Politics
“மாநில சுயாட்சிக்கு இழைக்கப்பட்டுள்ள பெரும் பின்னடைவு!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
“ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைக் கலைத்தது கூட்டாட்சிக் கருத்தியலுக்கும் மாநில சுயாட்சிக்கான வரலாற்றுச் செயல்பாடுகளுக்கும் இழைக்கப்பட்டுள்ள பெரும் பின்னடைவு!” எனத் தெரிவித்து உயர்நிலைக் குழுவின் தலைவர் நீதியரசர் குரியன் ஜோசப் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு,
ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக, கடந்த 2025 ஏப்ரல் மாதம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை, தற்போதைய தமிழ்நாடு அரசு திடீரெனக் கலைத்திருப்பதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆழ்ந்த வேதனையையும் கடும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இக்குழுவின் தலைவரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப், உறுப்பினர்களான இந்தியக் கடல்சார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே. அசோக் வர்தன் ஷெட்டி, இ.ஆ.ப. (ஓய்வு), தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் ஆகிய மூவருக்கும் அவர் எழுதியுள்ள விரிவான கடிதத்தில், அவர்களது அர்ப்பணிப்புமிக்க பணிகளுக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியக் கூட்டாட்சிக் கருத்தியலின் எதிர்காலத்திற்கே முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆய்வுப் பணியை, அதன் நிறைவுக்குச் சில மாதங்களே எஞ்சியிருந்த நிலையில் முடிவுக்குக் கொண்டுவந்துள்ள தற்போதைய அரசின் முடிவை எந்தவிதமான அறிவுசார் அல்லது நிர்வாகக் காரணங்களாலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநில சுயாட்சிக்கான தமிழ்நாட்டின் வரலாற்றுப் பயணம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே அமைத்த இராஜமன்னார் குழு, இந்தியாவில் மாநில சுயாட்சி குறித்த விவாதங்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அடித்தளத்தை அமைத்தது.
அந்த வரலாற்றின் தொடர்ச்சியாகவே, மாறிவரும் அரசியல், நிர்வாக மற்றும் அரசமைப்புச் சட்டச் சூழலில் ஒன்றிய - மாநில உறவுகளை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதை உணர்ந்து, 2025 ஏப்ரல் மாதம் உயர்நிலைக் குழுவை அமைத்ததாகத் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது வழக்கமான நிர்வாக நடவடிக்கையோ, குறிப்பிட்ட ஓர் அரசின் கொள்கை சார்ந்த முயற்சியோ மட்டுமல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தன்மையை வலுப்படுத்தவும், மாநிலங்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதல் அறிக்கை: அரசமைப்புச் சட்ட ஆய்வில் மகத்தான பங்களிப்பு!
உயர்நிலைக் குழு தனது அறிக்கையின் முதல் பகுதியை 2026 பிப்ரவரி 16 அன்று சமர்ப்பித்தது.
அரசமைப்புச் சட்டத்தின் வரலாறு, ஒன்றிய - மாநில உறவுகளின் பரிணாமம், இந்தியாவின் பன்முகத்தன்மை, ஜனநாயக விழுமியங்கள் ஆகியவற்றை ஆழமாக ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை, வெறும் பரிந்துரைகளின் தொகுப்பாக இல்லாமல், மிக உயர்ந்த அறிவுசார் ஆய்வுப் படைப்பாக அமைந்திருந்ததாகக் கழகத் தலைவர் அவர்கள் பாராட்டியுள்ளார்.
