Politics
“டில்லி சரணம் பாடி பழனிசாமி.. அதிகார பங்கிற்கு ஒரு கட்சியும் ஏறிட்டு பார்க்கவில்லை..” - கி.வீரமணி தாக்கு!
‘டில்லி சரணம்பாடிகள்’, ‘அரிதாரப் பூச்சு’களின் ஏமாற்று வித்தைகளைப் பொய்யாக்கி, கொள்கை அடிப்படையிலான கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் வெற்றி வாயில் நோக்கி விரைகிறார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெறும் பொதுத் தேர்தலில், போட்டியிடும் கட்சிகள், அணிகள்பற்றிய இறுதி நிலவரம் இப்போது ஏறக்குறைய உறுதியாகி வெளிவந்துவிட்டது.
=> ஒரு நல்லரசின் நாயகராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் உள்ளார்!
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் அய்ந்தாண்டுகள் அருமையான ‘திராவிட மாடல்’ ஆட்சி, அதன் தலைவர் முதலமைச்சர் மாண்பமை மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில், மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், கொள்கையொத்த 23 கட்சிகளுடன் கூட்டணியாக மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில், தமிழ்நாட்டின் உரிமைகள், வளர்ச்சி, சமூகநீதி, மதச்சார்பின்மை, மகளிர் நலன், சமத்துவம் இவற்றைத் தனது ஆட்சியின் சாதனைச் சரித்திரங்களாக்கி, களத்தில் வாக்காளர்களின் வரவேற்பைப் பெற்று, திராவிட ஆட்சியின் பாரம்பரிய கொள்கைப் பெருமை மற்றும் சாதனைகளை மேலும் வளர்க்கவும், உள்ளூர் மக்கள் முதல் உலக – புலம் பெயர் மக்கள் வரை பலரது பாராட்டு, வாழ்த்துகளை வரித்துக் கொண்ட ஒரு நல்லரசின் நாயகராக அவர் களத்தில் உள்ளார்!
அவரது தலைமையில், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக – கொள்கைக் கூட்டணியாகவே உருவாகி, திருவாகிய கூட்டணி. வெற்றிக் களங்களைத் தொடர்ந்து பெற்று, முத்திரை பதித்து, நமது தமிழ்நாட்டின் உரிமைகள், பண்பாடு, நாகரிகம், மொழி, மாநில உரிமைகளை விழுங்க நினைக்கும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து, நிமிர்ந்து, தேர்தல் களத்தில் முன்னிலையில் நிற்கிறார், அவருடன் கூட்டணித் தலைவர்களும் நிற்கின்றனர்.
=> எடப்பாடி பழனிசாமி ‘டில்லி சரணம்’ பாடிவிட்டார்! :
கடந்த கால தேர்தல்களில் தொடர்ந்து சுமார் பத்து முறை தோல்விகளைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் – அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், 31 ஆண்டுகாலம் ஆட்சியிலிருந்த ஒரு கட்சியின் மாட்சியைக் குலைக்கும் வண்ணம், ‘மோடியா, லேடியா?’ என்று அக்கட்சியின் பிரபலத் தலைவராக இருந்த ஜெயலலிதா அம்மையாரின் கருத்துகளைக்கூட தூக்கி எறிந்துவிட்டு, பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பிடியிலிருந்து தங்களை மீட்க முடியாத வண்ணம், டில்லிக்குச் சென்று, அங்கே எடுத்த முடிவுகளை ஏற்று, ‘டில்லி சரணம்’ பாடி கூட்டுக்குள் அடைபட்டுவிட்டார்.
டில்லி – ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் ஆணையை ஏற்று, அங்கே எடுக்கப்பட்ட முடிவினை இங்கே வந்து அறிவிக்கும் பரிதாப நிலையில் உள்ள கூட்டணியில் பெயருக்கு மட்டும் இவர் தலைவராகவும், அமித்ஷாவே முழு அதிகாரம் பெற்ற செயல் தலைவராகவும் இருக்கும் நிலைதான் இறுதிக் காட்சியாக தேர்தல் களத்தில் உள்ளது.
இவர் எதிர்க்கட்சித் தலைவராக 66 சட்டமன்ற உறுப்பினர்களுடன் இருந்தபோதுகூட, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவோ, ‘நீட்’ மற்றும் உரிய நிதி பெறுதல் போன்றவற்றிற்காகவோ – வாதாடியோ, போராடியோ வந்த வரலாறு படைத்தவரல்லர்! எதிர்பார்த்த நடிகர் கட்சியும் இவர்களை ஏமாற்றி ‘பெப்பே’ கூறிவிட்டது!
முன்பிருந்த முழு பலம் இழந்து, பிளவுபட்ட சில கட்சிகளே இவர்களின் அணியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியா? (NDA). அ.தி.மு.க. கூட்டணியா? எதையும் வலுவுடன் அழுத்தந்திருத்தமாகக் கூட கூற முடியாத இக்கட்டான நிலையில் களம் காணுகின்றன.
மற்றபடி ஊடகங்கள் பெயரளவில் கூறும் அய்ந்து அணிகளில், ஒன்று, வெறும் ஒப்பனை அணி. ‘‘நானே ராஜா, எனது ராஜ்ஜியத்தில் மும்மாரி பெய்கிறதா?’’ என்று அருகில் இருக்கும் சிலரைக் கேட்டே தெரிந்துகொள்ளும் ‘அற்புதம்’ படைக்கும் அரசியல் மின்மினிப் பூச்சி. மற்றவை பொருட்படுத்த தேவையற்றவை.
=> எந்த ஒரு கட்சியும் ஏறிட்டும் பார்க்காத யதார்த்தம்! :
‘அதிகாரப் பங்களிப்புத் தருவோம்’ என்ற நடிகரின் வெற்றுத் தூண்டிலுக்குக் கூட தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் ஏறிட்டும் பார்க்காமல் ஒதுங்கியதுதான் யதார்த்தம்! மற்றவை சில ‘‘ஊடக ஊறுகாய் கட்சிகளும், அவசர 777 பிராண்டுகளும்தான்!’’
தி.மு.க. கூட்டணியின் கொள்கை வரலாறும், சாதனைச் சரித்திரமும், மகளிர், இளைஞர், மாணவர், தொழிலாளர், விவசாயிகள் அனைத்துத் தரப்பினர்களின் ஆதரவினை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒருங்கே பெற்று, வெற்றியின் வாயிலில் நுழைய 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் களம் காண வீரநடை – வேக நடை போட்டு, ‘‘234 தொகுதிகளும் நம் தொகுதிகளே’’ என்று உணர்ச்சிப்பூர்வமாக அறிவித்து விவேக வியூகங்களோடு பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார்!
=> மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி 2026–இல் என்பது உறுதி!
அவர் உழைப்பிற்கு ஈடு, இணை எவரும் இல்லை. அவர்தான் இதயமாகி, எல்லாமுமாகி வெற்றிக் களம் காண வேக நடை போடுகிறார் என்பதால், மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி 2026 இல் என்பது உறுதி! உதயசூரியன் தகத்தகாய ஒளியுடன் வீசி எழுவது முக்காலும் உறுதி!
ஒத்துழைப்புத் தரும் கூட்டணிக் கட்சிகளின் கொள்கை உணர்வு என்றும் மாறாது. நியாயமான கோரிக்கைகளைக்கூட அவர்கள் விட்டுத் தந்ததால், கொள்கை எதிரிகளை அவ்வுறுதி ஏமாற்றமடையவும் செய்தது!
=> கொள்கையாளர்களின் பார்வையில்...
நண்பர் கலைஞானி கமல்ஹாசன் போன்றோர்கூட யதார்த்தம் புரிந்து, மிகவும் பண்போடு ‘‘தி.மு.க. கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு’’ என்ற அவரின் பிரகடனத்தால், முதலமைச்சரின் பாராட்டைப் பெற்றதுடன் கொள்கையாளர்களின் பார்வையிலும் மேலும் உயர்ந்துள்ளார்!
அனைவரும் ஒரே கொள்கைக் குடும்பத்தவர். ‘‘பதவிகள் வரும், போகும். இலட்சியங்கள்தான் நிரந்தரமானவை’’ என்ற நல்ல பாடத்தைத் தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அழகுடன் தந்திருக்கின்றனர். அதன் தலைவர்களுக்கு நமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!