Politics
“தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரை தாமதமின்றி திறந்துவிட வலியுறுத்துவோம்!” : தி.மு.க சார்பில் தீர்மானம்!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஜூலை 16) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம் 1: மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டிட நடுவர் மன்றம் அமைத்திடுக!
காவிரி இறுதித் தீர்ப்பின்படி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் திறக்காமல் முரண்டு பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் சட்டவிரோதச் செயல்பாடுகளாலும்;
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் “தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் திறந்து விட முடியாது” எனக் கர்நாடகம் தொடர்ந்து வாதிட்டு வரும் சூழல் ஏற்பட்டு, இம்முறை ஜூன் 12-ஆம் தேதியன்று மேட்டூர் அணை திறக்காமல் நம் விவசாயப் பெருங்குடி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதை இக்கூட்டம் வேதனையுடன் பதிவு செய்கிறது.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தவரை, மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் முயற்சிகள் வெற்றிபெற விடாமல் தமிழ்நாடு வெற்றிகரமாகத் தடுத்துள்ளது.
மேகதாது அணையின் 'விரிவான திட்ட அறிக்கையை' காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்காமல் திருப்பி அனுப்பவும், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பட்டியலில் இருந்தே நீக்கவும் வைத்து;
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாத்து, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயன்ற கர்நாடகத்தின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்தவர்தான் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.
அதேநேரத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எப்படி 'காவிரி நடுவர் மன்றம்' கண்டாரோ, அதேபோல் மேகதாது அணைப் பிரச்சினைக்கும் தீர்வுகாண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு ஆட்சியில் இருந்தபோதே கோரிக்கை வைத்தார் அப்போதைய முதல்வர். காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதே காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட முக்கியக் காரணம் ஆகும்.
இப்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிரான அரசினர் தீர்மானம் முன்மொழியப்பட்டபோது, கழகத் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ‘மேகதாது அணைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என்ற திருத்தத் தீர்மானத்தை முன்மொழிந்து, அவ்வாறே அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது தி.மு.க.வின் முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி என இக்கூட்டம் பதிவு செய்கிறது.
மேகதாது அணைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரை எவ்வித தாமதமும் இன்றி கர்நாடக அரசு திறந்து விடுவதையும் ஒன்றிய அரசு உறுதி செய்திட வேண்டும் என மழைக்காலக் கூட்டத் தொடரில் வலியுறுத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 : தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாக்கின்ற வகையிலும் – மாநில உரிமைகளைக் காக்கின்ற வகையிலும், அரசியல்சட்டத்தின் மாண்புக்காகவும் – விழுமியங்களுக்காகவும் எப்போதும் போல் குரல் கொடுக்கவும், அதையொட்டி வரும் அனைத்து விவகாரங்களிலும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வாக தி.மு.க. எம்.பி.க்களின் குரல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒலித்திடும் என்று இக்கூட்டம் உறுதி செய்கிறது.
Also Read
-
“மக்களின் மனசாட்சியாய் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுவார்கள்!” : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
‘புது வடிவம் பெறும் உலகக்கோப்பை கிரிக்கெட்.. ஐபிஎல் போல் எலிமினேட்டர் சுற்றுகள்.. சுவாரசியமான விதிகள்!’
-
பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி : விமர்சனம் செய்தவரை இரவோடு இரவாக கைது செய்த தவெக போலீஸ்!
-
ரூ. 1.30 லட்சம் லஞ்சம்.. வைரலான வீடியோ.. திசை திருப்பிய தவெக.. பின்னர் கைது நடவடிக்கை! - என்ன நடந்தது?
-
2 பவுன் சங்கிலி பறிப்பு.. காவல் நிலையம் முன்பே நடந்த சம்பவம்.. தவெக நிர்வாகி செயலை கண்டுகொள்ளாத போலீஸ்!