Politics
துன்பம் வரும்போது நம்மைக் காப்பவர் யார்? கைவிடுவோர் யார்? : மக்களுக்கு உணர்த்திய கரூர் துயரம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு மனிதரால் ஏற்படுத்தப்பட்ட கரூர் பேரிடர் கொடுமையின் மூலம் வாக்களித்தவர் வாக்களிக்காதவர் எல்லோருக்கும் நன்மை புரியும் அரசு என்பதை நிரூபித்துவிட்டது.
அருணகிரிநாதர் பாடியதுபோல், வைதாரையும் வாழ வைப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை வெளிப்படுத்தி விட்டது! அய்யன் திருவள்ளுவர் கூறுவதுபோல், துன்பம் வரும்போது நம்மைக் காப்பவர் யார்? கைவிடுவோர் யார்? என்பதை அடையாளம் காட்டிவிட்டது.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும், ஐயோ நாம் வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று எண்ணி எண்ணி வருந்தக்கூடியவர்களுக்கும் பயன்தரும் வகையில் எல்லோருக்கும் எல்லாம் செய்யும் அரசாக என்னுடைய அரசு அமையும் என 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி அமைப்பது உறுதி என்ற நிலையில் மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.
அன்றைய அந்த அறிவிப்பின்படி 5 ஆம் ஆண்டில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும், இந்த திராவிட மாடல் அரசு வாக்களித்தவர் வாக்களிக்காதவர் என்று வேறுபாடு பாராமல் எல்லோருக்கும் எல்லாம் எனும் தத்துவத்தின் அடிப்படையில் நன்மைகள் செய்து வருகிறது.
விடியல் பயணத்திட்டம் வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்க மறந்தவர்களுக்கும் கட்டணமில்லாப் பயண வசதி தந்து கொண்டிருக்கிறது.
புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டங்களும் இந்த அரசுக்கு வாக்களித்த குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், வாக்களிக்காத குடும்பங்களைச் சார்ந்த இலட்சக்கணக்கான குழந்தைகளுக்கும் கல்லூரிப் படிப்பைத் தொடங்கியவுடன் மாதந்தோறும் ரூ.1000 வழங்கிக் கொண்டிருக்கிறது.
காலை உணவுத் திட்டம் இன்று 20 இலட்சத்துக்கு மேலான குழந்தைகளுக்குப் பசியாற, சூடான சுவையான காலை உணவை வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் எல்லோரும் இந்த அரசு அமைவதற்காக வாக்களித்தவர்கள் மட்டும் என்று எவரும் சொல்லிவிட முடியாது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - எப்பொழுதும் குடும்ப நலனே தனக்கு முக்கியம் என்று அல்லும் பகலும் உழைத்து வரும் 1 கோடியே 14 இலட்சத்திற்கும் மேலான, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வீதம் வழங்கி வருகிறது என்றால், அவர்கள் அத்தனை பேரும் இந்த அரசு அமைய வேண்டும் என வாக்களித்தவர்கள் மட்டுமே என்று எண்ணிவிட முடியாது. அவர்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வாக்களிக்க மறந்தவர்களாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
அதுபோலத்தான், இந்த அரசு அமைந்த பிறகு உருவாக்கி வரும் அனைத்துத் திட்டங்களும் எல்லோருக்கும் பயனளிக்கும் திட்டங்கள்தான் என்பதை எல்லோரும் இன்று உணர்ந்து வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும், தமிழர்கள் மீதும், உயிரையே வைத்துள்ளார்கள் என்று கூறுவது முற்றிலும் உண்மையாகும்.
அண்மையில் கரூரில் மனிதர்களால் இழைக்கப்பட்ட பேரவலம் நிகழ்ந்து, 41 பேர் உயிரிழந்தார்கள் எனும் கொடிய செய்தி வரத் தொடங்கிய நேரத்திலேயே "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்" என்பார்களே அதுபோல, நெரிசலுக்கு ஆளாகி உயிரிழந்தவர்கள், மூச்சுத் திணறி பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் போக, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எல்லோரும் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்று பார்க்காமல், அனைவரும் தமிழர்கள் அல்லவா எனும் எண்ணம் எழுந்து வேதனைக்கு ஆளாக்கிட முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தலைமைச்செயலகம் வந்தார்கள்.
அதிகாரிகளை அழைத்து, ஆலோசனைகள் நடத்தினார்கள். அங்கு இருந்தபடியே, மாவட்ட ஆட்சியருக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும், மற்றவர்களுக்கும் உடனடி நடவடிக்கைகள் எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்திட வேண்டும் என உத்தரவுகள் பிறப்பித்த வண்ணம் செயல்பட தொடங்கினார்கள்.
உயிரிழந்தவர்கள் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 10 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிட ஆணை பிறப்பித்தார்கள். தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டு வீட்டிற்குக் கூட செல்லவில்லை. நேரே சென்னை விமான நிலையம் சென்று, விமானத்தின் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றார்கள்.
