Sports
ஒய்வு குறித்து மனம் திறந்த யுவராஜ் சிங்
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் காட்டடி அடித்து 27 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள யுவராஜ் சிங் அரைசதம் அடித்த போதிலும் அணியின் வெற்றிக்கு உதவவில்லை. போட்டி முடிந்தபின் யுவராஜ் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரிஷப் பந்திடம் ஏராளமான திறமைகள் இருக்கின்றன. எதிர்காலத்தில் மிகச்சிறந்த வீரராக உருவாகுவார், அதனால் அவரை நாம்(பிசிசிஐ) வளர்க்கும்போது பாதுகாப்பாக அவரை வழிநடத்த வேண்டும். உலகக் கோப்பைப் போட்டியில் ரிஷப் பந்த் இடம் பெறுவாரா என எனக்குத் தெரியாது. ஆனால் இன்றைய ரிஷப் பந்த்தின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது.கடந்த ஐபிஎல் சீசனிலும் ரிஷப் பந்த் மிகச் சிறப்பாக விளையாடினார். இந்திய அணியில் இடம் பெற்று டெஸ்ட் போட்டிகளிலும் நன்றாக பேட் செய்தார். 21 வயதில் இந்திய அணியில் இடம் பெற்று வெளிநாடுகளில் சதம் அடிப்பது என்பது சாதரண செயல் அல்ல. அவருக்கு மிக்சிசிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.
இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா விரைவாக ஆட்டமிழந்ததுதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஏனென்றால், மிகப்பெரிய இலக்கை விரட்டும்போது, ரோஹித் அணியில் இருப்பது தார்மீக ஆதரவு தரும். டீகாக், பொலார்ட் ஆகியோர் நன்றாக பேட்செய்தபோதிலும் விரைவாக விக்கெட்டுகளை இழந்துவிட்டார்கள். எனக்கும் சரி, மற்றவீரர்களுக்கும் நீண்டநேரம் நிலைத்து இருக்கும் வகையில் பாட்னர்ஷிப் அமையாதது மிகப்பெரிய குறை. நல்ல பாட்னர்ஷிப் அமைந்திருந்தால், போட்டி மிகவும் நெருக்கடியாகச் சென்றிருக்கும்.
யுவராஜ் சிங்கிடம் நிருபர்கள் ஓய்வு குறித்து எண்ணம் உண்டா எனக் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு யுவராஜ் சிங் பதில் அளிக்கையில், " சரியான நேரம் வரும்போது, ஓய்வு அறிவிப்பை நான்தான் முதலில் அறிவிப்பேன். யாரும் என் ஓய்வு குறித்து எனக்கு யாரும் நெருக்கடி கொடுக்காதவகையில் ஓய்வை அறிவிப்பேன்.
கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்து வருகின்றன. இதனால், தெளிவான முடிவு எடுக்கமுடியாமல் நான் இருந்து வருகிறேன்.எனக்கு நானே ஆய்வு செய்து கொண்டதில் இன்னும் சில காலம் கிரிக்கெட் போட்டியில் விளையாடலாம் என எனக்குத் தோன்றியது. எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி அதை அனுபவித்து விளையாடுவேன். தேசிய கிரிக்கெட் அணியை பற்றி நான் நினைக்கவில்லை.நான் 14 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறேன். கிரிக்கெட் விளையாட்டை அனுபவித்து, நேசித்து வருகிறேன். என்னுடைய ஓய்வு குறித்து குழப்பமான சூழல் இருந்தபோது, நான் சச்சினுடன் பேசினேன். அப்போது பல்வேறுவிதமான தெளிவான விஷயங்கள், ஆலோசனைகள் எனக்கு கிடைத்தன "
இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்தார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!