Politics
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
முரசொலி தலையங்கம் (16-10-2025)
பீகாரில் நேர்மை வேண்டும்!
இந்தியாவில் ஜனநாயகத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இந்தியத் தேர்தல் ஆணையமே மாறி இருக்கிறது. பீகார் மாநிலத்தில் முறையாக, ஒழுங்காக, நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எந்தக் கவலையும் இல்லை.
SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மூலமாக பீகார் மக்களை பீதி அடைய வைத்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இதனை உச்சநீதிமன்றம் எத்தனை முறை கேள்வி எழுப்பினாலும் தேர்தல் ஆணையம் மந்தமாக, கண்டுகொள்ளாமல், காது கேட்காதது மாதிரியே இருக்கிறது.
பீகாரில் சுமார் 3 கோடி வாக்காளர்கள் உள்ளனர். SIR என்ற பெயரில் பல லட்சம் வாக்காளர்களை நீக்கியது தேர்தல் ஆணையம். பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து முதலில் 65 லட்சம் பேரைத் தேர்தல் ஆணையம் நீக்கியது. அடுத்து 3.7 லட்சம் பேரை நீக்கினார்கள். இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தது. இப்போது புதிதாக 21 இலட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இணைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதில் எதற்கும் முறையான பதில் கிடையாது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தம் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையைச் சார்ந்த வழக்கை அக்டோபர் 7ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்தது. தேர்தல் ஆணையம் பீகாரில் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 3.66 லட்சம் பேர் நீக்கப்பட்டதற்கான விவரங்களை முழுமையாக அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜொய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கோரியது.
பீகார் மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட 21 லட்சம் புதிய பெயர்களும், நீக்கப்பட்ட 3.66 லட்சம் பெயர்களும் எவ்வாறு மாற்றம் செய்யப் பட்டன என்பதற்கான முழு விவரங்களைச் சொல்லுங்கள் என்று நீதிமன்றம் கேட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், 'தேர்தல் சீர்திருத்த அமைப்பு சார்பில் நீதிமன்ற விசாரணையில் பங்கெடுத்தார்.“2025 ஜனவரி மாத வாக்காளர் பட்டியலுடன், தற்போதைய இறுதி பட்டியலை ஒப்பிடும் பணியை தேர்தல் ஆணையம் ஒரே ‘கிளிக்’ மூலம் செய்ய முடியும். இதன் மூலம் எந்தப் பெயர்கள் சேர்க்கப்பட்டன, எந்த பெயர்கள் நீக்கப்பட்டன என்பதை தெளிவாக அறியலாம். தேர்தல் ஆணையம் செப்டம்பர் 30, 2025 அன்று பீகாருக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதில் மொத்தம் 7.42 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் 21 லட்சம் புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேசமயம் 3.66 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதைச் சொல்வது சிரமமான செயல் அல்ல” என்று வாதிட்டார்.
பீகாரில் ஒரே தொகுதியில் 30,000 இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டினார். பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வானின் சொந்தத் தொகுதியிலேயே பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள் பறிக்கப்பட்டுள்ளன. அதாவது பா.ஜ.க.வுக்கு யாரெல்லாம் வாக்களிக்க மாட்டார்களோ அவர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.'
“தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் அமைப்பாக இருப்பதால் சட்டப்படி செயல்படும் என நம்புகிறோம். அதே நேரத்தில், எந்தவிதமான சட்டவிரோதமும், பாகுபாடும் நடந்திருந்தால் அந்த நடவடிக்கையே செல்லாது என அறிவிக்கப்படும்” என்று செப்டம்பர் 15 அன்று நடந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது.
ஆனாலும் மழுப்பலான பதில்களையே தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சொல்லி வருகிறார்.
“ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவது அவசியம், பீகார் சிறப்பு தீவிர திருத்தம் சட்டப்படி நடத்தப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு அதை மறுபரிசீலனை செய்வது சட்டத்திற்கு முரணானது. வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கு மாவட்டத் தேர்தல் அலுவலர்தான் பொறுப்பு. பீகாரின் 243 மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களை தணிக்கைச் செய்ய ஒன்றிணைந்து பணியாற்றினர். நீக்கப்பட்ட பெயர்களின் பட்டியல் அரசியல் கட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் விடுபட்டிருந்தாலும், அவர்கள் மாவட்ட நீதிபதியிடம் மேல்முறையீடு செய்யலாம்” என்று சொல்கிறாரே தவிர உச்சநீதிமன்றத்துக்கு முறையான பதிலைத் தர மறுக்கிறார் ஞானேஷ்குமார்.
பீகாரில் பல லட்சக்கணக்கானவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து ஏன் நீக்கினார்கள்? அதிலிருந்து சில இலட்சக்கணக்கானோரை மீண்டும் ஏன் சேர்த்தார்கள்? எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை.
தேர்தல் ஆணையமானது இந்தியாவில் ஜனநாயகத்தை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக இல்லாமல் பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக மாறிவிட்டது. பா.ஜ.க. ஆட்சியின் கீழ் பணியாற்றுவதால் இதுதான் நமது வேலை என்று தேர்தல் ஆணையர் நினைக்கிறார்.
பீகாரில் நேர்மையான, உண்மையான தேர்தல் நடந்தால்தான் இனி எந்த மாநிலத்திலும் உண்மையான, நேர்மையான தேர்தல் நடக்கும். நடத்த முடியும்.
Also Read
-
“இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்!” : இலங்கை பிரதமரின் இந்திய வருகையையொட்டி முதல்வர் கடிதம்!
-
“WhatsApp வதந்திகளை மட்டும் நம்பி உயிர் வாழும் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
"கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கூட ஆளுநருக்கு கிடையாது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம் !
-
ராணுவ அதிகாரி மீதான விமர்சனம்... பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!