அங்கு இருந்தபடியே கரூர் விரைந்து மருத்துவமனையில் இருந்த உயிரற்றவர்களின் உடல்களைப் பார்த்து கண்ணீர் வடித்தார்கள். மலர் வலையங்கள் வைத்து, அங்கே கூடி இருந்த உற்றார் உறவினர்களுக்கு எல்லாம் ஆறுதல் கூறினார்கள். அங்குச் சிகிச்சை பெற்று வந்தவர்களைப் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
யாருக்காகக் கரூருக்கு வந்தோமோ, அவரோ, அவரைச் சார்ந்தவர்களோ நம்மைத் தேடி வந்து பார்த்து, அவலம் கண்டு ஆறுதல் கூற வரவில்லை. ஆனால், யாரை நாம் எதிர்பார்க்கவில்லையோ, தவறாகச் சொன்னவர்கள் சொல் கேட்டு யாரை இழித்தும் பழித்தும் திட்டிக் கொண்டும் காலத்தை வீணாக்கினோமோ அவரல்லவா ஓடோடி வந்து நம்மைத் தேடித் தேடிப் பார்த்து ஒவ்வொருவர் துன்பத்தையும் துடைத்துக் கொண்டிருக்கிறார் என, உடல்படும் வேதனைகளுடனும் உள்ளம் வருந்தும் துன்பங்களுடனும் துடித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து ஆறுதல் கூறி அரவணைத்துக் கொண்டுள்ள முதலமைச்சர் அவர்களைக் கண்டவுடன் நெஞ்சும் கரங்களும் ஒன்றாகி வணங்கிய காட்சிகளைத் தொலைக்காட்சிகள் மூலம் தமிழ்நாட்டு மக்கள் கண்டு; "இவரல்லாவா முதலமைச்சர்!, இவரல்லாவா முதலமைச்சர்!" என்று பேசி பாராட்டத் தொடங்கினர். இன்றும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
சந்தக்கவி வாணர் அருணகிரி நாதர் பாடிய கந்தர் அலங்காரத்தில் முருகப் பெருமானைப் பாடும் பொழுது, "முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்போன்" என்று பாடுவார்.அதுபோல கரூர் நிகழ்ச்சி தவறான வழிகாட்டுதல் மூலம் உண்மை அறியாமல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் குறை சொல்லி அதுவரை வைது கொண்டிருந்தவர்கள் கூட, இன்று வாயார மணதார வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அது அருணகிரிநாதர் பாடியருளிய வரிகளையே நமக்கு நினைவுபடுத்துகின்றது-
அதுமட்டுமல்ல! கரூர் சம்பவம் தொடர்பாக 3.10.2025 வெள்ளிக்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கின் விசாரணையின்போது மாண்புமிகு நீதிபதி அவர்கள், கரூர் சம்பவத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார்கள். அத்துடன், தமக்காக வந்து பலியானவர்களைப் பார்க்காமல் ஓடிவிட்ட நடிகர் தலைமைப் பண்பு இல்லாதவர் என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.
"பெண்கள், குழந்தைகள் பலியான நிலையில் கட்சித் தொண்டர்களை, ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு ஓடிய த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்குத் தலைமைப் பண்பு இல்லை; அவர்கள் சம்பவத்துக்கு பொறுப்பேற்கவும் இல்லை.
கரூர் விபத்து மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. கோர்ட்டு இதைக் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அவர்கள் தமது பொறுப்பைத் தட்டிக்கழிக்கவும் முடியாது" என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடிய சம்பவம் தமிழ்ச் சமுதாயத்திற்கு உழைப்பவர் யார், தமிழ்ச் சமுதாயத்தைத் தமக்காக தவறான வழியில் அழைத்துச் செல்பவர்கள் யார் யார் என அடையாளம் காட்டிவிட்டது. இந்தியத் திருநாட்டில், தம்முடைய அயராத உழைப்பால் ஒவ்வொரு நாளும் பாடுபட்டு, புதிய புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி தமிழ்நாட்டை "இந்திய அளவில் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு தமிழ்நாடு" எனும் புகழை நிலைநாட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் மனதாரப் பாராட்டி, வாழ்க வாழ்க என வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
அய்யன் திருவள்ளுவர் தம் திருக்குறளில்,
"கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்." (குறள்-796)
- என்று கூறுவார். அதாவது, தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது - என்று முத்தமிழறிஞர் கலைஞர் இந்தக் குறளுக்கு உரை வகுத்துள்ளார்.
இந்தத் திருக்குறள், கரூர் பேரிடரின் மூலம், துன்பம் வருகின்றபோது, நம்மைக் கைவிடுவோர் யார்? நம்மைக் காப்பவர் யார்? காப்பவர் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் என்பதைத் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே உணர்த்திவிட்டது.
Also Read
-
”தேசத்தை காக்க தி.க, தி.மு.க தான் மருந்து” : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் ஆ.ராசா.எம்.பி பேச்சு!
-
இனி பழைய பொருட்களை அகற்ற கவலை வேண்டாம் : சென்னை மாநகராட்சியின் அசத்தலான திட்டம்!
-
கரூர் துயர சம்பவம் : அவதூறு பரப்பிய Youtuber மாரிதாஸ்... கைது செய்த போலீஸ்!
-
“ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல், ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம்!” : முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
“இந்தியாவில் 3 முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-க்கு நூற்றாண்டு நாணயமா?” : முரசொலி தலையங்கம் கண்டனம்!