Politics
“வடமாநிலங்களில் பரவும் முதல்வர் விஜய் ரீல்ஸ்.. ரூ.60,000 வரை பேரம்.. நடவடிக்கை எடுக்குமா ஒன்றிய அரசு”
தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் குறித்து இன்ஸ்டாகிராமில் பல்வேறு பொய்ச்செய்திகளை பரப்பி வட மாநிலங்களில் ரீல்ஸ் அதிகமாக பரவி வருகிறது. இது இந்தியா மட்டுமின்றி, அடுத்த பிரதமர் விஜய் தான் என்பது வரை நீண்டுள்ளது. இதுதான் தற்போது பெரும் விவதாதத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது. இப்படி பரப்பப்படும் ரீல்ஸ்கள் குறித்து உண்மைத்தன்மையை ஆராயாமல் 1 கோடி, 2 கோடி என பார்வையாளர்களைக் கடந்து செல்வதுதான் தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் பற்றி தினகரன் நாளிதழ் ‘முதல்வர் விஜய்யை சிக்கலில் சிக்கவைக்க இஷ்டத்துக்கு ரீல்ஸ் விடும் கும்பல்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை பின்வருமாறு..
காலை எழுந்தவுடன் பல் துலக்குகிறார்களோ இல்லையோ, வடமாநில இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்கள் தமிழ்நாட்டைப் பற்றி ஒரு ‘ரீல்ஸ்’ போட்டுவிட்டுதான் தங்கள் அன்றாடப் பிழைப்பையே தொடங்குகிறார்கள் போல... ‘‘தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது?” என்று இங்குள்ள மக்களுக்கே தினமும் குழப்பம் வரும் நிலையில், வடமாநிலங்களில் கேமரா முன் பேசும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கு மட்டும் நம் ஊர் நிலவரம் அவ்வளவு அத்துப்படியாக இருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் விஜய், மிகப்பெரிய புரட்சிகளையெல்லாம் செய்து முடித்துவிட்டதாக அங்கே தினமும் ஒரு ‘பகீர்’ கிளப்புகிறார்கள். இந்தி இன்ப்ளூயன்சர்கள் அடித்துவிடும் பச்சைப் பொய்களைப் பார்த்து, ‘அடடே நம்ம ஊர்ல இதெல்லாம் நடந்துருச்சா, நமக்குத்தான் நியூஸ் தெரியலையோ’ என நம்மையே ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு அவர்களின் நடிப்பு தத்ரூபமாக இருக்கிறது.
மாற்றம் மாற்றம் என்று இன்ஸ்டாகிராமில் இன்ப்ளூயன்சர்கள் மூலம் இடைவிடாமல் ரீல்ஸ் போட்டு தமிழ்நாட்டு மக்களை குழப்பி அதன் மூலம் ஆட்சிக்கு வந்த கட்சிதானே தவெக. அப்படி மாற்றம் வேண்டிய மக்களுக்கு தவெக இன்றைக்கு ஏமாற்றத்தையே அதிகம் கொடுத்துள்ளது என்பது கள எதார்த்தம். நூறு நாள் ஆட்சியிலேயே மின்சாரக் கட்டணம், அரிசி, காய்கறி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறைபாடு என, தமிழ்நாட்டு மக்கள் பல ஏமாற்றங்களை சந்தித்து வருகின்றனர். ஆனால், இன்ஸ்டாகிராமிலேயே காலை முதல் இரவு வரை பொழுதை கழிப்பவர்களை கேட்டால் தமிழ்நாடு, அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்தை விட மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக கூறுவார்கள்.
அப்படி ஒரு மாயத் தோற்றம் இன்ஸ்டாவில் உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கில் இருந்து வரும் ‘அதிர்ச்சி’ ரீல்ஸ்களில் கூறப்படும் தகவல்களைக் கேட்டால், நமக்கே ஒரு நிமிடம் தலை சுற்றிவிடும். நம்ம ஊரு இன்ப்ளூயன்சர்களின் ரீல்ஸ்களெல்லாம் சாதா ரகம். வடக்கன்ஸ் போடும் ரீல்ஸ் எல்லாமே ஸ்பெஷல் ரகம்தான்.