அரசமைப்புச் சட்ட அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அரசியல் தலைவர்கள், கூட்டாட்சிக் கருத்தியலைப் பயிலும் மாணவர்கள் எனப் பல தலைமுறையினருக்கும் அந்த அறிக்கை முக்கியமான ஆய்வு ஆவணமாக விளங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு விரிவான அறிக்கையை உருவாக்குவதற்காக, குழுவின் உறுப்பினர்கள் நாளொன்றுக்குப் பன்னிரண்டு முதல் பதினான்கு மணி நேரம் வரை ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டதையும், அரசமைப்புச் சட்டப் பிரிவுகள், வரலாற்று ஆவணங்கள், பல்வேறு ஆய்வுகள் ஆகியவற்றை நுணுக்கமாக ஆராய்ந்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்குத் தயாரானபோதுகூட, இந்த அறிக்கைக்காக மேற்கொண்ட அளவிற்கு விரிவான வாசிப்பிலும் ஆய்விலும் ஈடுபடவில்லை என்று அசோக் வர்தன் ஷெட்டி அவர்கள் தெரிவித்திருந்ததைத் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள், குழுவினரின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்ட இதைவிடச் சிறந்த சான்று தேவையில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆளுமைகளின் அர்ப்பணிப்புக்குப் பாராட்டு!
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களின் நீண்ட நெடிய நீதித்துறை அனுபவமும், அரசமைப்புச் சட்டம் குறித்த ஆழ்ந்த அறிவும், தனிப்பட்ட நேர்மையும் உயர்நிலைக் குழுவின் பணிகளுக்குப் பெரும் நம்பகத்தன்மையை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அசோக் வர்தன் ஷெட்டி அவர்களின் நிர்வாக அனுபவம், ஆய்வுத் திறன், நுணுக்கமான தரவுகளை ஆராயும் ஆற்றல் ஆகியவை அறிக்கையின் தரத்தை மேலும் உயர்த்தியதாகவும் பாராட்டியுள்ளார்.
பேராசிரியர்மு. நாகநாதன் அவர்களின் சமூகநீதி, மாநில சுயாட்சி, தமிழ்நாட்டின் முற்போக்கு அரசியல் சிந்தனைகள் குறித்த நீண்டகால அனுபவமும் கொள்கைப் பற்றும் குழுவிற்கு உதவியதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும் அசோக் வர்தன் ஷெட்டி அவர்களும் தம்முடைய அழைப்பைத் தொடக்கத்தில் இருமுறை ஏற்க மறுத்தபோதும், பின்னர் இந்த வரலாற்றுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை நினைவுகூர்ந்துள்ளார்.
இத்தகைய சிறப்புமிக்க ஆளுமைகளிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தது தமக்கு மிகுந்த மனநிறைவையும் பெருமையையும் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அலுவலர்களின் உழைப்புக்கும் அங்கீகாரம்!
குழுவின் உறுப்பினர்கள் மட்டுமின்றி, அவர்களுடன் இணைந்து பணியாற்றிய ஆய்வு அறிஞர்கள், ஆய்வு உதவியாளர்கள், அலுவலர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
அரசமைப்புச் சட்டம் தொடர்பான சிக்கலான சட்டக் கருத்துகளும் ஆழமான ஆய்வு முடிவுகளும் நிறைந்த அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்ப்பது மிகுந்த கவனமும் நிபுணத்துவமும் தேவைப்படும் பணியாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, நாட்டின் முன்னணிச் சட்டக் கல்வி நிறுவனங்களில் பயின்று, இக்குழுவின் ஆய்வுப் பணிகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட ஐந்து இளம் ஆய்வாளர்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்துத் தனிப்பட்ட கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
2027 மே மாதத்தில் அறிக்கையின் இரண்டாம் பகுதி நிறைவடையும் என்ற எதிர்பார்ப்பில் தங்களது பணிகளைத் திட்டமிட்டு, முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த அந்த இளம் ஆய்வாளர்களின் தொழில்முறை எதிர்காலமும், அவர்களது பணித் தொடர்ச்சியும் அரசின் திடீர் முடிவால் பாதிக்கப்பட்டிருப்பதைப் புறக்கணிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிகளைக் கடந்து தேசிய அளவில் பாராட்டைப் பெற்ற அறிக்கை!
