Politics
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
தமிழ்நாடு நெல் கொள்முதல் குறித்து தவறான தகவல்களுடன் அவதூறு பரப்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி தரும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்தவை பின்வருமாறு,
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல், இருப்பு மற்றும் நகர்வு குறித்து 16.10.2025 அன்று சட்டமன்றத்தில் கீழவேளூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கேட்ட துணைக் கேள்விக்கு சட்டப் பேரவைத் தலைவர் அனுமதி பெற்று விரிவான பதிலளித்து அந்தப் பதிலும் அடுத்த நாள் 17.10.2025 அன்று செய்தித்தாள்களில் விரிவாக வெளியிடப்பட்டது.
அதைக் கூடப் படிக்காமல், நான் பதிலளித்ததைப் பற்றி ஏதும் குறிப்பிடாமல் அல்லது நான் கொடுத்த பதிலில் ஏதேனும் விடுதல் இருந்தததாக அவர் கருதியிருந்தால் அதுபற்றிக் கேட்காமல் பொத்தாம் பொதுவாக மீண்டும் அதே பல்லவியைப் பாடினார்.
அதற்கு நான் விரிவாகப் பதிலளித்த பின் அந்தப் பதிலில் திருப்தியில்லாமலிருந்தால் அவருக்கு விவசாயிகள் மீது உண்மையான அக்கறையிருந்திருந்தால் தானோ அல்லது அவர் கட்சியின் உறுப்பினரை விட்டு என்னிடம் எடுத்துக் கூறியிருக்கலாம்.
அதை விடுத்து இரண்டரை நாட்கள் கழித்து விவசாயிகள் வேறு தனிப்பட்ட காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொண்ட புள்ளி விவரத்தை வைத்து உண்மைக்கு மாறாக அரசின் நெல் கொள்முதல் சாதனையை மறைக்கும் வகையில் பல அவதூறுகளைத் தான் வகித்த வகிக்கும் பதவியின் மாண்புக்குப் பொருத்தமின்றி அறிக்கை விட்டிருக்கிறார்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நெல்லுக்கான மாநில அரசின் ஊக்கத் தொகையை ஒரு பைசா கூட உயர்த்த வக்கற்ற ஆட்சி நடத்தியவர், தொடர்ந்து நான்காண்டுகளாக மாநில அரசு வழங்கும் ஊக்கத் தொகையை அதிகரித்து வரும் கழக ஆட்சியைப் பார்த்துக் களங்கம் சுமத்துகிறார்.
கடந்த நான்காண்டுகளாக நெல் கொள்முதல் பருவம் அக்டோபர் முதல் நாளுக்குப் பதிலாக செப்டம்பர் முதல் நாளிலிருந்து நெல் கொள்முதல் செய்ய வழிவகுத்து நெல்லைப் பெருமளவில் மழையிலிருந்து காத்தது நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
முதலமைச்சர் அவர்கள் கடந்த அக்டோபர் 2-ஆம் நாள் காந்திஜெயந்தி அன்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர், நான், தொழில்துறை அமைச்சர், துறை முதன்மைச் செயலர், டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தைக் காணொலிக்காட்சி வாயிலாக நடத்தி நெல் கொள்முதல், சேமிப்பு, நகர்வு மற்றும் அரவையைத் துரிதப்படுத்த ஆணையிட்டார்கள்.
