Politics

எதற்காகக் கல்தூணில் தீபம்? - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விடாப்பிடியாக இருக்கும் உச்சநீதிமன்றம்!

இந்தியா உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு என அடையாளப்படுத்தப்பட்டாலும், மதச்சார்பற்ற நாடு எனப் பெருமைப்பட்டுக் கொண்டாலும், இவற்றிற்கு நேரெதிராக ஒருவிதமான சர்வாதிகாரம் மக்களை வாட்டி வதைப்பது நின்றபாடில்லை.

உத்தரப் பிரதேசத்தில் தகுந்த காரணங்களும் ஆதாரங்களும் இல்லாதபோதிலும், மதச்சார்புடன் பாபர் மசூதி தகர்க்கப்பட்டு, அதே இடத்தில் இராமர் கோயில் நிறுவப்பட்டது.

அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் மதச்சார்பின்றிச் செயல்பட வேண்டிய உச்சநீதிமன்றமே, இராமர் கோயில் நிறுவப்பட்டதற்குக் காரணமாகவும் அமைந்தது.

அதே இடத்தில் ஓர் இராமர் கோயில் இருந்து, அந்த இடத்தில்தான் மசூதி கட்ட வேண்டும் என்ற வாதம் எழுந்திருந்தால், அதை நீதித்துறை நிறைவேற்றியிருக்குமா என்பது இன்றளவும் கேள்விக்குறியே...

இப்படியான சூழலும், அது உண்டாக்கிய வடுவும் இந்திய வரலாற்றில் இன்றளவும் மறையாத வேளையில், மதப் பாகுபாட்டிற்கும் மத வேறுபாட்டிற்கும் இடமளிக்காமல் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் மீது சர்வாதிகாரப் பாய்ச்சல் விழுந்திருக்கிறது.

எப்படியாவது மக்களைப் பிரித்து, அதில் குளிர்காய்ந்து, ஆட்சியைப் பிடித்துவிட பா.ஜ.க. தமிழ்நாட்டில் விடாப்பிடியாகக் காலூன்ற முயற்சிக்கும் வேளையில், அது கையில் எடுத்த பிரச்சாரக் கருவிதான், திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற வாதம்.

இந்த வாதத்தைத் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகமும் ஏற்கவில்லை; அப்பகுதி மக்களும் ஏற்கவில்லை. காரணம், ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கைநீட்டிக் காட்டும் அந்தக் கல்தூணின் அருகே தர்கா இருப்பதுதான்.

வேண்டுமென்றே ஒரு பிரிவினரைக் காயப்படுத்தி, மற்றொரு பிரிவினரைக் குளிர்விக்கும் போக்காக இது இருப்பதால்தான், பலரும் இதனை ஏற்கவில்லை.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் காரணமற்ற வாதத்தை ஏற்பதுபோல், கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவில்லை. இதனால் எந்த மதத்தினரும் காயமடையவில்லை.

மாறாக, நீதித்துறையும் பிரிவினைவாதிகளும்தான் காயமடைந்துள்ளனர். அதனால், தற்போது கோயில் நிர்வாகக் குழுவைக் கலைத்து, "கோயிலில் எரியும் தீபத்தை எடுத்துக்கொண்டு போய்க் கல்தூணில் ஏற்றுங்கள்" எனப் பகிரங்கமான தாக்குதல் நடத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

இது, தமிழ்நாட்டை அடுத்த உத்தரப் பிரதேசமாக மாற்றும் முயற்சியின் முதற்படியாக அமைந்துள்ளது. குறிப்பாக, அந்தக் கல்தூண் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள மசூதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் அனைத்து இடங்களிலும் விளக்கேற்றவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை யார் கேட்பது?

திருப்பரங்குன்றம் கல்தூணில் கண்டிப்பாகத் தீபம் ஏற்ற வேண்டும் என வாதிடுவது யார்?

திருப்பரங்குன்றம் மக்களா? திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகமா? தமிழ்நாட்டு மக்களா? தமிழ்நாடு அரசா?

யாருமில்லை. பிரிவினையை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வினரும் அவர்களது கூட்டணியினரும்தான். 1% பிரிவினைவாதிகளைக் குளிர்விக்கும் இந்தத் தீர்ப்பு, 99% மக்களைக் காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது எனப் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “முதலமைச்சர் விஜய் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?” : கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!