உயர்நிலைக் குழுவின் முதல் அறிக்கை தமிழ்நாட்டைக் கடந்து, தேசிய அளவில் மிகுந்த கவனத்தையும் வரவேற்பையும் பெற்றதைத் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, அரசியல் எல்லைகளைக் கடந்து பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்கள் ஜுவல் ஓரம், தோகன் சாஹு மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோரிடமிருந்தும் பாராட்டுகள் கிடைத்ததை நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், மூத்த சட்ட வல்லுநர் ராஜீவ் தவான், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஜே.செலமேஸ்வர், முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, மூத்த அரசியல் தலைவர் மணிசங்கர் அய்யர் உள்ளிட்ட பலரும் அறிக்கையின் ஆய்வுத் தரத்தையும் அரசமைப்புச் சட்ட முக்கியத்துவத்தையும் பாராட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
அன்றைய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அவர்களும் இம்முயற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் குறித்த புதிய தேசிய அளவிலான விவாதம் அவசியம் என்பதை வலியுறுத்தியதை அவர் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் முயற்சியாகத் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு, இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் குறித்த தேசிய விவாதங்களுக்கே முக்கியமான பங்களிப்பாக வளர்ந்திருந்தது என்பதே உயர்நிலைக் குழுவின் மிகப்பெரிய சாதனை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் பகுதி நிறைவடைய ஆறு மாதங்களே இருந்த நிலையில் குழுவைக் கலைப்பதா?
உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் இரண்டாம் பகுதி 2027 மே மாதத்தில் நிறைவடையத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஆறு மாதங்களே எஞ்சியிருந்தபோது தற்போதைய தமிழ்நாடு அரசு குழுவைக் கலைத்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முதல் பகுதி தேசிய அளவில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை உருவாக்கியிருந்த நிலையில், இரண்டாம் பகுதியின் கணிசமான ஆய்வுப் பணிகளும் ஏற்கெனவே நிறைவடைந்திருந்த சூழலில், இத்தகைய முடிவை மேற்கொண்டிருப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜமன்னார் குழுவின் அறிக்கை மாநில சுயாட்சி வரலாற்றில் எவ்வாறு ஒரு மைல்கல்லாக அமைந்ததோ, அதேபோன்று இந்த உயர்நிலைக் குழுவின் முழுமையான அறிக்கையும் இந்தியக் கூட்டாட்சிக் கருத்தியலின் எதிர்கால விவாதங்களில் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பாக அமைந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தனது உரிமைகளுக்காக மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் மாநிலம் என்பதை இந்த ஆய்வு மீண்டும் நிலைநாட்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலச் சட்ட ஆணையத்தின் பணிகளுடன் ஒத்துப்போவதாகக் கூறுவது ஏற்க முடியாத விளக்கம்!
உயர்நிலைக் குழுவின் பணிகளும் மாநிலச் சட்ட ஆணையத்தின் பணிகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போவதாகக் கூறி, குழுவைக் கலைக்கும் முடிவை நியாயப்படுத்த முடியாது எனத் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாநிலச் சட்ட ஆணையமும் அரசாணையின் மூலமாக அமைக்கப்பட்ட ஓர் அமைப்புதான் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இரு அமைப்புகளுக்கும் இடையே செயற்கையான வேறுபாட்டைக் காட்டி, இத்தகைய ஆழமான ஆய்வுப் பணியைப் பாதியிலேயே கைவிடுவது நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, அறிக்கையின் இரண்டாம் பகுதிக்கான கணிசமான பணிகள் நிறைவடைந்திருந்த நிலையில், அவற்றைத் தொடர அனுமதிக்காமல் முடிவுக்குக் கொண்டுவருவது அறிவுசார் வளங்களையும், அனுபவத்தையும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட உழைப்பையும் வீணடிக்கும் செயல் என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதனை விளக்குவதற்காகத் தனது கடிதத்தில் ஓர் உவமையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மருத்துவமனையின் நிர்வாகம் மாறிவிட்டது என்பதற்காக, மிகவும் சிக்கலான அறுவைச் சிகிச்சையின் நடுவே, அதனை மேற்கொண்டிருக்கும் அனுபவமிக்க மருத்துவக் குழுவை மாற்றுவது எவ்வளவு பொருத்தமற்றதோ, அதேபோன்றதுதான் இந்த உயர்நிலைக் குழுவைக் கலைத்திருக்கும் முடிவும் என அவர் ஒப்பிட்டுள்ளார்.
