Politics

“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!

திமுக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் எதிர்கட்சி எனும் மாபெரும் பொறுப்பை ஏற்று மக்களுக்கு எதிராக ஆளும் தவெக அரசு செய்து வரும் கொடுமைகளை தோலுரித்துக் காட்டி வருகிறது.

இருப்பினும் கழகத் தொண்டர்கள் தோல்வி குறித்து சற்று கவலையடைந்தாலும், அவர்களையும் தேற்றி அடுத்தடுத்து மக்கள் பணிகளை நாம் எதிர்கட்சியாக எவ்வாறு செயல்பட வேண்டும் என கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில், கழகத்தின் தோல்வியை, குறிப்பாக தங்களின் வெற்றி பறிக்கப்பட்டதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் மறுகி, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து சென்னைக்கு வந்து, தங்களின் முகம் கண்டு ஆறுதல் அடைந்து, இப்படி உணர்ச்சி வெள்ளத்தில் தங்களை ஆழ்த்திக்கொள்ளும் உடன்பிறப்புகள் தான் அறிவாலய வாசலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் குவிகிறார்கள். தங்களை ஒரு நொடியேனும் பார்த்துவிட்டு, தங்களின் உணர்வைக் கொட்டி விட்டுப்போகவே வருகிறார்கள்.

தாங்களும் முகம் கோணாமல். சலிக்காமல் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதைப் பார்த்தேன். தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையினையும் கழகத் தோழர்களுக்குச் சேர்த்துத் தந்தீர்கள்.

கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் கூட என்னை அருகில் அழைத்து, தாங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்றபடி ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசி, ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்குச் செவி மடுத்து, அவர்கள் கொண்டு வரும் புத்தங்களில் அன்போடு கையெழுத்திட்டு, புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்கின்ற பண்பினையும், ஈடுபாட்டினையும் வியந்து சொன்னார். அதைக் கேட்டு மனம் நெகிழாமல் இருக்குமா?

இவ்வளவு பேரையும் பார்ப்பதில் தங்களுக்கு இருக்கும் சிரமத்தை நாங்கள் உணர்ந்து இருந்தாலும், தாங்கள் அதனைப் பொருட்படுத்தாமல் இன்முகத்துடன் பேசி வழியனுப்பியதைப் பார்த்து ஒரு வகையில் பூரித்தும் போனோம்.

கழகத்தைக் கட்டிக் காக்கும் நீங்கள் இப்போது தட்டியும் எழுப்பி இருக்கின்றீர்கள், தலைவரே! நம்மை எதிரிகள் வெட்ட வெட்ட, பேரறிஞரும் முத்தமிழறிஞரும் தட்டிக் கொடுத்து வளர்த்தெடுத்த கழகத்தின் ஓர்மையை தங்களின் வழியாகக் காண்கிறோம்.

காலம் தன் புன்னகையை தங்களை நோக்கி வீசுகின்றது, தலைவா! என தெரிவித்துள்ளார்.

Also Read: “அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!