Politics

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயப் பணியிட மாற்றம்... டாஸ்மாக் ஊழியர்களை பழிவாங்க துடிக்கும் த.வெ.க அரசு!

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதற்கு உரிய தீர்வளிக்காமல் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயப் பணியிட மாற்றம் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது த.வெ.க அரசு.

தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி அமைந்தது முதல் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு வகைகளில் வஞ்சிக்கப்படுகிறார்கள். இதனால், ஊழியர்களிடையே த.வெ.க அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்துள்ளது.

மதுபாட்டில்களை ஸ்கேன் செய்வது, திரும்பப் பெறுவது, சரிபார்ப்பது, சேமித்து வைப்பது போன்ற பணிகளையும் மதுபான விற்பனையுடன் சேர்த்துச் செய்ய வேண்டும் என்ற கூடுதல் பணிச்சுமைக்கு ஏற்றாற்போல், போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள், ஸ்கேனிங் கருவிகள், சேமிப்பு வசதிகள் இல்லாததும் டாஸ்மாக் பணியாளர்களின் எதிர்ப்புக்கு முக்கியக் காரணம்.

இதுதவிர, ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதுபானம் வாங்கினால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டாயம் என்ற நடைமுறையும் ஊழியர்களின் பணிச்சுமையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சினைகளால் நவம்பர் 1, 2-ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அமைச்சர் விக்னேஷ், “போராட்டம் நீடித்தால் டாஸ்மாக் தனியார்மயம் ஆகும்” என்று எச்சரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

“டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துகிறோம்; அவர்களுடன் அரசு துணை நிற்கும்” என்பதான பிம்பத்தை உருவாக்கிய த.வெ.க-வின் முகத்திரை இதன் வழி கிழிந்துவருகிறது.

இப்படியான சூழலில், ஒரே கடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் கட்டாயமாகப் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்ற புதிய கொள்கையை டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

நவம்பர் 30-ஆம் தேதிக்குள் முதற்கட்ட இடமாற்றத்தைச் செய்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், பணியிட மாறுதல் என்று மிரட்டுவதால் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?

போராடுகிறார்கள் என்பதற்காக டாஸ்மாக் ஊழியர்களைப் பழிவாங்குவது போல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் த.வெ.க அரசின் நடவடிக்கை டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்நிலையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Also Read: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம்! : முழு விவரம் உள்ளே!