வடக்கன்களின் இன்ஸ்டா உருட்டுகளின் சாம்பிள்கள்
1. 24 மணி நேரத்தில் தூக்கு அல்லது என்கவுன்ட்டர்! தமிழ்நாட்டில் எந்தப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தாலும், அடுத்த 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அல்லது என்கவுன்ட்டர் என முதல்வர் விஜய் உத்தரவிட்டிருப்பதாக ஒரு தகவல் பரப்பப்படுகிறது.
2. வரி கட்ட மாட்டோம்! பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால், தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு வரி செலுத்தாது என்றும், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நேரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சில ரீல்ஸ்களில் கூறப்படுகிறது.
3. உண்டியல் டூ ஸ்கூல்! கோயில் உண்டியல்களில் கிடைக்கும் காணிக்கைப் பணம் அப்படியே அரசுப் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்படுவதாகவும் சில காணொலிகள் கூறுகின்றன.
4. மசூதி கரண்ட் பில் இலவசம்! மசூதிகள் மற்றும் மதரசாக்களின் மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்துவதாகவும், இதற்காக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சில ரீல்ஸ்கள் கூறுகின்றன.
5. பசு இறைச்சிக்குத் தடை! தமிழ்நாட்டில் இனி மாடுகளை வெட்டக் கூடாது என்றும், பசு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டதாகவும் மற்றொரு தகவல் பரவுகிறது. இந்த தகவல்களில் பலவற்றுக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களோ, அரசு அறிவிப்புகளோ, நம்பகமான செய்தி ஆதாரங்களோ இல்லை. மாறாக, சில தகவல்கள் தமிழக அரசின் உண்மையான கொள்கை அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளுடன் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளன. ஒரு மாநில அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து வெளிமாநிலங்களில் இருந்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவுவது தவறல்ல. ஆனால் அவை உண்மையான தகவல்களாக இருக்க வேண்டும்.
நடக்காத ஒன்றை நடந்ததாகவும், வெளியாகாத அரசாணையை வெளியானதாகவும், இல்லாத திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் கூறுவது அரசியல் பிரசாரம் என்ற எல்லையைத் தாண்டி தவறான தகவல் பரப்பலாக மாறுகிறது. அதுவும் ஒரே மாதிரியான தகவல்கள் பல கணக்குகளில் ஒரே நேரத்தில் பரவினால், அதன் பின்னணியில் ஒருங்கிணைந்த பிரசாரம் உள்ளதா என்ற கேள்வி எழுவது இயல்புதான்.
யார் ஸ்கிரிப்ட் எழுதுகிறார்கள்? யார் தகவல்களை வழங்குகிறார்கள்? யார் பணம் செலுத்துகிறார்கள்? யாருடைய அரசியல் நோக்கத்துக்காக இந்த உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுகின்றன? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டியது அவசியம். இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலையில், இப்போது ஒரு கும்பல், முதல்வர் விஜய்யை சர்வதேச தலைவராக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. முதல்வர் விஜய் பாகிஸ்தான் சென்றுள்ளதாகவும், பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு அளித்ததாகவும் சமூக வலைதளங்களில் பல ரீல்ஸ் வீடியோக்கள் பரவி வருகின்றன.
பாகிஸ்தானுக்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு, லாகூர் விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சர் மரியம் நவாஸ் நேரடியாகச் சென்று விஜயை வரவேற்றதாகவும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன. பாகிஸ்தான் சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விஜய் ஆதரவு அளிப்பது போன்றும், அவரது சகோதரி அலீமா கானைச் சந்தித்ததாகவும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் மக்களுக்கு விஜய் பத்தாயிரம் பணம் வழங்கி உதவி செய்வதாகவும் ஒரு வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும், செயற்கை நுண்ணறிவு — ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகளையும் இணைத்து, போலியான தகவல்களுடன் இந்த வீடியோக்கள் உருவாக்கப்பட்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் எந்த மாநில முதல்வரும் ஒன்றிய அரசின் அனுமதியை பெறாமல் வெளிநாடுகளுக்கு போகவே முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒன்றிய அரசும், ஒரு முதல்வர் வெளிநாடு செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும். எளிதில் அனுமதி கிடைக்காது. அதுவும் எதிரி நாடான பாகிஸ்தான் போக வேண்டும் என்றால் கேட்கவே வேண்டாம். கண்டிப்பாக எந்த மாநில முதல்வருக்கும் அனுமதி தரப்படாது.
