Politics

மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !

முரசொலி தலையங்கம் (02-09-2025)

நிர்­ம­லா­வின் திடீர் தமிழ் வேடம்!

காங்கிரஸ் தலைவர் மறைந்த கருப்பையா மூப்பனார் அவர்களின் நினைவு நிகழ்ச்சிக்கு சென்னை வந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திடீரென்று தமிழ் வேடம் போட்டு இருக்கிறார்.

“ஆளுமைமிக்க மூப்பனார் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், பிரதமராக வேண்டிய சந்தர்ப்பம் உருவானது. ஆனால், அவர் பிரதமராக வேண்டிய தருணத்தை அவர்கள் தடுத்தனர். அந்த சக்தி யார் என்று நமக்கு தெரியும். தமிழ், தமிழ்க் கலாச்சாரம், தமிழின் புகழ் என்று திரும்பத் திரும்பபேசுபவர்கள் தமிழர் பிரதமர் ஆக வேண்டிய அந்த தருணத்தில் ஆதரவு தராமல்தடுத்தனர். மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்ததை, தமிழகத்துக்கு நடந்த துரோகம்” என்று பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். திடீரென்று தமிழ்ப் பாசம் அவருக்கு பொத்துக்கொண்டு வந்திருக்கிறது.

“தமிழர்கள் நாகரிகமற்றவர்கள்” என்று நாடாளுமன்றத்திலேயே ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்ன போது, நிர்மலாவின் தமிழ்ப்பாசம் தூங்கிக் கொண்டு இருந்ததா? “ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயிலில் இருக்க வேண்டிய புதையல் சாவிதமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டது” என சொல்லி தமிழர்களைத் திருடர்கள் என்பதுபோல வர்ணித்தார்களே? அப்போது பொங்கி இருக்க வேண்டாமா நிர்மலா?

“தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கிறார்கள்” என்று ஒன்றிய அமைச்சர் ஷோபா பேசிய போது பொங்கி எழுந்திருக்க வேண்டாமா நிர்மலா? இதை எல்லாம் விட்டுவிட்டு நடக்காத சம்பவத்தைச் சொல்லி தி.மு.க.வையும் தலைவர் கலைஞரையும் கொச்சைப்படுத்துவது சரியா?

ஒரு வரலாற்று நிகழ்ச்சியைச் சொல்வதாக இருந்தால் அதை முழுமையாகச் சொல்ல வேண்டும்? கிசுகிசு பாணியிலா குற்றச்சாட்டுகளை வைப்பார்கள்? 'மூப்பனார் பிரதமர் ஆகவிடாமல் கலைஞர் தடுத்தார்' என்பது ஏதுமற்ற அறிவிலிகள் அவ்வப்போது விடுக்கும் கூச்சல்களில் ஒன்று. அதையேதான் நிர்மலாவும் சொல்கிறார்.

1996 ஆம் ஆண்டு ‘ஐக்கிய முன்னணி' கூட்டணி ஆட்சி அமைந்தது. தேவகவுடா பிரதமராக இருந்தார். இந்த அரசை தி.மு.க.வும், மூப்பனார் தலைமையிலான த.மா.கா.வும் ஆதரித்தன. காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரித்தது. பின்னர், தேவகவுடா பதவிக்கு ஆபத்து வந்தது. புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் படலம் தொடங்கியது. அப்போது மூப்பனார் பெயரை முன்மொழிந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். அதனை வேறுசில கட்சிகள் ஏற்கவில்லை. குஜ்ரால், பிரதமர் ஆனார். இதுதான் உண்மை. இதனை அப்போதே தலைவர் கலைஞர் அவர்கள் பொதுவெளியில் விரிவாக விளக்கி இருக்கிறார்.

*17.4.1997 அன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் கலைஞர்,“பிரதமர் பதவிக்கு தமிழ்நாட்டிற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமேயானால் தி.மு.கழகம் மூப்பனாரின் பெயரைத் தவிர வேறு யார் பெயரைச் சொல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார். ஆனால் டெல்லியில் ஒத்த கருத்தை உருவாக்க முடியவில்லை என்பதையும் பின்னர் தலைவர் கலைஞரே விளக்கினார்கள்.

