Politics
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
தவெக அரசின் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, இன்று (ஆகஸ்ட் 05) எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் தவெக அரசின் பட்ஜெட் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது, தமிழ்நாடு சட்டபேரவையில், திருத்திய நிதிநிலை அறிக்கையை இந்த அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த அரசு அமைந்து, கிட்டத்தட்ட 100 நாட்கள் ஆகிவிட்டன.
100 நாட்களில் இந்த அரசின் மார்க் என்ன என்று யாரை கேட்டாலும், பூஜ்ஜியம் என்றுதான் சொல்வார்கள். இந்த பட்ஜெட்டும் இன்றைக்கு ஒரு மிகப்பெரிய பூஜ்ஜியம்.
நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தோம். எங்கள் தலைவர் சொன்னார். நாங்களும் சட்டசபையில் பேசும்போது சொன்னோம். நிறைய தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறீர்கள். அதை உடனடியாக, உங்களால் செய்ய முடியாது. ஆனால், எப்போது செய்யப் போகிறீர்கள் என்று ஒரு ரோடு மேப் கொடுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தோம்.
இந்த பட்ஜெட்டைப் பார்த்தீர்கள் என்றால், எங்களின் திராவிட மாடல் அரசு, எங்களின் தலைவர், கடந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் எல்லாம் கொண்டு வந்தார்களோ, அதற்கு மேல் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி இருக்கிறார்கள். ஆட்சிக்கு வரும்போது, `மாற்றம்’, `மாற்றம்’ என்றார்கள். `என்ன மாற்றம்?’ என்று கேட்டீர்கள் என்றால், எல்லாவற்றுக்கும் `பெயர் மாற்றம்’ செய்திருக்கிறார்கள்.
பட்ஜெட்டுக்கு முன்பு, பொதுவாக எல்லா முதலமைச்சர்களும், அமைச்சர்களும் அதிகாரிகளை அழைத்துப் பேசுவார்கள். அதேமாதிரி இந்த அரசும் கடந்த 10 நாட்களாக எல்லா அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை செய்வது போல், புகைப்படங்கள் எல்லாம் வந்தன.
பெயர் மாற்றம் செய்வதற்கு எதற்கு ஒரு ஆய்வு கூட்டம் நடந்தது, அதிகாரிகளுடன் என்ன ஆலோசனை செய்தார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. `தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை அறிவித்துள்ளார். ஆனால், அதுவும் பார்த்தீர்கள் என்றால், தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் அவர்கள் அறிவிக்கவில்லை. தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, அவருடைய வாக்குறுதி என்னவென்றால், தமிழ்நாட்டில் பிறக்கக்கூடிய அனைத்துக் குழந்தைகளுக்கும், `தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு பட்ஜெட்டில் அரசு மருத்துவமனையில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு மட்டும்தான், இந்தத் திட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பட்ஜெட்டில் எந்தத் திட்டமும், எந்த அறிவிப்பும் இல்லை. அனைத்துத் திட்டங்களும் `திராவிட மாடல் ஆட்சி’யில் எங்கள் தலைவர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்த, செயல்படுத்திய திட்டங்களைத்தான் இன்றைக்குப் பெயரை மாற்றியிருக்கிறார்கள்.
இதில் இன்னொரு சிறப்பு. இந்த அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு துறையைப் பற்றி, நிதி அமைச்சர் பேசும்போதும் அவர் குறிப்பிட்டுப் பேசுகிறார். பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கிறது. `இந்தியாவிலேயே நம் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது’ என்று மிகவும் மகிழ்ச்சியாக, பெருமையோடு சொல்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளையெல்லாம் இப்போதாவது ஒப்புக்கொண்டார் என்பதற்கு, நாங்கள் எங்களின் நன்றியை இந்த அரசுக்கும், நிதி அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
`அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’, `அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் திட்டம்’, `அயோத்திதாசர் ஆதிதிராவிடர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்’, `ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்’ என எல்லாமே எங்களின் `திராவிட மாடல் அரசி’ல் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்தான். வெறும் பெயரை மட்டும் அவர்களின் கட்சிப் பெயரை `வெற்றி’, `வெற்றி’ என்று அனைத்துத் திட்டங்களின் மீதும் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள்.
