Politics
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. முடிவுக்கு வந்த போராட்டம்.. அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு.. வரலாற்று நிகழ்வு!
2026 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து வெடித்த மாணவர் அதிருப்தி, நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான போராட்டமாக உருவெடுத்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த கருத்துதான் இன்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா வரை வந்து நின்றுள்ளது.
வழக்கு விசாரணை ஒன்றில் இந்தியாவில் உள்ள வேலையில்லா இளைஞர்களை கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்ததுதான் அந்த வார்த்தை.
அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நையாண்டியாகத் தொடங்கப்பட்ட "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற இளைஞர் இயக்கம், பின்னர் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஒன்றிணைத்து ஒன்றிய அரசுக்கு எதிரான பெரிய மக்கள் இயக்கமாக மாறியது. ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம், சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம், மாணவர்கள் மீது போலீசார் தடியடி, நாடாளுமன்ற முற்றுகை முயற்சி, மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை என பல்வேறு கட்டங்களைத் தாண்டி, இறுதியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுடன் நிறைவு பெற்றுள்ளது.
2026-ம் ஆண்டுக்கான நீட் இளநிலைத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். ஆனால், தேர்வு முடிந்த சில நாட்களிலேயே நீட் வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தது மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து கிளம்பிய கடும் எதிர்ப்பால் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், மே 16-ஆம் தேதி சமூக வலைதளங்களில் "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" என்ற பெயரில் இளைஞர்கள் ஒன்றிணைந்தனர். ஆரம்பத்தில் அரசை நையாண்டி செய்யும் இணைய இயக்கமாக இருந்த இந்த அமைப்பு, சில வாரங்களிலேயே மாணவர் உரிமைக்காக போராடும் இயக்கமாக வளர்ந்தது. “நியாயமான தேர்வு முறை வேண்டும், தேசிய தேர்வு முகமை (NTA) சீர்திருத்தப்பட வேண்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் நீட் தேர்வு மோசடிக்குப் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கரப்பான் பூச்சி இயக்கம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை பாஜக அரசுக்கு எதிராக எழுப்பியது. இது இந்திய அளவில் ட்ரெண்டாக, இதன் சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் பக்கத்தை ஒன்றிய அரசு முடக்கியது. இந்தப் பிரச்சனை நீதிமன்றத்திற்குச் செல்ல, அதன் முடக்கத்தை நீக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம்.
இதன் ஒரு பகுதியாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, கரப்பான் பூச்சி கட்சியினர் ஜூன் 6-ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய முதல் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது.
நீட் மறுதேர்வு முடிந்த பிறகு, தமிழ்நாடு, கேரளா, பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து மாணவர்கள் டெல்லி வந்து போராட்டத்தில் இணைந்தனர்.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜூன் 28-ஆம் தேதி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மாணவர்களுக்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இதனால் இன்னும் பிரச்சனை தீவிர கட்டத்தை எட்டியது. ”மாணவர்களின் எதிர்காலம் அரசியல் விவகாரம் அல்ல; அது நாட்டின் எதிர்காலம்” என்று அவர் தெரிவித்தார்.
வாங்சுக்கின் உண்ணாவிரதம் தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன.
உண்ணாவிரதம் தொடர்ந்து நீடித்ததால் வாங்சுக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசு இதில் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு வாங்சுக் நிலமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில் ஜூலை 20-ஆம் தேதி "சலோ சன்சத்" என்ற பெயரில் நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில்தான், வாங்சுக்கின் உடல்நிலை மிகவும் தீவிர பிரச்சனைக்கு உள்ளான நிலையில், ஜூலை 18-ஆம் தேதி அதிகாலை டெல்லி போலீசார் ஜந்தர் மந்தருக்குள் நுழைந்து, மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறி அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நடவடிக்கையை போராட்டக்காரர்கள் கடுமையாக எதிர்த்தனர். “உண்ணாவிரதத்தை பலவந்தமாக முடிவுக்குக் கொண்டுவர அரசு முயற்சிக்கிறது” என்று குற்றம்சாட்டினர்.
ஆனால், திட்டமிட்டபடி ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளன்று, பேரணி தொடங்கியது.
