Politics
‘டால்பின்’ அன்புமணி.. வெளியேற தயாரா?.. - அன்புமணியை அறிக்கை மூலம் விளாசிய அமைச்சர் MRK பன்னீர்செல்வம்!
அவதூறு பரப்பும் நோக்கில் அறிக்கை வெளியிட்ட அன்புமணிக்கு, வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை வருமாறு-
உழவர்கள் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறதா? என்ற கேள்வியுடன் ஒரு விளம்பரம் தேடும் உண்மைக்கு புறம்பான அறிக்கையை வெளியிட்டுள்ள சொந்த கட்சியிலிருந்து அடித்து விரட்டப்பட்ட அன்புமணி அவர்கள் பொய்யைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவர். பழைய அறிக்கைகளை தொகுத்து ஒன்றும் தெரியாமல், விவரம் அறியாமல் அன்றாடம் அறிக்கை விடுவதும், நகர வாழ்க்கையில் வாழ்ந்துக்கொண்டு விவசாயத்தின் அருமை, பெருமைகள் தெரியாமல், வயல்வெளியில் நடக்காமல், வயலில் அண்டைவெட்டுவது என்னவென்று தெரியாமல் அவர் வீட்டு ஜன்னலில் இருந்து கடற்கரையில் டால்பின்கள் விளையாட்டை கண்டு மகிழ்ந்து அறிக்கைவிடும் “டால்பின் அன்புமணி” அவர்களுக்கு விவசாயிகளின் துயர் என்னவென்று ஒன்றும் தெரியாதவர்.
தைத்திங்கள் தமிழர்திருநாளாம் பொங்கல் அன்று இந்த உலகத்தை காத்தருளும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாய பெருங்குடி மக்கள், நேற்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு திராவிட மாடல் நல்லாட்சி நடத்தும் திராவிட மாடல் சூரியனான முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியினால் வேளாண்மைக்கென பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வரும் அவர்களுக்கு நன்றி பெருக்கோடு தங்களுடைய நன்றியினையும், பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.
அதேபோல வரும் சட்டமன்ற தேர்தலிலும் உதய சூரியனுக்கு நிச்சயம் நன்றி பாராட்டுவர் வேளாண் பெருங்குடி மக்கள் என்பது உண்மை. இந்த சிறப்பான நிகழ்வை பொறுத்துக்கொள்ள இயலாமல் ஒவ்வொரு முறையும் விவசாய சங்கத் தலைவர்கள் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் அவர்களை பாராட்டும் போதெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒவ்வொரு முறையும் தான் சேர்ந்திருக்கும் புதிய கூட்டணியின் எஜமானர்களை திருப்திபடுத்தும் நோக்குடன் வெற்று அறிக்கை அன்புமணி தனது கூட்டணி விசுவாசத்தை காட்டிட, தமிழக மக்களை குழப்பும் விதமாக, எடப்பாடியின் ஊதுகுழலாக இருந்து கொண்டு இவ்வரசை குறை சொல்வதையே நோக்கமாக கொண்டு குழப்பமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திமுக-வின் ஐந்தாண்டு திராவிடமாடல் ஆட்சியில் விளைநிலங்கள் செழித்து, அதற்குரிய பலன்களும் அதிகமாகியிருக்கிறது என்பதுதான் உண்மை. 2023-24 மற்றும் 2024-25ஆம் ஆண்டுகளில் அதிக வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை, வறட்சி, பருவம் தவறி பெய்த கனமழை, மிக்சாம் புயல், ஆலங்கட்டி மழை, சூரைக்காற்று போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் 20 இலட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் பாதிப்படைந்த போதிலும் 2023-24ஆம் ஆண்டில், 109.51 இலட்சம் மெட்ரிக் டன் மற்றும் 2024-25ஆம் ஆண்டில், 110.04 மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி அடையப்பட்டது. அதேபோல சாகுபடி பரப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், டால்பின் அன்புமணி அவர்கள் தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சி குறித்து, சிறிதும் புரிதல் இல்லாமல் தவறான தகவல்களை சமீபகாலங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டச்செயலாக்க அமைச்சகத்தின் தரவுகளின் அடிப்படையில், வேளாண்மையில் 2012-13 முதல் 2020-21 வரை சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSVA), 2021-22 முதல் 2024-25 வரையிலான காலத்தில் 3.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. அடிப்படை ஆண்டான (Base Year) 2011-12 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-25 ஆம் ஆண்டில் வேளாண்மையில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 9.97 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது ரூபாய் மதிப்பில் 2011-12ஆம் ஆண்டில், ரூ.53,75,639 இலட்சம் ஆக இருந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி. 2024-25ஆம் ஆண்டில் ரூ.59,11,708 இலட்சம் ஆக உயர்ந்துள்ளது.
