Politics

“இந்த மசோதாவால் நாடாளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும்” - பாஜக அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!

கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் இன்றுடன் (ஆக 21) நிறைவடையவுள்ள நிலையில், ஒன்றிய உள்துறை அமித்ஷா புது சட்டமசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவானது, ஒரு முதலமைச்சரோ, அமைச்சரோ, பிரதமரோ ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால், 31-வது நாள் அவர்களை பதவி நீக்கம் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இதன்படி, அவருக்குத் தண்டனை விதிக்கப்படாவிட்டாலும், 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால், அவர்களை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய இந்த மசோதா வகை செய்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்த மசோதாவிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், நேற்றே நாடாளுமன்றத்தில் இதன் நகலை கிழித்து தங்களது கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஏற்கனவே அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை என அனைத்தையும் பாஜக தனது கட்டுப்பாட்டில் வைத்து, பாஜகவுக்கு கட்டுப்படாத எதிர்க்கட்சிகளை குறிவைத்து பழிவாங்கும் நிலையில், இது எதிர்க்கட்சிகளை மேலும் ஒடுக்கும் மசோதாகவே உள்ளது.

இதற்கு அனைவரும் தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தனது கண்டனத்தையும் அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் MP வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (ஆக.20) உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மூன்று சட்ட மசோதாக்களைத் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற விதிகளுக்கு மாறாக கூட்டத் தொடர் முடிவதற்கு முதல் நாள் திடுமென இவை அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சட்டமானால் நாடாளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும். இது அரசமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் அப்பட்டமான ஃபாசிசத் தாக்குதலாகும். இம்முயற்சியை உடனடியாக முறியடித்திட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

அரசமைப்புச் சட்ட (130-வது திருத்தம்) மசோதா-2025; யூனியன் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா-2025; மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா -2025 ஆகிய மூன்று மசோதாக்கள்தாம் மக்களவையில் நேற்று (ஆக.20) அமித்ஷா அவர்களால் தாக்கல் செய்யப்பட்டன. அரசமைப்புச் சட்ட (130வது திருத்தம்) மசோதா அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்-75 ஐத் திருத்த முயல்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், 30 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் காவலில் இருந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ, அவருக்குத் தண்டனை விதிக்கப்படாவிட்டாலும் கூட, அவரைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்குகிறது. மற்ற இரண்டு மசோதாக்களும் அதே அதிகாரத்தை யூனியன் பிரதேசங்களிலும், ஜம்மு காஷ்மீரிலும் செயல்படுத்துபவை ஆகும்.

அறிமுக நிலையிலேயே எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக இவை மூன்றையும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு (JPC) அனுப்புவது என்கிற நெருக்கடிக்கு உள்ளானது ஒன்றிய அரசு

அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா-2025, அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்-21 இல் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமையை மீறுகிறது. அத்துடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைப் பதவியிலிருந்து நீக்குவதற்குரிய அதிகாரத்தை ஆளுநருக்கு அனுமதிப்பதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றான நாடாளுமன்ற ஜனநாயகத்தையே முற்றாக சிதைக்கிறது.

ஏற்கனே அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்-356 ஐப் பயன்படுத்தி தனக்குப் பிடிக்காத மாநில அரசுகளை ஒன்றிய ஆட்சியாளர்கள் அடிக்கடி கலைத்து வந்தனர். அதைத் தடுக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டு எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் கடுமையான சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் பின்னர்தான் உறுப்பு எண்- 356 ஐத் தவறாகப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்பது கட்டுப்படுத்தப்பட்டது.

இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இச்சட்டங்கள் முன்பிருந்ததைவிட மோசமான நிலைக்கு நாட்டைத் தள்ளுவதற்கான சதிமுயற்சியாகும். உதவி ஆய்வாளர் நிலையில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர் நினைத்தாலே போதும் ஒரு முதலமைச்சரையே பதவியிலிருந்து தூக்கிவிட இந்த சட்டம் வழிவகுக்கிறது.

ஏற்கனவே அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ முதலானவற்றை பாஜக அரசு அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்துகிறது. அண்மையில் இதை உச்சநீதிமன்றமே குறிப்பிட்டுக் கண்டித்துள்ளது. இந்தச் சூழலில் அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் நினைத்தால் முதலமைச்சரையே மாற்றலாம் என்கிற அளவற்ற அதிகாரத்தைக் கொடுப்பது பேராபத்தாகவே முடியும்.

மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்தச் சட்ட மசோதாக்கள் சட்டரீதியான வழியைப் பயன்படுத்தி அரசமைப்புச் சட்டத்தை அழித்தொழிப்பதற்கான ஏற்பாடாகும். இந்த அப்பட்டமான ஃபாசிசத் தாக்குதலை முறியடிக்கும் அறப்போரில் தமிழ்நாடு தலைமை வகிப்பதே பொருத்தமாகும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த சட்ட மசோதாக்களை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்; குறிப்பாக, பிறமாநிலங்களும் வெகுண்டெழும் வகையில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Also Read: “அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!