Politics
“நாராச நடையில் மாறி வரும் பழனிசாமி..” - செல்வப்பெருந்தகை குறித்த பேச்சுக்கு ஆ.ராசா எம்.பி. கண்டனம்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையுடன், முரணான அரசியல் மேற்கொள்கிற ஒரே காரணத்திற்காக அவரை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திமுக குறித்தும், திமுக கூட்டணி குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது ஒரு கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என்ற மரியாதை கூட இல்லாமல், செல்வப்பெருந்தகையை தரக்குறைவாக பேசியுள்ளது அனைவர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்களை கீழ்தரமாக விமர்சித்து நாலாந்தர பேச்சாளராக மாறி வருகிறார் பழனிசாமி என கழக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆ.ராசா எம்.பி. வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு :-
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சுந்தரா டிராவல்ஸ் பயணத்தில் நீலகிரி மாவட்டத்தில் பேசும் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களைத் தரம்தாழ்ந்து, இழிவுபடுத்திப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
திமுக கூட்டணிக் கட்சிகள் பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் தொடர்ந்து அவதூறுகளை பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களைப் பிச்சைக்காரர் என்றும், ஒட்டுப்போட்ட சட்டைப் போட்டவர் என்றும் பேசி இருப்பது அநாகரிகத்தின் உச்சம். ஒரு தலைவருக்கு உரிய எந்தப் பண்பும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. நாலாந்தரப் பேச்சாளராக மாறி வருகிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டிற்குப் போய்விட்டு முகத்தை மூடியபடியே காரில் வந்தவர் எல்லாம் ’பிச்சைக்காரன்’ எனப் பேசுவது சரியா?
தன்னுடைய மோசமான பேச்சு, எதிர்வினையை உண்டாக்கும்; பார்வையாளர்களை முகம்சுளிக்கவைக்கும்; வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தும் என நன்கு தெரிந்துதான் வசவு வார்த்தைகளைப் பொதுவெளியில் எந்தத் தயக்கமும் இல்லாமல் பழனிசாமி பேசியிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், அதிமுக கூட்டணிக்கு வருமாறு கட்சிகளுக்கு பழனிசாமி தொடர்ந்து அழைப்பு விடுத்தும் அவரது கோரிக்கையை யாரும் செவி சாய்க்கவில்லை. மாபெரும் கூட்டணி அமைப்போம் என பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கெனவே கூட்டணியில் இருந்த பன்னீர்செல்வமும் தினகரனும் வெளியேறிவிட்டார்கள். இப்படியான விரக்தியில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கள் நாராச நடையில் மாறிக் கொண்டிருக்கிறது.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் ஒரு பக்கம் கட்டையைப் போடுகிறார். துரோகத்தின் – வஞ்சகத்தின் ஒட்டுமொத்த உருவமாக உள்ள பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று சொல்லி டிடிவி தினகரன் முட்டுக் கட்டைப் போடுகிறார். பாஜக தலைமை தொடர்ந்து குட்டக் குட்ட எடப்பாடி பழனிசாமி குனிந்து போகிறார். இப்படிப் பதுங்கிப் பம்மிக் கிடக்கும் பழனிசாமி திமுக கூட்டணிக் கட்சிகள் என்றால் வீராவேசம் காட்டுவார்.
அடுத்து யார் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தப் போகிறார் என்று தன்னுடைய சகாக்களையே நம்ப முடியாத பரிதாப நிலையில் இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. விரக்தியில் விளம்பில் உள்ள அவர் திமுக கூட்டணியில் ஒற்றுமையில்லை, குழப்பம் நிலவுகின்றது என்று கூறுவது எல்லாம் நல்ல வேடிக்கை.
தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கட்சியின் தலைவருடைய விசுவாசம் பற்றிப் பேச ஒரு தகுதியும் இல்லை.
Also Read
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!