Politics

நேற்றுவரை ‘வாட்நகர் நாயகன்’ இன்று கங்கை கொண்டானா? : சு.வெங்கடேசன் கண்டனம்!

இந்திய தொல்லியல் துறை, இந்தியாவின் தொன்மையை வெளிக்கொண்டு வரும் பணியை தீவிரமாக்குவதைத் தாண்டி, ஆரிய திணிப்பை முனைப்பாக முன்னெடுத்து வருகிறது என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசின் முன்னெடுப்புகள் வெளிக்காட்டுகின்றன.

2013ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் கீழடி தொல்லியல் அகழாய்வு ஆராய்ச்சி நடத்தப்பட்டு, அவ்வாராய்ச்சியில் பல்வேறு அரிய பொருட்கள் கிடைக்கப்பெற்றன.

இதனை அறிந்து, கீழடி அறிக்கை வெளியானால் தமிழரின் தொன்மை மிக நீண்டது என்பது அறிவியல் பூர்வமாக வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணனை பணியிடமாற்றம் செய்தது ஒன்றிய அரசு. இதனை தமிழ்நாடு அரசு வன்மையாக கண்டித்தது.

பிறகு, கீழடி அகழாய்வை தமிழ்நாடு அரசு தாமாக முன்னெடுத்து, தமிழ் மக்களின் பண்பாட்டு சிறப்பையும், வரலாறையும் பறைச்சாற்றி வருகிறது. இதற்கு ஒன்றிய அரசின் சார்பில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என்பதை துறை சார்ந்த ஒன்றிய அமைச்சரே அண்மையில் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையே, ராமகிருஷ்ணன் அறிக்கை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஆண்டுகளாகியும், இதுவரை அவ்வறிக்கை குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் ஒன்றிய அரசு வஞ்சனை செய்து வருகிறது.

இதுபோன்ற சூழலில்தான், தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருகை தந்து தமிழ்நாட்டையும், தமிழர்களையும் கொண்டாடுவது போன்ற தோற்றத்தை வெளிக்காட்டி சென்றுள்ளார்.

இதனைக் கண்டித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “இந்திய தொல்லியல் துறை கடந்த 5 ஆண்டுகளில் ஒதுக்கிய அகழாய்வுப் பணிகளுக்கான மொத்த நிதியில் 25 விழுக்காட்டை (ரூ. 8.53 கோடி ) குஜராத்தில் மட்டும் செலவிட்டுள்ளது.

அதிலும் 94 விழுக்காட்டை பிரதமர் மோடி பிறந்த ஊரான வாட்நகரில் மட்டும் செலவிட்டுள்ளது. இதே காலத்தில் தமிழ்நாட்டிற்கு செலவழிக்கப்பட்டுள்ளது வெறும் 9.8 %மட்டுமே.

நேற்றுவரை “வாட்நகர் நாயகனாக” இருந்து விட்டு இன்று “கங்கை கொண்டானாக” மாறிவிட்டதாக நம்ப சொல்கிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.

Also Read: நாய்க்கு இருப்பிட சான்றிதழ்! : தேர்தல் ஆணையத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கை!