ஓர் ஆய்வின் வெற்றிகரமான நிறைவுக்கு அவசியமான அனுபவம், தொடர்ச்சி, தயாரிப்பு, ஒருங்கிணைந்த புரிதல் ஆகியவற்றை ஓர் அரசாணையின் மூலம் எளிதாக மாற்றீடு செய்துவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
குழுவைக் கலைக்கலாம்; அதன் சிந்தனைகளையும் பங்களிப்புகளையும் அழிக்க முடியாது!
அரசின் திடீர் முடிவு, குழு உறுப்பினர்களுக்கு எத்தகைய மனவேதனையை ஏற்படுத்தியிருக்கும் என்பதைத் தம்மால் உணர முடிவதாக மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்குழுவை அமைத்தவர் என்ற முறையில் மட்டுமின்றி, அதன் உறுப்பினர்களின் நேர்மையையும் அர்ப்பணிப்பையும் நேரடியாக அறிந்தவர் என்ற முறையிலும் அவர்களது ஏமாற்றத்தையும் வேதனையையும் தாம் பகிர்ந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், ஓர் அரசாணையால் ஓர் அமைப்பைக் கலைத்துவிட மட்டுமே முடியும்; ஆனால், அந்த அமைப்பு உருவாக்கிய சிந்தனைகளையும், எழுப்பிய கேள்விகளையும், சமூகத்திற்கு வழங்கிய அறிவுசார் பங்களிப்புகளையும் ஒருபோதும் அழித்துவிட முடியாது என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சிறப்புமிக்க ஆளுமைகளைக் கொண்ட குழுவைக் கலைத்து, அரசமைப்புச் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுப் பணியை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம், நாட்டின் அரசமைப்புச் சட்ட எதிர்காலத்திற்கு மேலும் பங்களிக்கும் அரிய வாய்ப்பைத் தற்போதைய அரசு இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசு தனது முடிவின் கடுமையான தவறை விரைவிலோ, சற்றுத் தாமதமாகவோ உணர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசுகள் மாறலாம்; குழுக்கள் கலைக்கப்படலாம்; ஆனால், வரலாற்றுப் பங்களிப்புகள் நிலைத்திருக்கும்!
கடிதத்தின் நிறைவில், உயர்நிலைக் குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கும் தமது ஆழ்ந்த மரியாதையையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியைத் தொடங்கியதில் தமக்குப் பெருமை இருப்பதாகவும், அதைவிடப் பெருமை அதன் உறுப்பினர்கள் சாதித்திருப்பவற்றில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசுகள் மாறலாம்; குழுக்கள் கலைக்கப்படலாம். ஆனால், இந்தியக் கூட்டாட்சிக் கருத்தியலுக்கும் மாநில சுயாட்சிக்கும் இக்குழுவினர் ஆற்றியுள்ள அறிவுசார் பங்களிப்பு காலத்தால் அழியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநில உரிமைகளுக்காகவும் கூட்டாட்சிக் கருத்தியலுக்காகவும் தமிழ்நாடு முன்னெடுத்துள்ள வரலாற்றுப் பயணத்தில், இந்த உயர்நிலைக் குழுவின் முதல் அறிக்கை என்றென்றும் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் என்பதையும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், தமது கடிதத்தின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
தீபாவளி நாளில் கொடூரம்... காவல் அதிகாரி படுகொலை! : த.வெ.க ஆட்சியில் தினம் தினம் திக்! திக்!
-
கேடுகெட்ட தவெக ஆட்சிக்கு இது தலை தீபாவளி.. தமிழ்நாட்டு மக்களுக்கு கொலை தீபாவளி.! : திமுக கடும் கண்டனம்!
-
தீபாவளி நாளில் கொலைச் சம்பவங்கள்.. துக்க நாளான பண்டிகை நாள்!
-
“பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம்” : தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்!
-
சென்னை மக்களே.. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு : முழு விவரம் உள்ளே!