2012-13 முதல் 2020-21 வரை சராசரியாக 1.13 சதவீதமாக இருந்த நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (NSVA), 2021-22 முதல் 2024-25 வரையிலான காலத்தில் 2.74 சதவீதமாக உயர்ந்துள்ளது. அடிப்படை ஆண்டான (Base Year) 2011-12 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-25 ஆம் ஆண்டில் வேளாண்மையில் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி 3.09 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது ரூபாய் மதிப்பில் 2011-12ஆம் ஆண்டில், ரூ.50,31,026 இலட்சம் ஆக இருந்த நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி. 2024-25ஆம் ஆண்டில் ரூ.51,86,276 இலட்சம் ஆக உயர்ந்துள்ளது. இந்த விவரங்கள் யாவும் இவர் கூட்டணி சேர்ந்திருக்கும் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களே என்பது உண்மை.
இந்த புள்ளி விவரங்களை பார்க்கும் போது, இவர் தற்போது கூட்டு சேர்ந்திருக்கும் புதிய கூட்டணியின் எடப்பாடியின் கடந்த கால ஆட்சிதான் மோசமான ஆட்சியாகும். அந்த 10 ஆண்டு இருண்டகால ஆட்சியை நடத்திய எடப்பாடியின் ஆட்சியில்தான் வேளாண் உற்பத்தி குறைந்து காணப்பட்டது என்பது தெளிவாகும்.
திமுக ஆட்சியில் ஐந்தாண்டு காலத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.81 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்ற பொய்யான விவரத்தை தெரிவித்துள்ளார் வெற்றறிக்கை அன்புமணி.
=> நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை :
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசின் வேளாண் விலை மற்றும் செலவு ஆணையத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மாநில அரசு நெல் சாகுபடிக்கு ஆகும் செலவினத்தை கணக்கிட்டு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்க பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் இவர் அங்கம் வகிக்கும் பாஜக அரசிடம் கேட்டு அதிக ஆதரவு விலையை பெற்றுத் தர முடியாவிட்டால் இவர் இந்த கூட்டணியில் இருந்தே வெளியேற தயாராக இருக்கிறரா என்பதை இவர் தெளிவுபடுத்த வேண்டும்.
அவ்வாறு இல்லாமல், ஒன்றிய அரசின் எந்த வித சரியான நிதி பங்களிப்பு இம்மாநிலத்திற்கு வழங்காத நிலையிலும் 2020-21 ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் நெல் சாதாரண ரகத்திற்கு 1,868 ரூபாயாக இருந்த ஆதரவு விலையை ஒன்றிய அரசு 2025-26ஆம் ஆண்டில் 2,369 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இது வெறும் 27 சதவீத உயர்வு மட்டுமே ஆகும்.