அதனைத்தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலுார் மண்டலங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைக் கிடங்குகளில் பாதுகாத்திடவும், பிற மண்டலங்களுக்கு இயக்கம் செய்வதனைத் துரிதப்படுத்தவும் நான், துறையின் முதன்மைச் செயலர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் ஆகியோர் 10.10.2025 மற்றும் 11.10.2025 அன்றும் டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொள்முதல், சேமிப்பு, நகர்வு மற்றும் அரவையைத் துரிதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை மற்றும் வளர்ச்சித் திட்டங்களால் டெல்டா மாவட்டங்களில் 2025-2026-ஆம் ஆண்டில் குறுவை சாகுபடி வரலாறு காணாத அளவிற்கு 6.13 இலட்சம் ஏக்கராக உயர்ந்தது. கடந்த ஆண்டின் இந்த கால கட்டக் கொள்முதலை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
1,805 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் ஏன் தீபாவளி அன்று கூட ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் எவ்வளவு நெல் வரை கொள்முதல் செய்ய இயலுமோ அதற்கேற்ற கணிப்பொறி கருவி கொண்டு அவ்வளவு கொள்முதல் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று (19.10.2025) அதாவது ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிற்பகல் 3 மணி வரை 3700 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதலுக்கு ஒன்றிய அரசு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை 29.7.2025 அன்று அளித்ததாலும், விரைவாக நடவடிக்கை எடுத்து ஒப்பந்தப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அந்நிபந்தனைகளின்படி அந்நிறுவனங்கள் இயங்குவதைச் சரிபார்த்து, பின்பு விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டு, அவர்களுக்கு ஒப்பந்த ஆணைகள் 7.10.2025-இல் வழங்கப்பட்டது.
பின்பு அவர்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை ஒன்றிய அரசு குறிப்பிடும் சோதனைக் கூடங்களுக்கு அனுப்பிச் சரிபார்த்திட அலுவலர்களுக்கு உரிய பயிற்சி ஒன்றிய அரசால் 15.10.2025 அன்று வழங்கப்பட்டதற்குப் பின்பு தான் செறிவூட்டப்பட்ட அரிசியின் மாதிரிகள் பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளால் ஏற்பட்ட கால தாமதத்தால் 2025-2026 கொள்முதல் பருவ நெல்லை முழு அளவில் அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்ப இயலவில்லை.
மேலும், 2025-2026-ஆம் ஆண்டு நெல் அரவைக்குத் தேவையான செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிப்பு நிறுவன மாதிரிகளை ஆய்வு செய்திட அதிகாரிகளை உடனடியாக அனுப்புமாறு 13.10.2025 அன்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு 15.10.2025-இல் ஒன்றிய அரசால் பயிற்சி அளிக்கப்பட்டு தற்சமயம் ஒப்பந்ததாரர்களால் தர பரிசோதனை முடிவுகள் ஏற்றப் பட்டு ஒன்றிய அரசிடம் அனுமதி பெறும் நிலையில் உள்ளனர்.
2025 – 2026 கொள்முதல் பவருவத்திற்கு நெல் அரவைக்குத் தேவையான செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளைக் கொள்முதல் செய்திட 6 மாதத்திற்கு முன்பே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தால் இந்த நடைமுறைச் சிக்கல்கள் இருந்திருக்காது. நிலைமை இவ்வாறிருக்க இதைக் குறிப்பிட்டுத் தான் அவர்கள் கூட்டணி அரசின் செயலைத் துரிதப்படுத்தி அனுமதி பெற்றுத் தாருங்கள் என்று சட்டப்பேரவையில் குறிப்பிட்டேன்.
அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஏதும் அறிந்து கொள்ளாமல் விவசாயிகள் வேறு காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொண்டிருப்பதை இதோடு முடிச்சுப் போட்டுப் பொறாமையில் புலம்பியிருக்கிறார்.
கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று அறியாமையில் பேசுபவரிடம் இது போன்ற தவறான தகவல்களைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
கடந்த பத்தாண்டுகளில் அதிமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் 1.80 கோடி மெட்ரிக் டன். ஆனால் 53 மாதக் கழக ஆட்சியில் கொள்முதல் செய்யப்ட்ட நெல் 1.94 கோடி மெட்ரிக் டன்.
கடந்த பத்தாண்டுகளில் அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை மாவட்டம் எருக்கூரில் கட்டப்பட்டுச் செயல்படாத 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சைலோவையும் நாகப்பட்டினம் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தொலைதூரத்தில் 1 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கட்டிப் புயலால் இடிந்து மீண்டும் கட்டியதையும் சேர்த்துக் கட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளின் கொள்ளளவு 7 இலட்சத்து 27 ஆயிரத்து 650 மெட்ரிக் டன்.
