Politics

“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!

சென்னை வானகரம் ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 28) திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஏற்பாட்டில், மாற்றுக் கட்சியினர் 5000 பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சி மேடையில் பேசிய கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தில் மகிழ்ச்சியோடு உறுதியோடு உற்சாகத்தோடு இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். திமுக-வின் தலைமை தொண்டனாக உங்களை வரவேற்க கடமைப்பட்டுள்ளேன்.

75 ஆம் ஆண்டு காலம் பவள விழா கண்டிருக்கும் திமுக-விற்கு வந்திருக்கிறீர்கள். 6 முறை தமிழ்நாட்டில் ஆட்சி செய்த இந்தியாவிற்கு வந்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டை கட்டமைத்த சிற்பியாக விளங்கும் கலைஞர் 50 ஆண்டுகாலம் தாங்கிப் பிடித்த கட்சிக்கு வந்துள்ளீர்கள்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் இருந்த கட்சிக்கு, எம்ஜிஆர் பொருளாளராக இருந்து செயல்பட்ட கட்சிக்கு வந்துள்ளீர்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தான் எம்ஜிஆர் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தனிக் கட்சியை கண்டார்.

தனிக்கட்சி தொடங்கிய பிறகும் சட்டமன்றத்தில் கலைஞரின் பெயரை குறிப்பிட்டு தொண்டர் ஒருவர் பேசிய பொழுது உங்களுக்கு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த பொழுது அந்த தொண்டரை கண்டித்தார்.

உங்களுக்கு நான் தலைவராக இருக்கலாம். ஆனால், எனக்கு தலைவர் கலைஞர் என எம்ஜிஆர் தெரிவித்தார்.

நான் மாணவனாக இருந்த போது சைதாப்பேட்டையில் நாடகம் நடத்திய பொழுது அதனை காண்பதற்கு எம்ஜிஆர் அவர்கள் வந்தார். அவருக்கு நாற்காலி வழங்கிய பொழுது அதனை மறுத்து தரையில் அமர்ந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் நாடகத்தை பார்த்தார் என்பது வரலாறு.

அன்றைய தினம் சாதாரண இளைஞர் ஆக இருந்தேன். அதே இயக்கத்தில் இன்று தலைமை தொண்டனாக இருந்து உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

முன்னாள் அமைச்சர் பெஞ்சமினை பல நாட்களாக கவனித்து வருகிறேன் அவரின் உழைப்பை பற்றி எனக்கு தெரியும். அதிமுகவிலிருந்து பல ஆண்டுகள் உண்மையாக உழைத்தவர்.

உண்மையாக, ஓயாமல், வேகத்துடனும் விவேகத்துடனும் உழைத்தவர். மாமன்ற உறுப்பினர் தொடங்கி துணை மேயர், அமைச்சர் வரை பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

சட்டமன்றத்தில் நாங்கள் கேள்வி கேட்கும் பொழுது அமைச்சர் பெஞ்சமின் புள்ளி விவரத்துடன் ஆதாரத்துடன் பேசுவார். முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் திமுக-வை நோக்கி வந்திருப்பது உங்களை விட நான் அதிக அளவில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் எங்கள் முன்னிலையில் திமுக உறுப்பினராக சேர்ந்திருந்தாலும் உங்கள் அனைவரையும் ஒன்றிணைந்து திமுக-வின் வரலாற்று பதிவு நிகழ்ச்சியாக இதனை நடத்திக் கொண்டிருக்கிறார். திமுகவின் சார்பில் என் இதய பூர்வமான நன்றியை பெஞ்சமின் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேர்தல் முடிந்தால் ஆளுங்கட்சியை நோக்கி பலர் சேர்வார்கள். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவில் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் பதவிக்காக , பொறுப்பிற்காக இல்லாமல் கொள்கைக்காக திமுகவில் சேர்ந்திருக்கிறீர்கள். திமுக வலுவாக இருந்தால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என இணைந்திருக்கிறீர்கள்.

கடந்த 5 வருடங்களில் இந்தியாவை இரண்டாவது பொருளாதார மாநிலமாக உயர்த்தினோம். தினம் ஒரு திட்டம் என்ற அடிப்படையில் திமுக அரசு செயல்பட்டது. உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்து தொழில் தொடங்கினர். எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்புகள் பெருகியது.

அண்டை மாநிலங்களில் அரசியல் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் கூட நம்மை பாராட்டினார்கள் சிலர் பொறாமைப்பட்டார்கள்.

ஆட்சி மாற்றத்தால் ஒரு மாதத்தில் அகல பாதாளத்தில் தமிழ்நாடு சென்றுள்ளது. சட்டம் ஒழுங்கு பற்றி சொல்ல வேண்டியதில்லை.

தொடர்ந்து ஆளுங்கட்சிக்காரர்களே அதில் சம்பந்தப்பட்டிருப்பது வேதனை.

மற்றொரு பக்கம் மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் Take Diversion திசை திருப்பும் வகையில் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. இவர்களின் டெக்னிக் மக்களுக்கு புரிய ஆரம்பித்து விட்டது.

ஓட்டு போட்டவர்களும், போடாதவர்களும் கஷ்டப்படுகிறார்கள். அமைச்சர்களை நோக்கி மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். திமுக பார்த்து பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை சீரழிய விடக்கூடாது.

திமுகவை போல் வெற்றிபெற்ற கட்சியும் இல்லை. தோல்வி அடைந்த கட்சி இல்லை. லட்சக்கணக்கான உடன் பிறப்புகளின் இதயத்தில் திமுக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆயிரம் ரூபாய் வழங்கும் என சொன்னோம் அதேபோன்று ஒவ்வொரு மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

பேருந்தில் மகளிர்கள் கட்டணமில்லா பயணம் செய்ய உத்தரவும் வழங்கப்பட்டு நடைமுறைகள் உள்ளது.

தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவ மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. காலை உணவு திட்டம் இந்தியாவில் மட்டுமின்றி உலகத்திலேயே எங்கும் இல்லை.

தமிழ்நாட்டை பார்த்து தான் இரண்டு மாநிலங்களில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி உள்ளார்கள். மகளிர் உரிமை திட்டம், மகளிர் விடியல் பேருந்து திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட எந்த திட்டங்கள் இருந்தாலும் அதனை எடுக்க முடியாது. அந்த திட்டம் தமிழ்நாட்டில் இருக்கும் வரை மு.க.ஸ்டாலின் பெயர் நிலைத்து நிற்கும்.

தேர்தல் இன்னும் மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்தில் வரலாம். பெரும்பான்மைக்கு 118 இடங்கள் வேண்டும். 108 இடங்கள் தான் இப்போது உள்ளவர்கள் வென்றார்கள். திமுக வெற்றி பெற வேண்டும் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என மக்கள் வாக்களித்த கட்சியினரின் ஆதரவில் தான் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

திமுக தயாராக இருக்க வேண்டும் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும். உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் உங்களைத் தேடி வரும்.