Sports

உலக கோப்பை 2019 : வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து !

12வது உலககோப்பை தொடரின் முதல் ஆட்டம் இங்கிலாந்து நாட்டின் ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணியின் கேப்டன் டுபிளசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களான பேர்ஸ்டவ் மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் களமிறங்கினர்.

முதல் ஓவரை சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாகீர் வீசினார். அவர் வீசிய இரண்டாவது பந்திலேயே பேர்ஸ்டவ் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ஜோ ரூட் களமிறங்கினார். ஜேசன் ராய் மற்றும் ஜோ ரூட் இருவரும் இணைந்து அணியின் சூழ்நிலை உணர்ந்து சிறப்பாக ஆடினர். அவ்வபோது பந்துகளை பவுண்டரிகள் விளாசியும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அரைசதத்தை கடந்த பின்னர் ராய் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ரூட்டும் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு மோர்கன் மற்றும் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடத் துவங்கினர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் குவித்தனர். மோர்கன் 60 ரன்கள் குவித்த நிலையில் தாகீர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பட்லர், மொயின் அலி மற்றும் வோக்ஸ் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தநர். இருப்பினும், மறுமுனையில் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 89 ரன்களுக்கு அட்டமிழந்தார். இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. தென்னாப்ரிக்க அணி சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டும், தாகீர் மற்றும் ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்ரிக்க அணியின் துவக்க வீரர்கள் களமிறங்கினர். சிறிது நேரத்திலேயே ஆர்ச்சர் வீசிய பந்தில் ஆம்லா காயமாகி ரிடையர்டு ஆனார். அடுத்து களமிறங்கிய மார்க்ரம் 11 ரன்னிலும், கேப்டன் டூ பிளசிஸ் 5 ரன்னிலும் ஆர்ச்சர் பந்தில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் களமிறங்கிய வான் டர் துஸன் டீ காக் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். டீ காக் 68 ரன்களில் ப்ளங்கட் பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து அரைசதம் அடித்த துஸனும் ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசியில், தென்னாப்ரிக்க அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்த போட்டியை இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டையும், ப்ளங்கட் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் பேட்டிங் , பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் அசத்திய ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.