Politics

"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.

முரசொலி தலையங்கம் (22-10-2025)

‘திருட்­டுக் கடை’ பழ­னி­சாமி

“உருட்டுக் கடை அல்வா' என்ற புதிய அல்வா கடையை திறந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அல்வா கொடுப்பது என்பது அவருக்குத் தெரிந்த ஒரே தொழில்.

தனக்கு பதவி கொடுத்த சசிகலாவுக்கு முதலில் அல்வா கொடுத்தார் பழனிசாமி. அதன் பிறகு, எந்த டி.டி.வி. தினகரனுக்கு அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்கு கேட்டாரோ அவருக்கே அல்வா கொடுத்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அல்வா கொடுத்தார். 'உங்களோடு தான் கூட்டணி' என்று டெல்லியில் போஸ் கொடுத்து விட்டு சென்னை வந்ததும் பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் 'ஸ்பெஷல்' அல்வா கொடுத்தவர்தான் பழனிசாமி. இப்படி அவர் அல்வா கொடுத்த வரலாறுகள்தான் பழனிசாமி கால அ.தி.மு.க.வின் வரலாறுகள் ஆகும்.

இப்போதும் பா.ஜ.க.வுக்கு 'திருட்டு அல்வா' கொடுத்துக் கொண்டிருக்கிறார். 'எத்தனுக்கு எத்தன்' என்பதைப் போல அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நம்பவில்லை. கெட்டுப்போன தனது பழைய அல்வா பாக்கெட்டுகளை நடிகர் கட்சிக்கும் பழனிசாமி அனுப்பிக் கொண்டிருக்கிறார். பண்டிகை காலத்தில் பழசை விற்பதைப் போல, தேர்தல் நேரத்தில் விற்கப் பார்க்கிறார் பழனிசாமி. இப்படி பழனிசாமியின் உருட்டும், புரட்டும், திருட்டும் ஊர் அறிந்தவை. உலகம் அறிந்தவை. அவர், தி.மு.க.வை நோக்கி விமர்சிப்பது எல்லாம் தனது பழைய அல்வாவை சூடாக்கி விற்பனை செய்யும் சூட்சுமங்கள்தான்.

கொடுத்த வாக்குறுதி எதையும் தி.மு.க. நிறைவேற்ற வில்லையாம். 'அல்வா கொடுத்து விட்டார்கள்' என்று சொல்லி அல்வா பாக்கெட்டுகளுடன் பழனிசாமி சிரிக்கும் சிரிப்புக்கு கிராமத்தில் வேறு பேர் சொல்வார்கள்.

சில வாரங்களுக்கு முன்னால் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தெளிவாக இதற்கு விளக்கம் அளித்துவிட்டார்கள். மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத் துறை அமைச்சர்தங்கம் தென்னரசு, மாண்புமிகு போக்கு வரத்துத் துறை அமைச்சர்எஸ்.எஸ்.சிவசங்கர், மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர்கோவி. செழியன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் வைத்து கூட்டாகக் கொடுத்த பேட்டியில் படம் போட்டு விளக்கம் அளித்துவிட்டார்கள். அதையெல்லாம் புரிந்து கொள்ளும் அறிவுத் திறமை பழனிசாமிக்கு இல்லை என்பதை அனைவரும் அறிவோம்.

*கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாக 505 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்திருந்தோம். அந்த தேர்தல் வாக்குறுதியில் அனைத்தும் 24.06.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் செயலாக்கத்திற்காக தரப்பட்டது. இவை அனைத்தும் தொலைநோக்குத் திட்டங்களாக அரசின் சார்பில் மேற்கொள்ளப்படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

*505 வாக்குறுதிகளை திட்டங்கள் என்று சொன்னால், 364 திட்டங்களுக்கு அரசு ஆணைகள் வெளியிடப்பட்டு, அந்தப் பணிகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் மிகப் பெரும்பான்மையான திட்டங்கள் முடிவு பெற்றிருக்கிறது.

