Politics

‘மேகதாது அணை விவகாரம்.. தமிழ்நாட்டுக்கு பாதிப்பு.. நாடாளுமன்றத்தில் திமுக அவை ஒத்திவைப்பு நோட்டீஸ்!’

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் முக்கிய மசோதாக்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக FCRA மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்த மசோதாக்களும் இடம்பெற்றுள்ளன.

நாடு முழுவதும் நிலவிவரும் பரபரப்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்க உள்ளதால், தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனையான காவிரியின் குறுக்கே அணைகட்ட தீவிரமாக முயற்சித்து வரும் கர்நாடக அரசின் நடவடிக்கையால் கடுமையாக தமிழ்நாடு பாதிக்கப்படும் நிலையில் அதனை எழுப்ப திமுக எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்களும் – மாநிலங்களவையில் கழக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, எம்.பி., அவர்களும் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

பாராளுமன்ற தி.மு.க. மக்களவைக்குழுத் தலைவர் – கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்கள் மக்களவைச் செயலர் அவர்களுக்கும், கழக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா, எம்.பி., அவர்கள் மாநிலங்களவை செயலர் அவர்களுக்கும்;

நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல் நடத்தை விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பிற அலுவல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திடவும் - பின்வரும் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வரவும், மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளர்.

அதன்படி, “காவிரி ஆற்றின் மீது முன்மொழியப்பட்டுள்ள மேகதாது சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கம் (Mekedatu Balancing Reservoir) குறித்த கவலைகள், அதனால் பாதிக்கப்படும் மாநிலமான தமிழ்நாட்டின் மீதான அதன் தாக்கம் மற்றும் இது தொடர்பாக ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பதன் அவசியம் ஆகிய அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை விவாதித்து தீர்மானத்தைக் கொண்டு வருதல்” என ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளனர்.