கடந்த வாரம் கூட தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இங்கிலாந்து போக அனுமதி தந்த ஒன்றிய அரசு, அவர் அங்கிருந்து அமெரிக்காவுக்கு போக அனுமதி மறுத்தது. இதனால், வேறுவழியின்றி, தெலங்கானா மாநில அரசு அதிகாரிகளை மட்டும் அங்கிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு, இந்தியா திரும்பிவிட்டார் ரேவந்த் ரெட்டி. அமெரிக்கா போகவே இவ்வளவு கட்டுப்பாடு. ஆனால், முதல்வர் விஜய் பாகிஸ்தான் சென்று, அங்கு அரசியல் தலைவர்கள், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்டோரை பார்த்து ஆதரவு தந்ததாக வெளியிட்டால் ஒன்றிய அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா?
விஜய்யின் புகழ் வெளிநாடுகளிலும் பரவி இருக்கிறது என்று கெத்து காட்டுவதற்காக இப்படி ஒரு வீடியோவை ஒரு குரூப் திட்டமிட்டு உருவாக்கி பரப்பி வருவதாக தெரிகிறது. விஜய் பிரதமர் ஆகிறார்? என்ற ரீல்ஸ்களை பார்த்து ஏற்கனவே ஒன்றிய பாஜ அரசு கடுப்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில், எதிரி நாட்டுக்கு சென்றார், தலைவர்களை பார்த்தார், மக்களுக்கு ரூ.10000 நலத்திட்ட உதவியாக வழங்கினார் என்றால் ஒன்றிய அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா? என்று வெளியுறவு தொடர்பான நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏதோ விஜய்க்கு பில்அப் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, நாட்டுக்கே எதிரான வீடியோக்களை ஒரு கும்பல் உருவாக்கி பரப்பி வருகிறது. இது முதல்வர் விஜய்யை மிகப்பெரிய சிக்கலில் கொண்டு போய் நிறுத்திவிடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
வீடியோவுக்கு ரூ.60,000 பேரம் பேசிய இன்ஸ்டா பிரபலம்
விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீது யார் கை வைத்தாலும், பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தாலும் அல்லது பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்தாலும், தளபதி விஜய் சுட்டுத் தள்ளிவிடுவார் என பெண் இன்ப்ளூயன்சர் ஒருவர் ரீல்ஸ் வெளியிட்டார். இந்தப் பெண் வெளியிட்ட இந்தக் காணொலி ஏறக்குறைய ஒரு கோடி பார்வைகளை பெற்றுள்ளது. இந்தப் பெண் தவெகவுக்காக ஏறக்குறைய பத்துக் காணொலிகளை வெளியிட்டுள்ளார்.
இந்த பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் மெசேஜ் அனுப்பி நமது நிருபர் தொடர்பு கொண்டார்.
நிருபர்: ஒரு வீடியோ போட வேண்டும். எவ்வளவு கேட்பீர்கள்.
பெண் இன்ப்ளூயன்சர்: எவ்வளவு தருவீர்கள்?
நிருபர்: ரூ.20 ஆயிரம்.
பெண்: இந்த பணத்துக்கெல்லாம் வீடியோ போட முடியாது.
நிருபர்: ஏற்கனவே விஜய்க்காக வீடியோ போட்டுள்ளீர்களே. அதற்கு எவ்வளவு வாங்குனீங்க.
பெண்: உங்கள் மொபைல் நம்பர் தாங்க. என் மானேஜர் பேசுவார். இவ்வாறு உரையாடல் நடந்தது. சிறிது நேரம் கழித்து அந்த பெண் இன்ப்ளூயன்சரின் மானேஜர் நிருபரை தொடர்பு கொண்டு, விஜய் வீடியோ ஒன்றுக்கு ரூ.60 ஆயிரம் தந்தார்கள். உங்க பட்ஜெட் என்ன என்று சொன்னார். மீண்டும் அந்த பெண் இன்ப்ளூயன்சருக்கு , உங்கள் மானேஜர் பேசினார். எங்களால், ரூ.50 ஆயிரம்தான் தரமுடியும். சம்மதமா? என்று இன்ஸ்டாவில் நிருபர் செய்தி அனுப்பினார். அந்தப் பெண்ணும் “சரி” என்று கூறினார். ஒரு வீடியோவுக்கு 60 ஆயிரம் என்றால், அந்த பெண் இன்ப்ளூயன்சர் இதுவரை வெளியிட்ட 10 வீடியோக்களுக்கு 6 லட்சம் ரூபாய். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், ஆனால் இங்கு வடக்கே இன்ஸ்டாகிராம் வரை பாய்ந்து லைக்குகளை அள்ளுகிறது.
