Sports

உலகக்கோப்பை 2019: சச்சின், கோலி சாதனையை முறியடிப்பாரா ரன் மெஷின் ரோஹித் ? ஆவலில் ரசிகர்கள்

12-வது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடரில் ‘லீக்‘ ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிந்தன.

‘லீக்’ சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, மரண ஃபார்மில் உள்ளார். இதுவரை 8 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோகித், 92.42 சராசரியில் 647 ரன்கள் குவித்துள்ளார். ஆட்டத்திற்கு ஆட்டம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியும், முறியடித்து வருகின்றார்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் இதுவரை அவர் 5 சதங்களை விளாசியுள்ளார். உலகக் கோப்பையில் மொத்தமாக 6 சதங்களை ரோகித் விளாசியுள்ளார். இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பையில் 5 சதங்கள் விளாசியுள்ளார். இன்னும் ஒரேயொரு சதம் விளாசினால், சச்சினின் சாதனையை ரோஹித் முறியடிப்பார்.

அது மட்டுமன்றி, ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்ததும் சச்சின்தான். 2003 உலகக் கோப்பைத் தொடரில் சச்சின், 673 ரன்கள் அடித்தார். அடுத்த ஆட்டத்தில் ரோகித் சர்மா இன்னும் 27 ரன்கள் அடித்தால், சச்சினின் சாதனையை முறியடிப்பார். சச்சின், உலகக் கோப்பைப் போட்டிகளில் 6 சதங்கள் அடிக்க, 44 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டார். ஆனால், ரோஹித் சர்மாவோ வெறும் 16 போட்டிகளில் 6 சதங்களை விளாசியுள்ளார்.

மேலும் ஒரே உலகக் கோப்பைத் தொடரில் 600 ரன்கள் அடித்த 4வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ரோகித். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், மேத்யூ ஹைடன் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் மட்டும்தான் அந்தச் சாதனையைப் புரிந்திருந்தனர்.

இதுவரை உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா 16 ஆட்டங்களில் விளையாடி மொத்தமாக 977 ரன்களை குவித்துள்ளார். இன்னும் 23 ரன்கள் எடுத்தால் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் விரைவாக எடுத்தவர் என்ற சாதனையை நிகழ்த்துவார். இதற்கு முன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 25 ஆட்டங்களில் எடுத்ததே தற்போதைய சாதனையாக உள்ளது.

எனவே, இதுவரை நடந்த போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைத்த ரோஹித், நாளை நடக்க இருக்கும் போட்டியிலும் சாதனையையும் நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.