*அரசின் பரிசீலனையில் இப்போது இருக்கக்கூடியது 40 திட்டங்கள் ஆகும். இதனையும் சேர்த்தால் மொத்தமாக 404 திட்டங்கள் அரசின் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

*37 திட்டங்கள் ஒன்றிய அரசின் பரிசீலனைக்கு நிலுவையில் உள்ளது.

*64 திட்டங்கள் தற்போதைக்கு எடுத்துக் கொள்ளப்படாத திட்டங்களாக உள்ளன.

இவற்றை வெறும் வார்த்தைகளாகச் சொல்லவில்லை. துறை ரீதியாக அறிவிக்கப்பட்டது எவ்வளவு, அதில் எத்தனை நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை Powerpoint Presentation மூலமாக விளக்கம் அளித்திருக்கிறார்கள். இவை அனைத்தும் பல்வேறு இயற்கை இடர்பாடுகள், ஒன்றிய அரசிலிருந்துதேவையான போதிய நிதி வராத சூழ்நிலை இவற்றுக்கிடையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் ஆகும். தொலைநோக்குத் திட்டங்களில் அறிவிக்கப் பட்டதையும், நிறைவேற்றப்பட்டதையும் அமைச்சர்கள் விவரித்துள்ளார்கள்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லி, அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு, தொலைநோக்குத் திட்டங்களாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் விரிவான விளக்கம் அமைச்சர்களால் அளிக்கப்பட்டுள்ளது. அதை எடுத்து பழனிசாமி படிக்க வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதையும், அமைச்சர்கள் மூவர் அளித்த பேட்டியையும் வைத்துப் பார்த்து விட்டு, ஏதாவது புகார் இருந்தால் பழனிசாமி சொல்லட்டும். அதற்கு விளக்கம் அளிக்கலாம். அதை விட்டு விட்டு, 'பத்து விழுக்காடுதான் நிறைவேற்றி இருக்கிறார்கள்' என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வது அவர் வகித்த, வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல.

தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தவை மட்டுமல்ல, அறிவிக்காத பல்வேறுதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மொத்தமாக ‘தமிழரசு' இதழின் சார்பில் 600 பக்க புத்தகமாக அச்சடித்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனையாவது பழனிசாமி திருப்பிப் பார்த்திருக்க வேண்டும். வாசிக்க முடியாவிட்டால் அதனை தூக்கியாவது பார்த்திருக்க வேண்டும். இது எதையும் செய்யாமல் 'உருட்டுக் கடை அல்வா' வியாபாரத்தைப் பார்க்கிறார் பழனிசாமி.

பழனிசாமியின் உருட்டுக் கடையிலேயே ஓட்டை விழுந்துவிட்டது. அதனை முதலில் அவர் அடைக்க வேண்டும். அவரை முதலமைச்சர் வேட்பாளராக பா.ஜ.க. ஒப்புக்கொள்ளவில்லை என்பதை விட, அ.தி.மு.க.வே முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை என்பதுதான் முழு உண்மை ஆகும். அவரைச் சுற்றி இருப்பவர்களே தொண்டாமுத்தூர் அல்வா, குமாரபாளையம் அல்வா, புதுக்கோட்டை அல்வா என்று தனித்தனி உருட்டுக் கடைகளைப் போட்டு விட்டார்கள். செங்கோட்டையன் வெளிப்படையாகவே 'அமித்ஜி ரெசிபியில்' அல்வா கொடுத்துவிட்டார் பழனிசாமிக்கு.

நெல்லை பேருந்து நிலையத்தைச் சுற்றி இருக்கும் அல்வா கடைகளில் எது ‘ஒரிஜினல் கடை’ என்று தெரியாத அளவுக்கு பல கடைகள் இருக்கும். அதைப் போல இருக்கிறது பழனிசாமியின் அ.தி.மு.க. இந்த லட்சணத்தில் அல்வா பாக்கெட்டுகளை கோட்டைக்கு எடுத்து வந்து பல் இளிப்பது அசிங்கமாக இருக்கிறது.

Also Read: அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!