Politics

“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்!” : சனாதன திமிருதனத்தை வெளிக்காட்டிய வழக்கறிஞர் ராகேஷ்!

ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் இந்து சமூக மக்களையும், பிற சமூகத்தினரையும் அடிமைப்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட வாழ்வியல் நடைமுறையே ‘சனாதனம்’ என்ற உண்மை செய்தி வெளிப்படாமல், இந்திய அளவில் இந்துக்களின் வாழ்வியல் என்பதான பொருளில் ‘சனாதனம்’ என்ற சொல் ஆழமாக திணிக்கப்பட்டுள்ளது.

ஆதலால்தான், சனாதனம் என்ற சொல்லை வைத்து, தனக்கான அரசியலை செயல்படுத்துகிற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பா.ஜ.க.வின் கருத்தியல் கரு-ஆக விளங்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.

அப்படியான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்பற்றாளர்களும், அதனை ஒத்த சிந்தனையாளர்களும் ஆர்.எஸ்.எஸ்-ன் மதவாத, அடக்குமுறைவாத கருத்தியல்களை உள்வாங்கி, இந்திய ஆட்சி அதிகாரத்திலும், சட்டத்துறையிலும் தங்களது அடாவடித்தனத்தை கட்டவிழ்த்து வருகின்றனர்.

அந்த அடாவடித்தனத்தின் தொடர்ச்சியாகதான், இந்தியாவிலேயே அதிகாரம் மிக்க நீதித்துறை வளாகமாக அடையாளப்படும் உச்சநீதிமன்றத்தின் கட்டடத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வழக்கு விசாரணையில் ஈடுபட்டபோது, தன் காலணியை கழற்றி எறிய முற்பட்ட வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் நடவடிக்கை அமைந்துள்ளது.

காலணியை வீச முற்பட்டபோது, அதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினாலும், அவர் வாய்மொழி சொற்களை தடுக்க முடியவில்லை. “சனாதனத்திற்கு இழுக்கு வருவதை ஏற்க முடியாது” என்பதுதான் அவரின் வாதம்.

சனாதனத்திற்கு இழுக்கு என்ற சொல் வெளிப்பட்டதும், சனாதினிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்றும் பாராமல் பி.ஆர்.கவாய் அவர்களை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

சனாதனத்திற்கு இழுக்கு என்பது அனைவருக்கும் உரிமை வழங்குவது, சமூக நீதியை நிலைநாட்டுவது, சாதிய அடக்குமுறைக்கு எதிராக செயல்படுவது, பிரிவினைவாதத்தை ஆதரிக்காதது, இந்திய அரசமைப்பின்படி செயல்படுவது, குறிப்பாக இறையாண்மையுடன் செயல்படுவது எனபதே.

அப்படியான சமூக நீதி கொள்கைகளை பின்பற்றி, அம்பேத்கர் வகுத்த அரசமைப்பை சரியாக அமல்படுத்தி வந்ததால்தான், காலணியை எடுத்து எறிகிற அளவிற்கு ராகேஷ் கிஷோருக்கு சினம் வந்துள்ளது.

எனினும், பெருந்தன்மையுடன் நடந்துகொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய், “இதுபோன்ற தாக்குதல்கள் என்னை பாதிக்காது, அவரை தண்டிக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.

எனினும், அதிகார உச்சத்தில் இருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்றார் என்பதற்காக, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, “இது குறித்து உங்களின் கருத்து என்ன?” என செய்தியாளர் கேட்டதற்கு இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், “நான் எந்த தவறும் செய்யவில்லை, எல்லாம் வல்லவன்தான் இதை செய்ய வைத்தான். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. நான் செய்ததற்கு வருந்தவும் இல்லை” என திமிராக பதிலளித்துள்ளார்.

சனாதனம் என்ற அடக்குமுறை வாழ்வியல்தான் ஆகச்சிறந்தது. பிரிவினையைதான் நாங்கள் ஆதரிக்கிறோம். அதற்கு யார் எதிராக வந்தாலும், அது மகாத்மா காந்தியாக (கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டவர்) இருந்தாலும் சரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (பி.ஆர்.கவாய்)-யாக இருந்தாலும் சரி, நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்பது தான் அவரின் திமிருக்கு பொருளாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ராகேஸ் கிஷோரின் பேச்சுக்கு தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

Also Read: போரால் அழிந்த காசாவை மீட்க 25 ஆண்டுகள் ஆகும் : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!