Politics

“தலைகீழாக மாறும் தமிழ்நாட்டின் பொருளாதாரம் !” : வரி வருவாய் சரிவுக்கு, டி.ஆர்.பி.ராஜா கண்டனம்!

தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தனதாக்கிக் கொள்வதையும், தி.மு.க ஆட்சியில் நிறைவுற்றத் திட்டங்களை திறந்துவைப்பதையும் மட்டுமே த.வெ.க அரசு 6 மாதங்களாக செய்து வருகிறது.

தொழில்துறையில் சொல்வதற்கேற்ப எந்த திட்டமும், கடந்த 6 மாதங்களில் புதிதாக செயல்படுத்தப்படவில்லை. இதே நிலைதான், த.வெ.க.வின் ஆட்சி நிர்வாகத்திலும் தொடர்கிறது.

அதன் தாக்கமாக, தமிழ்நாட்டின் வரி வருவாய் தேசிய அளவில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. முன்னணி மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமை, மெல்ல மெல்ல சரியத் தொடங்கியுள்ளது.

இதனைக் கண்டித்து, தி.மு.க முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

“இந்தியாவின் மொத்த உள்நாட்டு ஜி.எஸ்.டி வரி வருவாய் 15.8%-ஆக உயர்ந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி வருவாய் வெறும் 3% தான் உயர்ந்துள்ளது.

ஆந்திராவின் வருவாய் 24 %-ஆகவும், கேரளாவின் வருவாய் 23%-ஆகவும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் முறையே 18%, 14%-ஆகவும் வருவாய் உயர்ந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டிற்கு வெறும் 3% தான்.

முன்று தென் கொரியா நிறுவனங்கள் ஆந்திராவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு, அங்கு ரூ.1,614 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 1,418 வேலைவாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளன. ஆனால், உலக அரங்கில் தமிழ்நாட்டை நோக்கிய முதலீடுகளை ஈர்க்க த.வெ.க அரசு என்ன செய்கிறது?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பொருளாதார மையமாக தமிழ்நாடு திகழ்ந்தது. ஆனால், தற்போது எல்லாம் தலைகீழாகி வருகிறது.”

Also Read: ஒரே நாளில் இரண்டு சிறப்புத் தகுதித் தேர்வுகளா..? ஆசிரியர்களை சோதிக்கும் த.வெ.க அரசு!