ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டத்தைக் கொண்டு வர இருக்கிறோம் என்ற மகத்தான அறிவிப்பை மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதி அளித்துள்ளார் முதல் அமைச்சர்.
“இது குறித்து தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி திரு. கே.என்.பாஷா அவர்கள் தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்பதை என்னுடைய முக்கியமான அறிவிப்பாக இம்மாமன்றத்தில் அறிவிக்கிறேன்.
இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, இப்பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும். அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்”என்று உறுதி அளித்துள்ளார் முதல் அமைச்சர்.
சமூக நீதி வரலாற்றில், சமநீதி வரலாற்றில், சமூக சீர்திருத்த வரலாற்றில், பெண் உரிமை வரலாற்றில் இது மிகமிக முக்கியமான அறிவிப்பு ஆகும்.
கொலை வழக்குகள் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதற்கு இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் இருக்கிறது. பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து காக்க வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளது.
நமது சட்டங்கள் மிக மிகக் கடுமையானவை. இதனை முறையாகப் பயன்படுத்தி, வழக்கை ஒழுங்காக நடத்தி தண்டனை பெற்றுத்தர முடியும். இது போன்ற ஆணவப் படுகொலை வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்புடைய குற்றவாளிகள் உடனடியாகக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இருப்பினும் இதற்கென தனிச்சட்டம் தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சிறுவர்கள், குழந்தைத் தொழில் தடுப்பு, ராகிங் தடுப்பு, ஈவ்டீசிங் தடுப்பு, குடும்ப வன்முறைத் தடுப்பு போன்ற பல சட்டங்கள் சமுதாயத்தில் பல நன்மைகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்தி உள்ளன. அந்த வரிசையில் இதனையும் நோக்க வேண்டி உள்ளது.
திராவிடர் கழகம் சார்பில் அக்டோபர் 4 ஆம் நாளன்று செங்கல்பட்டு மாநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - திராவிடர் கழக மாநில மாநாடு நடைபெற்றது. அதில், “ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த சட்டம் அவசியம் தேவை” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்மாநாட்டில் உரையாற்றிய முதல் அமைச்சர் அவர்கள், “மானமிகு ஆசிரியர் அவர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ள மாநில மாநாட்டுத் தீர்மானங்களைப் பார்த்தேன். சமூகக் களத்தில் நீங்கள் அதற்கான பரப்புரையைச் செய்யுங்கள். திராவிட முன்னேற்றக் கழகமானது ஆட்சியைப் பயன்படுத்தி சட்டங்களாக, விதிமுறைகளாக, நெறிமுறைகளாக வகுப்போம்”என்று உறுதி அளித்தார்கள். அத்தகைய உறுதிமொழியை உடனடியாகச் செயல் வடிவம் கொடுத்துவிட்டார் முதல் அமைச்சர் அவர்கள்.
இதனைத்தான் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் சுட்டிக் காட்டி வாழ்த்தி இருக்கிறார்கள். “1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டின் தீர்மானங்களைச் சட்டமாக்கிட 40 முதல் 60 ஆண்டுகள் ஆயின. ஆனால், 4.10.2025 செங்கல்பட்டு மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுத் தீர்மானங்கள் அடுத்த 13 நாள்களில் செயல்பாட்டுக்கு வர ஏற்பாடுகள் தொடக்கம்! என்னே வேகம்! என்னே விவேகம்!!இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சி!”என்று பாராட்டி இருக்கிறார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் உண்மையான வெளிப்பாடு இது போன்ற அறிவிப்புகளில் தான் முழுமை அடைகிறது. அதனைத் தான் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் செய்துள்ளார்கள்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர், பெரியார் பிறந்தநாளில் உறுதிமொழி, அம்பேத்கர் பிறந்த நாளில் உறுதிமொழி, மாணவர் விடுதிகளில் சாதிப் பெயர் நீக்கம், தெருக்களில் சாதிப் பெயர்கள் நீக்கம்.... இப்படி எத்தனையோ சமூகசீர்திருத்த சாதனைகளை மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஆவணப் படுகொலைகளைத் தடுக்கவும் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை என்பது உன்னிப்பாகக் கவனிக்கத்தக்க உரையாக அமைந்திருந்தது. “நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் நமது மனதை வேதனையடைய வைத்துள்ளன.
இதற்காகவா நமது தலைவர்கள் போராடினார்கள், நாம் போராடி வருகிறோம் என்ற வேதனை ஏற்படுகிறது. உலகம் அறிவுமயமாகி வருகிறது. ஆனால்,‘அன்புமயம் ஆவதை எது தடுக்கிறது?’ என்பதுதான் இன்று சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களை வாட்டி வருகிறது.
உலகம் முழுக்க பரவி, அறிவினால் மதிக்கப்பட்டு வரும் நம் தமிழ்ச் சமுதாயம், உள்ளூரில் சண்டை போட்டுக்கொள்வது என்ன நியாயம்?” என்று கேட்டுள்ள முதல் அமைச்சர் அவர்கள், அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக சீர்திருத்த பரப்புரையைச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் முதல் அமைச்சர் அவர்கள்.
‘சாதியை ஒழித்துவிடலாம், சாதிப் பெருமையை ஒழிப்பது சிரமம்’ என்றார் தந்தை பெரியார். ‘நீ வேறு, நான் வேறு என்பது மட்டுமல்ல, நான் உயர்வு - நீ தாழ்வு என்று கற்பிப்பது சாதி’ என்றார் அண்ணல் அம்பேத்கர். அதனால் தான் அது சிக்கலுக்குரியதாக இருக்கிறது. இத்தகைய சிக்கலான சாதிய மனோபாவத்தை மனமாற்றங்கள் மூலமாக மாற்ற அனைத்து இயக்கங்களும் தங்கள் பணியை முடுக்கி விடுதல் வேண்டும்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் போன்றோர் வழித்தடத்தில் நடப்பவர்க்கு மட்டுமல்ல மற்ற அனைவருக்கும் இந்தக் கடமை இருக்கிறது. பொறுப்பு இருக்கிறது. ஒரு சம்பவம் நடந்ததும், ‘இது தான் பெரியார் மண்ணா?’ என்று மண் மாதிரி கேட்காமல், ‘இத்தகையகொடூரத்துக்கு எதிராக, அதனைத் தடுக்க நாம் என்ன செய்தோம்?’ என்ற கேள்வியை குற்றம் சாட்டுபவர்கள் தங்களது மனச்சாட்சியை நோக்கி எழுப்பிக் கொண்டு செயல்பட வேண்டும்.