Politics
அதிகாரிகள் முன்னிலையில் தவெக அமைச்சர்களின் அரசியல் தாக்குதல்.. ஆரோக்கியமான மரபா? : இ.பரந்தாமன் கேள்வி!
தவெக ஆட்சியில் அமைச்சர்களின் செய்தியாளர்கள் சந்திப்பில், அரசியல் ரீதியாகவும் கருத்துகள், விமர்சனங்கள் வைக்கப்படும்போது அதிகாரிகள் உடன் இருப்பதும் வாடிக்கையாகியுள்ளது.
இது அரசியலுக்குள் அதிகாரிகளை உள்ளிழுப்பதும் அவர்களும் அதற்கு உடந்தையாக இருப்பதுபோன்ற சூழலை உருவாக்குகிறது. இதுகுறித்து பதிவிட்டுள்ள திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் அவர்கள்,
முரசொலி படித்தால் அறிவாளிகளா?
என்றால் முரசொலி படித்தவர்கள் அரசியல் தெளிவானவர்களே!
தவெக அமைச்சர்கள் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் நடக்கும் பிரஸ் மீட்டுகளில் எதிர்க் கட்சிகளை குறி வைத்து அரசியல் பேசுவதும் பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பது தொடர்கதையாகி கொண்டிருக்கிறது.
அந்த பத்திரிகையாளர் சந்திப்புகளில் அமைச்சர்களுக்கு இருபுறமும் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்திருக்கிறார்கள். அரசியல் குறித்தான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கும் போது, அதிகாரிகள் அங்கே இருக்க வேண்டியதில்லை.
புத்தக கொள்முதல் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் பேட்டி அளித்த போது ’ஆண்மை இருந்தால்’ என்ற சொல்லாடலை பயன்படுத்தினார். அப்போது பெண் அதிகாரிகள் அருகில் இருந்தார்கள். இப்படியான நிகழ்வுகளை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.
’ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ செயல்படாமல் முழுமையான நடுநிலைமையைக் கடைப்பிடிப்பது கட்டாயம்’ என்கிறது அகில இந்திய பணிகள் நடத்தை விதிகள். அரசு நிர்வாகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பங்கு மற்றும் அரசியல் நடுநிலைமை குறித்து அதில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.
அரசின் திட்டங்கள், நிர்வாக ரீதியான விளக்கங்களை அளிக்கும் செய்தியாளர் சந்திப்புகளில் அமைச்சர்களுக்கு உதவியாக அதிகாரிகள் பங்கேற்பது சரி. ஆனால், எதிர்க் கட்சிகளைத் தாக்கும் முழுமையான அரசியல் மேடையாக அந்த செய்தியாளர் சந்திப்புகள் மாறும் போது, அரசு அதிகாரிகள் அமர்ந்திருப்பது நிர்வாக நடுநிலைமைக்கு எதிரானது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகள் சான்றிதழ் வழங்குவது போல நடந்துவிடக் கூடாது.
அரசுத் துறை சார்ந்த தரவுகளை மட்டும் அதிகாரிகள் விளக்கிவிட்டு வெளியேறுவதும், அரசியல் ரீதியான பதில்களை அமைச்சர்கள் தனியாக வழங்குவதுமே ஆரோக்கியமான ஜனநாயக மரபாகும். அரசியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் இடங்களில் அதிகாரிகள் இருப்பது, அரசு இயந்திரம் ஒரு சார்பாகச் செயல்படுகிறதோ என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பிவிடும்.
அமைச்சர்களின் அரசியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்க் கட்சிகள் நீதிமன்றத்தை நாடினால், அந்த நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகளும் வழக்கில் தேவையில்லாமல் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டுவிடும். இப்படியான அவதூறு வழக்குகளில் நிகழ்வு நடந்த போது உடன் இருந்தவர்களுக்கும் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“டெல்டா விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத த.வெ.க அரசு” : 7 பேர் கொண்ட குழு அமைத்த தி.மு.க தலைவர்!
-
“ஜனநாயகன் படத்திற்கு நிதி பெற்றதால்தான் மௌனமாக இருக்கிறீர்களா?” - விஜய்க்கு அப்பாவு கேள்வி!
-
“கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
“மழை பெய்வது மட்டுமே நீர் நெருக்கடிக்குத் தீர்வாகிவிடாது”: தவெக அரசுக்கு எச்சரிக்கை செய்யும் ஜவாஹிருல்லா!
-
“Reels-க்கும் Views-க்கும் ஆட்சி நடத்தும் போலிகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!