Politics

காலங்கள் மாறினாலும்... காங்கிரசின் துரோக குணம் மட்டும் மாறவில்லையே! : தயாநிதி மாறன் எம்.பி கண்டனம்!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் அடிப்படை உரிமைகளை சர்வாதிகாரப் போக்குடன் ஒடுக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தை அம்பலப்படுத்த, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக த.வெ.க. அரசு நீக்கியுள்ளது.

இதற்கு மாநிலம் முழுவதும் உள்ள மாநில நலன் கருதும் கட்சிகள், இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மாநில சுயாட்சிக்கு எதிரான மனநிலை கொண்ட காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.

இதனைக் கண்டித்து, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்ததாவது,

காலங்கள் மாறினாலும் காங்கிரசின் துரோக குணம் மட்டும் மாறவில்லையே!

மாநிலக் கட்சிகளின் எழுச்சிக்குப் பிறகு, தனது எதேச்சாதிகார மனப்பான்மையைக் கைவிட்டதுபோல் நடித்து வந்த காங்கிரஸ், தற்போது தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஒன்றிய - மாநில உறவுகளை ஆராய நமது திராவிட மாடல் அரசால் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டதை வரவேற்பதன் மூலம், மாநில உரிமைகள் குறித்த தனது உண்மையான நிலைப்பாட்டைக் காங்கிரஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

இதே குழுவின் அறிக்கையின் முதல் பாகத்தைப் பாராட்டிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு இனித்த அந்த அறிக்கை, இப்போது காங்கிரசுக்கு வேம்பாய்க் கசப்பதன் மர்மம் என்ன?

கூடிக் குலாவி முதுகில் குத்தும் காங்கிரசின் இரட்டை வேடத்தையும், மாநில உரிமைகளுக்குச் செய்யும் துரோகத்தையும் நாமும் நாட்டு மக்களும் மறந்துவிடக் கூடாது!

Also Read: ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்துவதுதான் ‘தூயசக்தி’ அரசியலா? : முரசொலி தலையங்கம் கடும் கண்டனம்!