Politics

படுதோல்வியை சந்தித்த டிரம்பின் குடியரசுக் கட்சி - ‘செனட்’டைக் கைப்பற்றி, ஜனநாயகக் கட்சி வரலாற்று வெற்றி!

உலக நாடுகளை அமெரிக்காவில் இருந்தே இயக்கலாம் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் வல்லாதிக்க மனநிலையால், உலகளாவிய பொருளாதாரம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.

காசாவில் ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் இஸ்ரேல் ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்ட வேளையில், இஸ்ரேலுடன் கைக்கோர்த்துவிட்டு, அமைத்திக்கான ‘நோபல் பரிசு’ வேண்டும் என அடம்பிடிக்கும் டிரம்ப், பிற நாடுகளின் மீது நடத்தும் தாக்குதல்களால், தமிழ்நாட்டு மக்களும் பல்வேறு பொருளாதார இடர்பாடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

உலகளவில் விலைவாசி வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளதிலும், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால், உலக நாடுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளானதிலும், அமெரிக்க அதிபரின் பங்கு இருப்பதை யாரும் மறுத்திட முடியாது.

இதனால், உண்டான தாக்கம் அமெரிக்க மக்களையும் விட்டுவைக்கவில்லை. அதன் காரணமாக, டிரம்பின் நிர்வாகத்தன்மையைக் கண்டித்து, தேசிய அளவில் அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த எதிர்ப்புக் குரல், வாக்குகளில் எதிரொலித்து தற்போது அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் மூலம் டிரம்பிற்கு தோல்வியைத் தேடித்தந்துள்ளது.

குடியரசுக் கட்சியின் ஆதரவு அதிகமுள்ள இடங்களாக கருதப்படும் தென் கரோலினா, டெக்சாஸ், கன்சாஸ் உள்ளிட்ட இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. அதிபர் டிரம்பின் சர்வாதிகார போக்கிற்கு மக்கள் அளித்த பதிலடியாக இத்தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

மொத்தமுள்ள 100 செனட் இடங்களில் 35 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது.

இதனால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் சட்டமேலவை எனப்படும் செனட் சபையில் பெரும்பான்மை இடம், தற்போது ஜனநாயகக் கட்சி வசமாகியுள்ளது.

செனட் சபையில் பெரும்பான்மையை இழந்ததால், புதிய சட்டங்களை இனி தனது கட்சி பலத்துடன் டிரம்ப் தன்னிச்சையாக இயற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், டிரம்பின் தோல்விக்கு இந்த முடிவுகள் ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: 16 வயது சிறுமியை காரில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் : தவெக ஆட்சியில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்!