Politics

“நூலக அரங்கில் அகற்றப்பட்ட கலைஞரின் புகைப்படம்.. தவெக அரசின் காழ்ப்புணர்ச்சியா?.. குவியும் கண்டனங்கள்”

சென்னை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக அரங்கில் நேற்று (ஜுன் 2ஆம் தேதி) மாலை தவெக அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அரங்கத்தில் மற்ற தலைவர்களின் படங்களோடு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படம் அகற்றப்பட்டு பின்னர் ஊடகங்கள் கேள்வி எழுப்பியவுடன் அவசர அவசரமாக திரும்ப மாட்டப்பட்டது.

பொது நூலகங்கள், நூலக அரங்குகள் தமிழ்நாட்டின் அறிவுசார் பாரம்பரிய பொதுசொத்துகள் அவற்றிற்கு எல்லா தலைவர்களுமே பங்களித்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்றதொரு சம்பவத்தை தவெக அரசு நிகழ்த்தியுள்ளதா என்ற கேள்வி தமிழ்நாடு முழுவதும் எழுந்தது.

கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் உட்பட பல பிரம்மாண்டமான நூலகங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாட்டிலுள்ள ஏராளமான நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் இளைஞர்களின் எதிர்கால கனவுகளுக்கு ஒளியூட்ட அறிவுசார் மையங்களும் திறக்கப்பட்டன.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கோவை பெரியார் நூலகத்தை வியப்புற ஆழ்ந்து ஆய்வு செய்தாரே அதைக் கட்டியது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலா திராவிட மாடல் அரசில் தான்.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள மாணவரணிச் செயலாளர் வீரமணி ஜெயக்குமார் “சென்னையில் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் தவெக அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் முத்தமிழறிஞர் கலைஞரின் புகைப்படத்தை அகற்றியது அநியாயம். கலைஞர் புகைப்படத்தை அகற்றியவர்களுக்கு நாகரீகம் என்றால் என்ன என்று தெரியுமா? தவெக அரசு இனியும் இதுபோன்று செயல்பட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கவிஞர் மனுஷ்ய புத்திரன், ”தமிழ்நாட்டில் கல்வியையும் பொது நூலகத்துறையையும் பெரும் இயக்கமாக வளர்த்தெடுத்த கலைஞரின் பிறந்த தினத்தன்று தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நூலகம் ஒன்றிலிருந்து கலைஞரின் புகைப்படம் அகற்றபட்டதைப் பற்றி பேச வேண்டிய அவலம் நிகழ்ந்துள்ளது. அந்த அரங்கில் எப்போதும் எம்.ஜி.ஆரின் படமும் இருந்திருக்கிறது. கலைஞரின் படமும் இருந்திருக்கிறது. அங்கு கலைஞரின் படம் இருப்பதில் யாருக்கு என்ன பதற்றம்? யாரை மகிழ்ச்சிப்படுத்த யார் செய்த செயல் இது?

கலைஞரின் படத்தை ஒரு பொதுநூலக அரங்கிலிருந்து அகற்றுவதன் வழியாக அவரை மக்கள் இதயங்களிலிருந்து அகற்ற முடியாது. தமிழ்நாட்டின் பொதுநூலக வரலாற்றிலிருந்தும் அகற்ற முடியாது” என காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள, திமுக கொள்கைபரப்பு துணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், அறிஞர் அண்ணா,எம்ஜிஆர் தமிழறிஞர்கள் பாரதியார்,பாரதிதாசன்,அவ்வையார் திருவள்ளுவர் மற்றும் தந்தை பெரியார் புகைப்படம் இடம் பெற்றிருக்கக் கூடிய நூலக வளாக அரங்கில் முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் புகைப்படம் மட்டும் நீங்கள் கலந்து கொண்ட நிகழ்சியின் போது ஏன் அகற்றம்‌ செய்யப்பட்டுள்ளது?

ஏன் இந்த வன்மம் உங்களுக்கு??

அந்த நூலகத்தினை சீரமைத்து புதிதாக கட்டிடங்கள் கட்டி தேவநேய பாவணர் பெயரினை வைத்தவர் தலைவர் கலைஞர் என்பது உங்களும் உங்கள் தலைவர் நடிகர் விஜய்-க்கும் தெரிய வாய்ப்பு இல்லை!!!

தவெக அரசு இதுபோன்ற அநாவசியமான செயல்களை செய்வதை விடுத்து ஆக்கப்பூர்வமான மக்களுக்கு பயனுள்ள செயல்களை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

தவெக அரசு இதுபோன்ற அநாவசியமான செயல்களை செய்வதை விடுத்து ஆக்கப்பூர்வமான மக்களுக்கு பயனுள்ள செயல்களை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “முதல்வர் விஜய்க்கு நாவடக்கம் தேவை.. இன்னமும் தேர்தல் கால மனநிலைதான்” : முரசொலி காட்டமாக விமர்சனம்!