`அன்புச் சோலை’ என்று நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்குப் பெயரை மாற்றி இன்றைக்கு `முதியோர் பொழுதுபோக்கு மையங்கள்’ என்று பெயரை மாற்றியிருக்கிறார்கள். நாங்கள் எங்களின் தலைவர் ஆட்சியில் கொடுத்த மடிக்கணினித் திட்டம் உங்களுக்குத் தெரியும். `உலகம் உங்கள் கையில்’ என்று அந்தத் திட்டத்திற்கு எங்கள் தலைவர் பெயர் வைத்து கடந்த ஆண்டு 20 லட்சம் அறிவித்தோம், 10 லட்சம் மாணவர்களுக்குக் கொடுத்தோம். அதை இன்றைக்குப் பெயரை மாற்றி ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
`கலைஞர் கனவு இல்லத் திட்டம்’ அதன் பெயரை மாற்றி `வெற்றி வீடு திட்டம்’ என்று வைத்திருக்கிறார்கள். அதேபோன்று `மாடல் ஸ்கூல்ஸ்’ அவற்றை `தகைசால் பள்ளிகள்’ என பெயரை மாற்றியிருக்கிறார்கள்.
`முதல்வர் படைப்பகங்கள்’ எங்களின் ஆட்சியில் கொண்டு வந்த திட்டம், அதை இன்றைக்கு `டிஜிட்டல் நூலகம்’ என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள். அதற்கும் பார்த்தீர்கள் என்றால், வெறும் 10 கோடி ரூபாய்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. எங்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட `நன்னிலம் திட்டம்’ அதற்குப் பெயரை மாற்றி இன்றைக்கு `மண்ணின் மகள் திட்டம்’ என்று பெயரை மட்டும் மாற்றியிருக்கிறார்கள்.
தேர்தலுக்கு முன் எங்களுடைய தலைவர் தலைமையிலான அரசு தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டத்தில் கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி எனப் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் இருந்தன. ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு எங்களின் திராவிட மாடல் ஆட்சியில் பார்த்தீர்கள் என்றால் கடைசியாகத் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டத்தில் 48,500 கோடி ரூபாய் கல்விக்கு எங்களுடைய தலைவர் ஒதுக்கியிருந்தார். இப்போது அதைக் குறைத்து 44,500 கோடி ரூபாய்தான் இந்த முறை ஒதுக்கியிருக்கிறார்கள்.
நாங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பதைப் போன்று, காவிரியில் தண்ணீர் வரவில்லை. ஆடி 18 அன்றைக்குக்கூட தண்ணீர் வராத ஒரு சூழலை, இந்த அரசு ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று `தி இந்து’ ஆங்கில நாளிதழில் ஒரு செய்தி வந்திருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்த ஜூலை மாதத்தில் காவிரி நீர் வரத்துக் குறைவாக இருக்கிறது என்று அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
மேகதாது அணை கட்டும் கர்நாடகாவைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்த ஆட்சிக்கு வக்கில்லை, தைரியம் இல்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி அமைந்ததிலிருந்து இந்த மூன்று மாதமாக யார் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தீர்கள் என்றால் விவசாயிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி என்று தேர்தல் வாக்குறுதி சொன்னார்கள். ஆனால் இப்போது அதற்கு ஒரு நிபந்தனை போட்டு அதையும் மாற்றியிருக்கிறார்கள். ஆனால், அதையும் செயல்படுத்தவில்லை. முதலில் 50,000 ரூபாய் சொன்னார்கள், எதிர்ப்பு தெரிவித்ததும் அதை 75,000 ரூபாயாக மாற்றினார்கள். அதையும் முழுமையாகச் செயல்படுத்தவில்லை.
தஞ்சாவூரில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் நாங்களெல்லாம் கலந்துகொண்டு, விவசாயிகள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளையெல்லாம் நாங்கள் பேசினோம். அதற்காக நேற்று என் வீட்டிற்குள் புகுந்து கைது செய்தார்கள். கைது செய்து எப்படியெல்லாம் அலைக்கழித்தார்கள் என்று ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் பார்த்தது. குறிப்பாக, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இந்த வரவுசெலவுத் திட்டத்தைப் பற்றி நாங்கள் எதுவும் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்று கவனத்தைத் திசை திருப்பும் உத்தியாக விவசாயிகளுடைய சிக்கலைத் திசை திருப்ப வேண்டும் என்று நேற்று அந்த நாடகத்தை நடத்தினார்கள்.
என்னை மட்டும் இல்லை, தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் கைது செய்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்துப் பார்த்து பர்சேஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் இல்லை, GEN-Z தி.மு.க-வினரையும் வலைவீசித் தேடி, குறிவைத்து அவர்களை எல்லாம் கைது செய்து கொண்டிருக்கிறார்கள், வழக்குத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏனென்றால் இந்த ஆட்சியில் ஒவ்வொரு நாளும் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. அதையெல்லாம் திசைதிருப்ப இந்த கைது நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 100 நாட்களாகச் சட்டம் ஒழுங்கு பிரச்சினை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகள், பெண்கள், வயதான பெண்கள் இவர்கள் யாருக்குமே இந்த அரசில் பாதுகாப்பு இல்லை. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 5 வாரங்களில் மட்டும் நான்கு காவல்நிலைய மரணங்கள் நடந்திருக்கின்றன. ஐந்து சாதி ஆணவப் படுகொலைகள் நடந்திருக்கின்றன.