மேலும், நெல் சன்ன ரகத்திற்கு 1,888 ரூபாயாக இருந்த ஆதரவு விலையை ஒன்றிய அரசு 2025-2026 ஆம் ஆண்டில் 2,389 ரூபாயாக ஆக நிர்ணயித்துள்ளது. இதுவும் வெறும் 27 சதவீத உயர்வு மட்டுமே. இதை எதிர்த்து கேட்க தெம்பும், திராணியும் இல்லாத இவர், இவ்வரசை குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம். ஆனால் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை பெருக்கிட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு அரசு கடந்த காலத்தில் சன்ன ரகத்திற்கு 70 ரூபாயாக இருந்த ஊக்கத் தொகையை 156 ரூபாயாக ஆக உயர்த்தி தற்போது வழங்கியுள்ளது. இது 123 சதவீத உயர்வாகும். மேலும், இவ்வரசு, சாதாரண ரக நெல்லுக்கு 50 ரூபாயாக இருந்த ஊக்கத்தொகையை 131 ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளது. இது 162 சதவீத உயர்வாகும். இந்த விவரத்தை தமிழ்நாட்டு விவசாயிகளிடமிருந்து இவர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
=> இயற்கைப் பேரிடர் நிவாரணம் :
கடந்த 2011 முதல் 2021 வரை நடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டு விவசாயிகள் இடர்பாடுடனே தங்களது வாழ்க்கையினை சிரமத்துடன் நடத்தி வந்தனர். அதிமுக ஆட்சியில் போராட்ட வாழ்க்கையுடன் அதிகளவில் விவசாயிகளின் தற்கொலைகளும் நிகழ்ந்தது. இதுபற்றி ஒன்றும் அறியாத வெற்று அறிக்கை அன்புமணி அவர்கள் கடந்த 4 ஆண்டுகளில் (2021-22 முதல் 2024-25 வரை) இயற்கை பேரிடர்களால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் 13.29 இலட்சம் பரப்பில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.1,631.53 கோடி நிவாரணத் தொகையாக 20.84 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையினால் பாதிப்பு, 2025ல் ஜனவரி மாதத்தில் பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிப்பு என 2.29 இலட்சம் எக்டரில் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ.289.63 கோடி நிவாரணம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுவிட்டது.
2025-26ஆம் ஆண்டில், வடகிழக்கு பருவமழை 2025 & டித்வா புயலால் 56,226 எக்டரில் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ரூ.111.96 கோடி நிவாரணம் வழங்குவதற்கான ஆணை இன்றே பிறப்பிக்கப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரையில் ஏற்பட்ட அனைத்து இயற்கை இடர்பாடுகளுக்கும், திராவிட மாடல் நாயகன் பாதிப்பு ஏற்பட்ட உடனே நேரடியாக களத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தினை அறிந்து, அவ்வப்போது நடவடிக்கை எடுக்கும் இவ்வரசினை குற்றம் சுமத்துவது சரியல்ல. அதேபோல், அவரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு கற்பனையும், ஃபேண்டசியும் கலந்து டால்பின் அன்புமணிக்கு என்னவென்று தெரியாமல் தவறான அறிக்கையினை எழுதிகொடுக்கும் எஜமானர்களை திருப்திபடுத்துவதுதான் இவருடைய வாடிக்கையாக உள்ளது. இனிவருங்காலங்களில் உண்மையினை ஆராய்ந்து அறிக்கை விடுவது இவருக்கும் நல்லது, இவர் வகிக்கும் கூட்டணிக்கும் நல்லது.
Also Read
-
5-வது இடத்தில் இறங்கி ஆடிய KL ராகுல்… கொண்டாடிய ரசிகர்கள்... காரணம் என்ன?
-
வடகிழக்குப் பருவமழை, புயல்... விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணத்தொகை.. அரசாணை வெளியீடு!
-
“பொங்கல் விழாவை கலை மற்றும் குறள் விழாக் காலமாக மாற்றியுள்ளார் முதலமைச்சர்...” - முரசொலி புகழாரம்!
-
4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
-
ஐசிசி தரவரிசைப் பட்டியல்… 5 ஆண்டுகளுக்கு பிறகு ‘நம்பர் 1’ இடத்தில் விராட் கோலி! : முழு விவரம் உள்ளே!