*குமுதம்' இதழுக்கு அளித்த பேட்டியில், “தமிழர் ஒருவர் பிரதமராவதற்கு நான் தீவிர முயற்சி எடுக்கவில்லை என்பது அப்பட்டமான பொய். எல்லாவிதமான முயற்சிகளையும் நான் மேற்கொண்டேன். ஆனால் அந்த முயற்சி எனக்கு வெற்றி அளிக்கவில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம். முதலில் மூப்பனார் அந்தப் பதவிக்குப் போட்டியிடுகிறாரா என்று தெரிந்து கொள்வதற்கே நான் பெரிய முயற்சியில் ஈடுபட வேண்டியதாயிற்று. நான் நேரடியாகக் கேட்டால் சொல்வதற்குக் கூச்சப்படுவார் என்பதற்காக, முரசொலி மாறனை விட்டுக் கேட்கச் சொன்னேன். மாறன் கேட்டபோது கூட, அவர் ‘என்னுடைய தோழர்கள் அப்படிச் சொல்லிக் கொண்டி ருக்கிறார்கள். நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர்களது மனம் புண்படும் என்பதற்காக வாயை மூடிக் கொண்டிருக்கிறேன்' என்று சொன்னார்.

பிறகு 14 ஆம் தேதியன்று டெல்லியில் இருந்து சென்னைக்குத் திரும்பும் போது, 'என்ன உங்களுக்கு அந்தக் கருத்திருக்கிறதா?' என்று கேட்டேன். 'என்ன, மூன்று மாதப் பதவி, விடுங்கள்' என்று சொல்லிவிட்டார்.

17 ஆம் தேதி சுர்ஜித்திடம் பேசினேன். மூப்பனார் அவர்களை ஆதரிக்க வேண்டுமென்ற என் கருத்தை அவரிடத்திலே வற்புறுத்திச் சொன்னேன். அப்போது அவர் ‘மூப்பனார் இடத்திலே தனிப்பட்ட முறையிலே எங்களுக்கு வேறுபாடு கிடையாது. ஆனால் கொள்கை அளவில் முடிவெடுத்து விட்டோம். முலாயம் சிங் இல்லாவிட்டால் குஜ்ரால் என்பது அந்த முடிவு. இது எங்களுடைய முடிவு மட்டுமல்ல. இடது சாரி முன்னணியிலே உள்ள 52 பேரும் இப்படி முடிவெடுத்து விட்டனர்!' என்று அவர் என்னிடத்திலே சொன்னார்.

மறுநாள் காலையில், பீகார் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் இல்லத்திற்குச் சென்று பேசினோம். அப்போது சில த.மா.கா. உறுப்பினர்கள் கூட அங்கிருந்தார்கள். அப்போது அவர் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் பொம்மை அவர்களைப் பிரதமராக ஆக்க வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டார். நான், 'இப்போதுதானே கர்நாடகம் ஒரு பிரதமரைப் பெற்றிருந்தது. ஆகவே ஏன் இப்போது தமிழ்நாட்டிற்கு அந்த உரிமையைக் கொடுக்கக் கூடாது?' என்று அவரிடத்திலே வலியுறுத்திக் கேட்டபோது, அவர் அதை ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை.

அதற்குப் பிறகு முலாயம் சிங் அவர்கள் தமிழ்நாடு இல்லத்திற்கே என்னைச் சந்திக்க வந்தார். அவரிடத்திலே 17 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அவர் தன்னையே ஒரு வேட்பாளராகக் குறிப்பிட்டுத் தனக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென்று கேட்டார். அவரிடத்திலேயும் நான் மூப்பனார் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னேன். அவர், 'நானே ஒரு வேட்பாளராக இருக்கிறேன் - என்னிடத்திலேயே ஆதரவு கேட்கிறீர்களே' என்று தட்டிக் கழித்துவிட்டார்.

இந்தச் சூழ்நிலைகளையெல்லாம் பார்த்த பிறகு இதற்குமேல் ஆதரவு திரட்டுவதிலோ யாரையும் வலியுறுத்துவதிலோ பயனில்லை என்று எனக்குத் தோன்றியது' என்று விளக்கம் அளித்தார் கலைஞர். பின்னர் அனைவர்க்கும் பொதுவானவராக குஜ்ரால்பெயரை சந்திரபாபு நாயுடு முன்மொழிந்தார். அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

இவை எல்லாம் அப்போதே விளக்கப்பட்டு விட்ட உண்மைகள். இவை எதுவும் தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர். இப்போது தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டுக்கும் வண்டி வண்டியாக துரோகம் செய்கிறது ஒன்றிய பா.ஜ.க. தலைமை. அதனை மறைக்கத்தான் மூப்பனார் முகமூடி அணிகிறார் நிர்மலா.

Also Read: "அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !