Politics
அனுமனை அறிவியலோடு ஒப்பிட்டு சர்ச்சை கருத்து! : பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூருக்கு எழும் கண்டனங்கள்!
இமாச்சல் பிரதேசத்தில் நடந்த பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க எம்.பியும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான அனுராக் தாக்கூர் அறிவியலை புறந்தள்ளி புராணங்களை ஏற்குமாறு மாணவர்களை வலியுறுத்தியது, இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அளவில் ஆகஸ்ட் 23ஆம் நாள், ‘தேசிய விண்வெளி நாள்’-ஆக கொண்டாடப்படும் நிலையில், அதனையொட்டி இமாச்சல் பிரதேசத்தில் இருக்கிற பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய அனுராக் தாக்கூர், “முதன்முதலில் விண்வெளிக்கு சென்றவர் யார்” என கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் “நீல் ஆம்ஸ்ட்ராங்” என பதிலளித்தனர்.
அதற்கு அனுராக் தாக்கூர், “நான் முதன்முதலில் விண்வெளிக்கு சென்றவர் அனுமன் என நினைக்கிறேன்.
இவ்வேளையில், பள்ளி முதல்வருக்கும், மாணவர்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். பாடப்புத்தகங்களை கடந்து நம் சிந்தனைகள் இருக்க வேண்டும். நம் பண்பாடுதான், நமக்கு அறிவு” என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இக்கருத்தை பள்ளி மாணவர்களிடம் பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல், தனது சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
‘யுரி ககாரின்’ என்கிற ரசிய விண்வெளி வீரர் 1961ஆம் ஆண்டு 108 நிமிடங்கள் விண்ணில் பறந்து, விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் என்ற வரலாற்று சிறப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது குறித்து தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, “பள்ளி மாணவர்களிடன் புராணங்களைக் கூறி, அறிவியலுக்கு புறம்பான கருத்து தெரிவித்து தவறாக வழிநடத்துவது வருத்தமளிக்கிறது. பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூரின் இந்த நடவடிக்கை, மாணவர்களின் கல்வி அறிவுக்கு இழுக்காக அமைந்துள்ளது” என தனது X சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!