Politics
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 31) பேசிய தவெக உறுப்பினர் ஒருவர் கடந்த ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துப் பேசினார். இதற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் நகராட்சித் துறை அமைச்சருமான கே.என். தகுந்த பதிலடியைக் கொடுத்தார்.
இதுகுறித்து பேசிய கே.என்.நேரு, மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த ஆட்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளார்கள். மேயர் நீக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு உள்ளது. எல்லாவற்றிற்கும் கடந்த கால ஆட்சி, கடந்த கால ஆட்சி என்றால் என்ன செய்வது. சரியான நடவடிக்கை எடுத்துள்ளோம் அதனையும் சொல்லுங்கள்.
“மீண்டும் மீண்டும் நாங்கள் உங்களுக்கு சொல்லுவது ஆட்சி, அதிகாரம், காவல்துறை உங்களிடம் தான் உள்ளது. அனைத்து மாநகராட்சிகளிலும் தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள். ஏற்கனவே எங்கள் ஆட்சியில் தவறு நடந்திருந்தால் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாமல் கடந்த ஆட்சி, கடந்த ஆட்சி என குற்றம்சாட்டக் கூடாது” எனக் கூறினார்.
மேலும் வரி விதிப்பு குறித்து பேசும்போது, சென்னை மாநகராட்சியில் வரி மறுசீரமைப்பு செய்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. மற்ற மாவட்டங்களில் 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. 15-வது ஊதியக்குழுவின் உத்தரவுப்படி ஒன்றிய அரசின் நிதி வர வேண்டும் என்றால், வரியை உயர்த்த வேண்டும் எனக்கூறிவிட்டனர். அதன் அடிப்படையில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு வரியை உயர்த்தினோம். முறையாக அரசு சார்பில் செய்ய வேண்டிய பணிகளை செய்துள்ளோம்.
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள். ஒரு வருடம் கழித்து நாங்கள் ஆய்விற்குச் செல்வோம். அப்போது நாங்கள் கேள்வி கேட்போம்.” எனத் தெரிவித்தார்.
“நகராட்சித் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் கால மாற்றத்திற்கேற்ப கடந்த திமுக ஆட்சியில் நிறைவேற்றிக் கொடுத்தோம். மதுரையில் ரூ.5,000 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். பாதாள சாக்கடைத் திட்டம் இல்லை என்று கூறியதும் முன்னாள் முதலமைச்சரிடம் சிறப்பு அனுமதி பெற்று அத்திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளோம்.”
“எதற்கெடுத்தாலும் ஊழல்.. ஊழல் என்று சொல்லக்கூடாது. அதிகாரம் உங்களிடம் உள்ளது. கண்டுபிடித்து ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்” என்றார்.
புதிய ஆட்சி வந்தபிறகு எந்த புதியத் திட்டமும் செயல்படுத்தவில்லை. அதற்கான நிதியும் ஒதுக்கவில்லை. அனைத்து இடங்களிலும் பணிகள் முடங்கியுள்ளது. பணிகள் முடக்கம் காரணமாக கடந்த வாரம் சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து வந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையெல்லாம் முதலில் கவனித்து நடவடிக்கை எடுங்கள் எனக் கூறினார்.
திருச்சி, மல்லாபுரம் ஊராட்சி பற்றி தவறான தகவலை அவையில் கூறி கேள்வி எழுப்பிய அமைச்சர் ரமேசுக்கு பதிலளித்துப் பேசிய கே.என்.நேரு அவர்கள், திருச்சி, மல்லாட்சிபுரம் கிராம ஊராட்சியிலிருந்து, இப்போதுதான் நகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி அங்கு கட்டப்பட்டுள்ளது. மல்லாட்சிபுரம் கிராமத்திற்கு பாதை இல்லை என்று சொல்கிறார்கள். மல்லாட்சிபுரம் முதல் லாலாபேட் வரை அங்கு முழுவதுமாக ரயில்வே இடம். அங்கு கீழ்ப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் என்ன பணி நடந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்து, அதன் பிறகு பேசுங்கள் என்றார்.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!