Politics
கோவையில் அப்படி.. சிதம்பரத்தில் இப்படி.. பழனிசாமியின் அழைப்புக்கு தக்க பதிலடி கொடுத்த CPI முத்தரசன்!
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதற்கான ஆயத்தப்பணியில் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக, எங்கே நாம் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு நாட்களுக்கு முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி தரக்குறைவாக பேசிய பழனிசாமி, வெட்கமே இல்லாமல் தற்போது அக்கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த சூழலில் அதிமுகவின் அழைப்பை திமுக கூட்டணி கட்சிகள் பகிரங்கமாக நிராகரித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து சென்னை தி.நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது :-
எடப்பாடி பழனிசாமி நல்ல நகைச்சுவையாக பேசியுள்ளார். இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை காமெடி எடப்பாடி பழனிசாமி பேசியது. தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கம் சிபிஐ கடந்த தேர்தல் பொழுது சொன்னது. பாஜக கூட்டணியில் அதிமுக இருந்த பொழுது சென்ற தேர்தலில் நாங்கள் அந்த முழக்கத்தை பேசினோம். அந்த முழக்கத்தை இரவலாக பெற்று பாஜக பழனிசாமி பேசி வருகிறார்.
கோவையில் பேசும்பொழுது கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என்று கூறிய பழனிசாமிதான், சிதம்பரத்தில் பேசும் பொழுது கம்யூனிஸ்ட் கட்சி வரவேண்டும் சொல்கிறார் என்று கூறுகிறார். ரத்தின கம்பளம் இல்லை ரத்த கரை படிந்த கம்பளத்தில்தான் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்கிறார். தமிழகத்தை மீட்போம் என்றால் யாரிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்க போகிறீர்கள்?
ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து வருகிறது. சமஸ்கிருத மொழிக்கு கடந்த 10 ஆண்டுகளாக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கி உள்ளது ஒன்றிய பாஜக. ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 140 கோடியை மட்டுமே ஒதுக்கி உள்ளது ஒன்றிய அரசு. இதிலிருந்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எப்படி வஞ்சிக்கிறது புறக்கணிக்கிறது என்பது தெரிகிறது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையை அதிமுக ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்பதை தெளிவாக சொல்ல வேண்டும். தமிழ்நாட்டின் தலைமீது தொங்கிக் கொண்டிருக்கிறது தொகுதி மறுவரையறை என்ற கத்தி. இதற்கு எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு என்ன? இயற்கை பேரிடருக்காக தமிழ்நாடு கோரிய நிதியை ஒன்றிய அரசு இதுவரை கொடுக்கவில்லை. இதில் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைப்பாடு என்ன?
100 நாள் வேலை திட்டத்திற்காக ஒன்றிய அரசின் நிதி தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறார்? தமிழக மீனவர்கள் தொழிலுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழக மீனவர்கள் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமியின் நிலைப்பாடு என்ன?
எடப்பாடி ஆட்சி காலத்தில்தான் உதய் மின் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதா இருக்கும் வரை அதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. பாஜக ஒரு ஆக்டோபஸ் என்று சொல்லி அப்போது பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் கலைஞர். ஜெயலலிதாவும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தா.ர் மந்திரி சபையிலும் இடம் பெற்றனர். அந்த ஆட்சி 13 மாதம் முடிந்து போனது. ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தார். அப்போது ஜெயலலிதா சொன்னார், எப்பொழுதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று. ஏன் இதை எடப்பாடி பழனிசாமியால் இப்போது சொல்ல முடியவில்லை?
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி தற்பொழுது பாஜகவுடன் உறவு கொள்ள வேண்டிய காரணம் என்ன? தன்னைத்தானே முதலமைச்சர் வேட்பாளர் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி சொல்கிறார். "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்" என்று ஒரு படத்தில் வடிவேலு சொல்வது போல, நான்தான் கூட்டணி கட்சித் தலைவர் நான்தான் முதலமைச்சர் என்று தன்னைத்தானே அறிவித்துக் கொள்கிறார் பழனிசாமி பாஜக முதல்வர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படவில்லை.
முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அமித்ஷா ஒருபோதும் சொல்லவில்லை. பாஜகவால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து பேரபாயம் காத்துக் கொண்டுள்ளது. பாஜகவுடன் அதிமுக சேர்ந்தது தவறு என்று அதிமுகவைச் சேர்ந்தவர்களே சொல்லி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி எங்களையும் அழைக்கிறார். பழனிசாமியின் அழைப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது. உங்களது கூட்டணி ஒப்பேராத கூட்டணி, தமிழ்நாட்டில் தற்பொழுது உள்ள திமுக கூட்டணி போல் எந்த ஒரு கூட்டணியும் இத்தனை ஆண்டுகள் நீடித்ததே கிடையாது.
திமுக கூட்டணி மக்கள் பிரச்னைகளுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி, கொள்கைக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. வரும் சட்டமன்றத் தேர்தலை இதே கூட்டணிதான் சந்திக்கும். அந்த தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
பாஜக - அதிமுக கூட்டணி இயல்பாக அமைந்த கூட்டணி இல்லை. எலியும் தவளையும் கூட்டணி சேர்ந்தது போல்தான் பாஜக - அதிமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்க வாய்ப்பில்லை. நயினார் ராஜேந்திரன் காலையில் ஒன்று பேசுகிறார், மாலையில் ஒன்று பேசுகிறார். கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்று அமித்ஷாதான் அறிவிப்பார் என தினகரன் சொல்கிறார். அதிமுக - பாஜக கூட்டணி இயற்கை கூட்டணியல்ல செயற்கை கூட்டணி.
சட்டம் ஒழுங்கு தொடர்பாக தொலைக்காட்சியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று ஒரு முதலமைச்சர் எப்போதாவது சொல்லியிருக்கிறாரா? ஆனால் பழனிசாமி தான் முதலமைச்சராக இருந்தபோது சொல்லியிருக்கிறார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ குற்றச்சம்பவங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். அஜித்குமார் தாயிடம் பேசும்பொழுது கூட முதலமைச்சர் சாரி சொல்கிறார். சாரி என்று சொல்வதை பெருத்தன்மையாக எடுத்துக் கொள்ளாமல் ஏன் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்ய வேண்டும்?
பாஜக - அதிமுக கூட்டணி என்பது கோயபல்ஸ் கூட்டணி. பொய்யை உண்மையாக மாற்ற முயற்சி செய்பவர்கள், ஹிட்லருடன் கூட்டணியில் இருந்தவர்கள். பழனிசாமி மீது அதிமுக தொண்டர்கள் அவநம்பிக்கையாக உள்ளனர்." என்றார்.
Also Read
-
பீகார் - வாக்காளர் பட்டியல் சீரமைப்பு முறை ஆபத்தானது : இந்திய தேர்தல் ஆணையம் மீது தேஜஸ்வி புகார்!
-
”கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது” : அமர்நாத் ராமகிருஷ்ணன் !
-
”இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
”இது நாங்கள் உருவாக்கிய கூட்டணி” : எடப்பாடி பழனிசாமிக்கு தொல்.திருமாவளவன் பதிலடி!
-
”ஓரணியில் தமிழ்நாடு” கைகோக்கும் குடும்பங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!