Politics

“மக்களுக்கான திட்டங்களை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசு!” : TOI நாளிதழுக்கு முதலமைச்சர் சிறப்பு கட்டுரை!

“மக்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தும் பொது சுகாதாரத் திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க அரசு சீர்குலைத்து வருகிறது” என தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புக் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்களில் இடம்பெற்றிருக்கிற சேவைகளால் மக்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். அடிப்படை மருத்துவ சேவைகளில் தொடங்கி முதன்மை பரிசோதனைகள் வரை என இரு நாட்கள் நடந்த முகாம்களில் மட்டும் சுமார் 93 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

நடப்பாண்டிற்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 8.4 விழுக்காடு அதிகம். இந்நிதியைக் கொண்டு ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘இன்னுயிர் காப்போம் : நம்மை காக்கும் 48 ’ உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை தவிர்த்து, தமிழ்நாடு முழுவதும் பெரும் பொருட்செலவில் அதிநவீன மருத்துவமனைகளும், சுகாதார நிலையங்களும் நிறுவப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் புற்றுநோய் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு, அனைத்து தரப்பு மக்களின் நலன்களை காக்கும் வகையில் பொது சுகாதாரத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், பொது சுகாதாரத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க அரசு செயல்படுகிறது.

தமிழ்நாடு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் ஒன்றிய அரசு தவறிவிட்டது. ஒன்றியமயமாக்கல் என்கிற பெயரில், மாநில அரசுகள் செயல்படுத்தும் சுகாதாரத் திட்டங்களில் மூக்கை நுழைத்து மக்கள் நலனுக்கான சேவைகளுக்கு இடையூறு இழைக்கிறது.

எனவே, இவ்வேளையில் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் கொள்கைகளை வடிவமைக்க மாநில அரசுக்கு சுதந்திரத்தையும், சுயாட்சியையும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் அழுத்தம், திருத்தமாக வலியுறுத்துகிறேன்.

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக ஒன்றிய அரசு நடத்தும் நீட் மற்றும் நெக்ஸ்ட் போன்ற நுழைவுத் தேர்வுகள் சமூகநீதிக் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவும் இதனால் பாதிக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் NMC சட்டம், கல்வியை வணிகமயமாக்க தூண்டுகிற நோக்கில் அமைந்துள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Also Read: சென்னையில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் : சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு !