Politics

இந்தி திணிப்பு : “நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்...” - பட்டியலிட்டு முதலமைச்சர் கண்டனம்!

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாடு முழுவதும் இந்துத்துவ கொள்கையை கொண்டும், இந்திமயமாக்குவதையும் மட்டுமே முனைப்புடன் செய்து வருகிறது. பல வகைகளில் இந்தியை திணிக்க முயன்று வரும் பாஜகவுக்கு தமிழ்நாடு எப்போதும் குட்டு கொடுத்து தான் வருகிறது. இருப்பினும் இந்தியை எப்படியாவது தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிட ஒன்றிய பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது.

அதற்காகதான் தேசிய கல்வி கொள்கை மூலம் தமிழ்நாட்டுக்குள் மும்மொழிக் கொள்கையை திணிக்க ஒன்றிய பாஜக அரசு எண்ணியது. ஆனால் அதற்கும் திராவிட மாடல் அரசு பிடரியிலேயே அடித்து துரத்திவிட்டது. இதனால் கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு இன்னும் வழங்காமல் வஞ்சித்து வருகிறது. எனினும் தங்கள் கொள்கையில் இருந்து பின் வாங்காமல் தமிழ்நாடு இருந்து வருகிறது.

எத்தனை முறை அவமானப்பட்டாலும் நாங்கள் திருந்த மாட்டோம்... துப்பினால் துடைச்சுட்டு போய்ட்டே இருப்போம்.. என்று சூடு சொரணை இல்லாத ஒன்றிய பாஜக, மீண்டும் மீண்டும் இந்தியை தமிழ்நாட்டுக்குள் எதோ ஒரு வடிவத்தில் நுழைந்துவிட துடித்துக்கொண்டிருக்கிது.

அந்த வகையில், தற்போது புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல இரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என்று தெற்கு இரயில்வே இந்தியில் பெயர் வைத்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன பதிவு வருமாறு :

பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்!

இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.!

'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான இந்தி திணிப்பு செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

* திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர்.

* வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர்.

* குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர்.

* ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது.

* மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள்.

கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்!

தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.

Also Read: கர்தவ்ய த்வார்.. மீண்டும் மீண்டும் இந்தி.. எத்தனை முறை அடித்தாலும் திருந்தாத பாஜக - கொந்தளித்த தலைவர்கள்!