ஆனால் 53 மாதக் கழக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட 4.03 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் மற்றும் கட்டப்படவுள்ள கிடங்குகளின் கொள்ளளவையும் சேர்த்தால் 7 இலட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் ஆகும்.
விவசாயிகளிடம் அதிகம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதற்காக நாளொன்றுக்கு 5000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்திடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், பஞ்சநதிக்கோட்டையில் மெகா நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இதுபோன்று அதிக நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் எப்பொழுதெல்லாம் விவசாயிகள் விளைவித்த நெல் மணிகள் மழையில் பாதித்து ஈரப்பதம் அதிகரிக்கிறதோ அப்பொழுதெல்லாம் ஒன்றிய அரசிற்கு முன்மொழிவு அனுப்பி ஒப்புதல் பெற்று ஈரப்பத அளவினை உயர்த்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021–ஆம் ஆண்டு குறுவைப் பருவத்திலும் 2022-ஆம் ஆண்டு குறுவைப் பருவத்திலும் நெல்லுக்கு ஈரப்பத அளவினை உயர்த்திடக் கொள்முதல் செய்யப்பட்டது.
கடந்த 2025 ஜனவரி மாதம் சம்பா கொள்முதலுக்கு ஈரப்பதத்தினை உயர்த்த உரிய காலத்தில் முன்மொழிவு அனுப்பப்பட்டு ஒன்றிய அரசு அலுவலர்கள் ஆய்வு செய்த பின்பு நாம் பலமுறை வலியுறுத்தியும் ஈரப்பதத்தினை உயர்த்திட அனுமதி வழங்கவில்லை.
வட கிழக்குப் பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருவதால் ஈரப்பத அளவினை உயர்த்துவது அவசியமென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மேலாண்மை இயக்குனர் அரசிற்கு அறிக்கையினை 18.10.2025 அன்று அளித்ததன் அடிப்படையில் அரசால் ஒன்றிய அரசிற்கு இன்று அனுமதி கேட்டு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகளின் நலனில் ஈரப்பதத்தை உயர்த்திக் கொள்முதல் செய்திட எடப்பாடி. கே. பழனிசாமி அவர்கள் எங்களுக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை.
தங்களுடைய ஆட்சி காலத்தில் 2020-ஆம் ஆண்டு ஒரு முறை மட்டும் கொள்முதல் அளவினை 800 மூட்டைகளிலிருந்து 1,000 மூட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட்டது. விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் இதற்காக கோரிக்கை எழுப்ப வேண்டியிருந்தது.
முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி விவசாயிகளிடம் நிரந்தராமாக 1000 மூட்டைகள் பிடிப்பதற்கும் ஒரு ஏக்கருக்கு 60 லிருந்து 70 மூட்டைகள் பிடிப்பதற்கும், கூடுதல் மெஷின் வைப்பதற்கும் நிரந்தர ஆணை 13.2.2025 அன்று வழங்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளின் நலன் கருதி கொள்முதல் செய்யப்படும் நேரம் மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 41 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டு நெல் வரத்தின் அடிப்படையில் 8 நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது செயல்பட்டு 1647 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தேவையான கிராமங்களில் நெல் வரத்திற்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்.
கழக ஆட்சி மீது பழி சொல்ல வேண்டும் என்பதற்காக மதுரை மாவட்டத்திலுள்ள உண்மை நிலையைக் கூட அறிந்துகொள்ளாமல் புனைவுகளைக் காழ்ப்புணர்ச்சியுடன் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு அறிக்கையாக விடுவதை எதிர்க்கட்சித் தலைவர் தவித்திட வேண்டும். நேர்மறையான முறையில் ஆக்கபூர்வமாகப் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக ஆலோசனைகளை இனியாவது தருவார் என்று நம்புகின்றேன்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !