொடர் முதல் 2021ஆம் ஆண்டு நடைபெறும் சர்வதேச டி20 உலக கோப்பை வரை இவர்கள் அனைவரும் இந்திய அணியின் பயிற்சியாளர்களாக நீடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!
-
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!
-
“சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை” : தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
-
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் : ரூ4.12 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் அசத்தல்!