இதெல்லாம் தினசரி செய்திகளில் நீங்களே ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறீர்கள், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் குற்றம் செய்வதற்கு லைசென்ஸ் வாங்கியது போல் அவ்வளவு குற்றச்செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். துணிச்சலோடு தைரியமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பழனி கோயில் நில மோசடியைப் பார்த்து இன்றைக்கு ஒட்டுமொத்தத் தமிழ்நாடே அதிர்ந்து போயிருக்கிறது. இந்த அரசு ஆட்சிக்கு வந்ததும் மின்சாரம் வருவதில் முதல் நாளிலிருந்தே பிரச்சினை. இப்போது மின்சாரக் கட்டணம் மிகப்பெரிய ஒரு பிரச்சினையாக மாறியிருக்கிறது. கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் குடும்பங்களுக்கு வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகமாக மின்சாரக் கட்டணம் வந்திருக்கிறது.
அமைச்சர்கள் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று அங்கு இருக்கக்கூடிய மாணவர்களையெல்லாம் வெளியே வரச் சொல்லி, இந்த கட்சியின் பெயரை கோஷம் போடச் சொல்லி, மாணவர்களையெல்லாம் வற்புறுத்தி, அதை ரீல்ஸ் எடுத்து, வீடியோ எடுத்து அதையெல்லாம் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்தியாவே நீட் தேர்வை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது, அதை எதிர்த்து இந்த அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. அதற்கு மாறாக, போராடுகின்ற மாணவர்கள் மீது இந்த அரசு தடியடி நடத்தியிருக்கிறது. விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. அரிசி விலை பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் கேட்டால் முதலமைச்சர் பதில் சொல்ல மாட்டார்.
முதலமைச்சருக்குப் பதிலாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்று ஒரு முதலமைச்சருக்கு முன்ஜாமீன் வாங்குகிறார். இந்த மாதிரி ஒரு நகைச்சுவையை இந்திய ஜனநாயகம் எந்த மாநிலத்திலும், எந்தச் சட்டமன்றத்திலும் பார்த்திருக்காது.
நேற்றே பொதுப்பணித்துறை அமைச்சர் பேசியிருக்கிறார். அதாவது அவை முன்னவர் தீர்மானம் கொண்டு வர வேண்டுமாம். எதிர்க்கட்சிகள் ஏதாவது கேள்வி கேட்டால் அதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையாம், இவர்கள்தான் பதில் சொல்வார்களாம்.
இதற்கு எதற்கு முதலமைச்சர் அவைக்கு வர வேண்டும், இதற்கு எதற்கு நாங்களெல்லாம் அவைக்கு வர வேண்டும் என்கின்ற கேள்வியைப் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் இந்த அரசைப் பார்த்துக் கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆட்சி அமைந்த உடனே, `கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும்’ என்று முதலமைச்சர் கேட்டார். இந்த பட்ஜெட்டில் அதையாவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அதைச் சொல்வதற்குக்கூட அவர்களுக்குக நேரமில்லை. இன்னும் கால அவகாசம் கேட்கிறார்கள். எனவே நடக்கப்போகும் கூட்டத்தொடர் முழுவதும் ஆணித்தரமாகவும், உறுதியாகவும் மக்கள் பிரச்சினைகளை திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் எங்களுடைய தலைவருடைய அறிவுறுத்தலின் பேரில், கேள்வி கேட்கத் தயாராக இருக்கிறோம், பதில் சொல்ல இந்த அரசு தயாராக இருக்க வேண்டும்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைப் பற்றி அவர்கள் பேசவே இல்லை. 2,500 ரூபாயாக உயர்த்தி கொடுப்போம் என்று சொன்னார்கள். அது பற்றி இந்த பட்ஜெட்டில் அவர்கள் பேசவே இல்லை.
பல்வேறு திட்டங்களுக்கு `வெற்றி’ என்று பெயர் மாற்றி இருக்கிறார்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எல்லாருக்கும் `மாற்றம்’ மாற்றம் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன மாற்றம் இதுதான். எல்லா திட்டங்களுக்கும் பெயரை மாற்றியிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன ஒரே மாற்றம் இதுதான்.
Also Read
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !