Politics

“காவல்நிலையங்களே அச்சுறுத்தலாவதா? மனித உரிமை என்னாயிற்று?” : ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி அமைந்தது முதல் காவல் மரணங்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனை எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கடுமையாகக் கண்டித்தும், இதுவரை த.வெ.க. அரசால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் மேலும் ஒரு காவல் மரணம் அரங்கேறியுள்ளது. இதனைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

“தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவர் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்து சென்ற நிலையில், அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு அங்கேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

காவல் நிலையத்துக்குள்ளேயே மரணம் (Lockup Death), சிறைச்சாலைக்குள் சந்தேக மரணம் (Custodial Death) என்பவை எல்லாம் அடிக்கடி நடைபெறுகின்றன.

மக்களின் பாதுகாப்புக்கும், உயிருக்கும் காவல்நிலையங்களே அச்சுறுத்தலாவதா? மனித உரிமை என்னாயிற்று?

நடந்த கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடிய குடும்பத்தவரை, உறவினர்களைக் கைது செய்வது அதைவிடக் கொடுமையல்லவா?

உடனடியாக அவர்களை விடுதலை செய்வதுடன், யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லாமல், முறையான விசாரணை நடைபெற வேண்டும்.

தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் இத்தகு கொடுமைகளுக்கு தீர்க்கமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.”

Also Read: “மேகதாது என்பது படமல்ல; கோடிக்கணக்கான தமிழ்மக்களின் வாழ்வாதாரம்!” : முரசொலி தலையங்கம் அறிவுறுத்தல்!