Politics

பெட்ரோல் விலை உயர்வு... GST குறைவு.. மாறி மாறி பித்தலாட்டம் செய்யும் பாஜக அரசு - CPIM செயலாளர் சண்முகம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்துகொண்டு இருக்கிறது. சரிவின் காரணமாக கிடைக்கும் லாபம் என்பது பொதுமக்களுக்கு வந்து சேருவதற்கு பதிலாக அதானி, அம்பானி போன்ற ஏற்கனவே பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்டுள்ள பெரு முதலாளிக்குத்தான் போவதே தவிர இந்திய நாட்டு மக்களுக்கு லாபம் வந்து சேரவில்லை என கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசியது வருமாறு :-

ஒன்றிய பாஜக அரசு கடந்த 8 ஆண்டுகாலமாக ஜிஎஸ்டி வரி என்ற பெயரில், தொட்டில் முதல் சுடுகாடு வரை மக்கள் பயன்படுத்தும் அனைத்துவிதமான பொருட்களுக்கும் 6 மாதத்திற்கு ஒருமுறை வரியை உயர்த்தி இந்திய நாடு முழுவதும் மக்களின் முதுகெலும்பை முறித்தது. ஒவ்வொரு முறை உயர்த்தும்போது ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ’நாங்கள் வரியை உயர்த்தவில்லை, ஜிஎஸ்டி கவுன்சில்தான் உயர்த்துகிறது’ என்ற பொய்யான பிரசாரத்தை தொடர்ந்து செய்து வந்தார். ஏற்றுவதற்கு அவர்கள் பொறுப்பு இல்லை என்றால், இறக்குவதற்கு மட்டும் அவர்கள் எப்படி பொறுப்பாவார்கள்?

கடந்த ஒரு வாரகாலமாக நாடே அல்லோகலப்படும் அளவிற்கு நாங்கள் வரியை குறைத்துவிட்டோம் என்று பெரிய தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கின்றனர் நாட்டின் பிரதமரும், இந்திய நிதியமைச்சரும். அவர்கள் அவ்வாறு ஒன்றும் வரியை குறைத்துவிடவில்லை. கடந்த 2024ம் ஆண்டு மட்டும் 22 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி என்ற ஒன்றிய அரசு வசூல் செய்தது, இதில் ரூ.48 ஆயிரம் கோடிதான் குறைத்துள்ளனர்.

இந்திய நாட்டு மக்களை ஏமாற்றும் அரசாக ஒன்றிய பாஜக அரசு உள்ளது. இன்னும் நிறைய பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அவர்கள் முன்வரவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்துகொண்டு இருக்கிறது. சரிவின் காரணமாக கிடைக்கும் லாபம் என்பது பொதுமக்களுக்கு வந்து சேருவதற்கு பதிலாக அதானி, அம்பானி போன்ற ஏற்கனவே பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்டுள்ள பெரு முதலாளிக்குத்தான் போவதே தவிர இந்திய நாட்டு மக்களுக்கு லாபம் வந்து சேரவில்லை.

ஒன்றிய பாஜக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை உயரும்போதெல்லாம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்துவிட்டதை, ஒன்றிய அரசு தீர்மானிப்பது இல்லை என்று கூறி வந்தனர். இந்த மாதிரி பொய் பித்தலாட்டம் அவர்களிடம் தொடர்ந்து இருந்து வருகின்ற விஷயம். ஆகவே இந்த 48 ஆயிரம் கோடி வரி குறைவினால், பொதுமக்கள் கையில் பணம் உருளும், புரளும் என்று நிதியமைச்சரும், தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடலாம் என்று மோடியும் கூறுகிறார்கள்.

இந்த 48 கோடி ரூபாயை பிரித்தால் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களுக்கும் பிரித்தால் ஒரு வருஷத்திற்கு ரூ.1600 தான் வருகிறது. அதில் எவ்வாறு தீபாவளியை மகிழ்ச்சியாக, கோலாகலமாக கொண்டாட முடியும் என்று பிரதமருக்கு தெரிந்தால் அந்த ரகசியத்தை நாட்டு மக்களுக்கு கூற வேண்டும். வெறும் வாயில் கூறுவதால் மக்களுக்கு அது சேரப்போவது இல்லை, வரி குறைக்கப்பட்டதும் அது நேரடியாக மக்களுக்கு வந்து சேருமா, அல்லது பொருளை உற்பத்தி செய்யும் கார்பரேட் நிறுவனங்களுக்கு சென்றடையுமா என்ற பெருத்த சந்தேகம் நாடு முழுவதும் உள்ளது.

பொருளாதார நிபுணர்கள் அத்தகைய கருத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு உட்பட பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வரியை ஏற்றி அந்த காலத்தில் வழிப்பறி கொள்ளையர்கள் என்பதற்கு பதிலாக வரிக்கொள்ளையர்கள் என்று சொல்லத்தக்க அளவிற்கு பாஜக 8 ஆண்டு காலத்தில் மக்களிடம் பல கோடிக்கணக்கான ரூபாயை பறித்துள்ளனர்.

இப்போது புத்திவந்து குறைத்துள்ளனர். ஆனால் இதனை குறைக்கும் பின்னால் ஒரு அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஆதாயம் இல்லாமல் எந்த ஒரு அறிவிப்பையும் பாஜக நாட்டு மக்களுக்கு வெளியிடாது. அடுத்த மாதம் பீகார் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கேரளா உட்பட பல மாநிலங்களில் தேர்தல் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல்களில் மக்களை ஏமாற்றி தாங்கள் பலவீனமாக இருக்கின்ற மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற சதி நோக்கத்துடன்தான் இந்த வரி குறைப்பு செய்துள்ளார்கள், தவிர மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற நோக்கம் கடுகளவும் இல்லை.

Also Read: திடீரென தூய்மை படுத்தப்பட்ட சென்னை ரயில் நிலையங்கள்... காரணம் என்ன ?