ஒரே ஸ்கிரிப்ட்... ஒரே ‘உருட்டு’!
இந்தியா முழுவதும் பல நூறு சமூக வலைத்தள கணக்குகளில் ஒரே மாதிரியான கருத்துகள் வெளியாகின்றன. மொழி மட்டும் மாறுகிறது; தகவல் மாறுவதில்லை. ஒரே சம்பவம். ஒரே குற்றச்சாட்டு. ஒரே அரசியல் முடிவு. ஒரே மாதிரியான வசன அமைப்பு. சில காணொலிகளில் பயன்படுத்தப்படும் இந்தி வாக்கியங்களே, தமிழில் இருந்து கூகுள் டிரான்ஸ்லேட் அல்லது பிற மொழிபெயர்ப்பு கருவிகள் மூலம் நேரடியாக மாற்றியதுபோலத் தோன்றுகின்றன. சிலவற்றில் பேசுபவரின் வாய் அசைவுக்கும் வசனத்திற்கும் கூட பொருத்தம் இல்லாமல் இருக்கிறது. ஒரே மாதிரியான ஸ்கிரிப்டை பலர் கையில் வைத்துக்கொண்டு, வெவ்வேறு பின்னணிகளில் நின்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதுதான் இந்த ரீல்ஸ்களின் தனிச்சிறப்பு!
உண்மைச் சரிபார்ப்பு எங்கே?
சமூக வலைத்தளங்களில் பரவும் ஒவ்வொரு தகவலையும் மக்கள் உண்மை என்று நம்பிவிட முடியாது. குறிப்பாக ஒரு மாநில அரசின் கொள்கைகள் குறித்து தவறான தகவல்கள் திட்டமிட்டு பரவினால், அது அந்த மாநிலத்தைப் பற்றிய பொதுப்பார்வையையே மாற்றக்கூடும். எனவே, தமிழக அரசின் தகவல் மற்றும் உண்மைச் சரிபார்ப்பு அமைப்பும், காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவும் இத்தகைய தகவல்களைத் தொடர்ந்து கண்காணித்து, உண்மை மற்றும் பொய்யைத் தெளிவுபடுத்த வேண்டும். அதே நேரத்தில், இந்தப் பிரசாரங்களுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றால் அதைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தவெக தரப்பிலும் உள்ளது.
‘வருங்கால அமெரிக்க ஜனாதிபதி’
“விஜய் தல்பதிதான் அடுத்த பிரதமர்” என்று பான்பராக்கை மென்றபடி சில வடமாநில இன்ப்ளூயன்சர்கள் வெளியிட்ட வீடியோக்கள் வைரலான நிலையில், அடுத்த கட்டமாக “விஜய் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி” என்று ஒரு ரீல்ஸ் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! சமூக வலைதளங்களில் வெளியாகும் அரசியல் உள்ளடக்கங்களை மக்கள் வெறுமனே ‘ரீல்ஸ்’ என்று கடந்து செல்லாமல், அதன் பின்னணியில் உள்ள தகவலையும் ஆதாரத்தையும் சரிபார்க்க வேண்டிய காலம் இது.
Source : தினகரன் நாளிதழ்
Also Read
-
பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன? : த.வெ.க அரசுக்கு சிந்தனை செல்வன் கேள்வி!
-
குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்கள் - தவெக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு!
-
பரந்தூர் விமான நிலையம் ரத்து : த.வெ.க-வின் சூழலியல் அல்ல சூழ்ச்சியியல் - முரசொலி கண்டனம்!
-
“விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக” : த.வெ.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!
-
“மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!