கரப்பான் பூச்சி கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்காணோர் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லக்கூடும் எனக்கணித்து, பேரணி தொடங்கும் முன் முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து பேரணியைத் தடுத்தனர். மாணவர்கள் தடுப்புகளை மீற முயன்றபோது, போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் வீசப்பட்டு மாணவர்களைக் கலைக்க முயன்றது டெல்லி போலீஸ். இதனைத் தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற ஏராளமான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனரான அபிஜித் தீப்கேவும் டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டார்.
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் நடவடிக்கையை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. தங்களது எதிர்காலத்துக்காக அமைதியான முறையில் போராடிய மாணவர்களை அடக்க அரசு வன்முறையைப் பயன்படுத்தியுள்ளது. என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஒன்றிய அரசு போராட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது.
முதல் கட்ட பேச்சுவார்த்தையில் நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். தேர்வு முறையில் சீர்திருத்தம், வினாத்தாள் கசிவு வழக்குகளுக்காக விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல், தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பின்னர் நேற்று (ஜூலை 24) இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் ஏற்கனவே முன்வைத்த கோரிக்கைகளுடன், நீட் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் மற்றும் தர்மேந்திர பிரதான் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், உண்ணாவிரதம் இருந்து வந்த சோனம் வான்சுக் ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். ஆனாலும், கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவிக்கையில், வான்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சிதான், இருப்பினும் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையில் எந்த பின்வாங்கலும் இல்லை. இதனைத் தொடர்ந்து நான் எனது உண்ண்டாவிரதப் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார்.
முக்கிய காரணமாக ஜூலை 20-ம் தேதியிலிருந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மே.வங்கம், பீகார், மகாராஷ்டிரா என போராட்டம் விரிவடையத் தொடங்கியது ஒன்றிய பாஜக அரசுக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியது. தங்களின் மீது நடவடிக்கை எடுக்கலாம், போராட்டத்தை சீர்குலைக்கலாம் என நினைத்தால் தர்மேந்திர பிரதான் ராஜினாமா என்பது, பிரதமர் ராஜினாமவை நோக்கி நகரும் எச்சரித்தனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் SFI, DYFI போன்ற மாணவர் அமைப்புகள், திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்திற்கு பெரும் ஆதரவை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 25) மதியம் 3.30 மணிக்கு 3-ம் கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவித்த நிலையில், 2.30 மணியளவில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தார்மீகப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, “முக்கிய கோரிக்கை நிறைவேறியுள்ளது” என்று அறிவித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, தங்களது அனைத்துக் கோரிக்கையும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தது.
பின்னர் நடைபெற்ற 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்பதாக ஒன்றிய அமைச்சர் ஜே.பி நட்டா தெரிவித்ததையடுத்து, கரப்பான் பூச்சி கட்சியினர் நாடு முழுவதும் நடைபெற்று வந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்தனர்.
நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து மாணவர்கள் தொடங்கிய இந்தப் போராட்டம், கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை, அரசியல் பொறுப்புணர்வு மற்றும் இளைஞர்களின் ஜனநாயகப் பங்கேற்பு குறித்த தேசிய விவாதமாக மாறியது. டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்த மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சி, இந்தியக் கல்வி வரலாற்றில் முக்கியமான மக்கள் இயக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது.
கடந்த 12 வருடங்களாக இதுபோன்ற எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் பொறுப்பேற்று ஒன்றிய பாஜக அரசு எந்த அமைச்சரையும் பதவி விலகவோ, பொறுப்பேற்கவோ வைக்காத சூழலில் இந்திய இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த முக்கிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வு மோசடிக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக மேற்கொண்ட போராட்டம் நாடு முழுவதும் எதிரொலித்ததன் விளைவாக, ஒன்றிய அரசு அடிபணிந்ததன் மூலம் மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“மேகதாது விவகாரம்.. விஷப் பரீட்சை வேண்டாம்” : தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“நான் விஜய் Fan..” : மாணவர்கள் போராட்டத்தில் பேச்சு.. மூக்குடைபட்டு திரும்பிய சனம் செட்டி - என்ன நடந்தது?
-
தி.மு.க எப்போதும் உங்கள் பக்கமே நிற்கும் : சென்னையில் நடைபெறும் நீட் போராட்டத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!
-
தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? : கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
விஜய்க்கு ‘ஜனநாயகன்’ என்ற பெயர் ஒரு கேடா? கேவலம்! மகா கேவலம்! : வெளுத்து வாங்கிய முரசொலி!