Politics

"பாஜக வேட்பாளர் தமிழராக, தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?" - திமுக எம்.பி கனிமொழி கேள்வி !

இந்தியா கூட்டணி சார்பில், குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டியை வேட்பாளராக நிறுத்துவது என்று ஒருமித்த கருத்தாக முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு கருத்தியல் ரீதியான ஒரு போட்டியாகும்.

பின்புறத்தில் இருந்து வந்த ஒருவரை தற்போது குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக பாஜக நிறுத்தி இருக்கிறது. அவர் ஒரு தமிழராக இருந்தாலும், அவர் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் ? தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக என்ன செய்தார் ? என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

பிளவுவாத அரசியல் இல்லாத ஒரு நபரை தேர்ந்தெடுத்து இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தியுள்ளோம். நீதிபதி சுதர்சன ரெட்டி ஏழை மக்கள், நலிவடைந்தோருக்கான பல்வேறு விவகாரங்களில் அவர்களின் நலன் சார்ந்து பல தீர்ப்பு வழங்கியிருக்கிறார். அதன் அடிப்படையில் தான் தற்போது அவரை வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம் குடியரசு துணைத் தலைவர் தேர்வில் இறுதி பட்டியலில் யார் யார் இருந்தார்கள் என்பது முக்கியமல்ல. மாறாக இறுதியாக ஒருமித்த கருத்தாக சுதர்சன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், இதுவே இறுதியானது" என்று கூறியுள்ளார்.

Also Read: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்... இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை அறிவித்தார் மல்லிகார்ஜுன கார்கே !