Politics
அமர்நாத் விவகாரம் : “வேட்டையாடுவதனால் வரலாற்று உண்மைகளை மறைத்து விட முடியுமா?” - சு.வெங்கடேசன் MP கேள்வி!
கீழடி அகழாய்வுகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வு முடிவுகளை வெளியிட ஒன்றிய பா.ஜ.க அரசு மறுத்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்த தமிழர் விரோத போக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
அதோடு தற்போது இந்த கீழடி அகழாய்வு விவகாரம் பெருமளவு சூடு பிடித்துள்ள நிலையில், கீழடி குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட ஆய்வாளர் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நேற்று (ஜூன் 17) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஒன்றிய அரசால் வேட்டையாடப்படுகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :-
கீழடி அகழாய்வு குழுவில் இருந்து பணியாற்றிய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து நொய்டாவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டுமல்ல, ஆவணப்படுத்தும் பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். ஒரு அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்படுவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அது நிர்வாக நடைமுறையில் உள்ள ஒரு விஷயம்தான்.
ஆனால் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா விஷயத்தில் அப்படி இல்லை. கடந்த 8 ஆண்டுகளாக கீழடி அகழாய்வில் அதன் உண்மைக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உறுதியாக பணியாற்றியவர் அமர்நாத். அப்படிப்பட்டவரை அகழாய்வை நீங்கள் தொடர வேண்டாம் என்று 2017 ஆம் ஆண்டு வெளியேற்றினார்கள். அதேபோல் அவர் மேற்கொண்ட கீழடி அகழாய்வின் அறிக்கையை நீங்கள் எழுத வேண்டாம் இன்னொரு அதிகாரி எழுத ஏஎஸ்ஐ உத்தரவிட்டது.
அதற்குப்பின் நீதிமன்றத்தை நாடி, நான் அகழாய்வு செய்த இடத்தை நான்தான் அறிக்கை எழுத வேண்டும் என்றும் அதுதான் மரபு அதுதான் சரி என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதன் காரணமாக நீதிமன்றம் அமர்நாத் ராமகிருஷ்ணா தான் அந்த அறிக்கையை எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதற்குப் பிறகு கூட கௌகாத்தியில் இருந்து கோவாவிற்கு மாற்றப்பட்டார். சென்னைக்கு மாற்றப்படவில்லை. அதனால்தான் அவர் அந்த ஆய்வு அறிக்கை எழுத முடியாமல் இருந்தது.
பின்னர் நீதிமன்றத்தை நாடிதான் அவர் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதற்குப் பிறகுதான் அவர் ஆய்வு அறிக்கை எழுதி ஒப்படைத்தார். ஒப்படைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை அந்த அறிக்கையை எப்போது வெளியிடுவீர்கள்? என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பின்பு 11 மாதங்களில் வெளியிடுவோம் என்று ஏஎஸ்ஐ சொன்னது. அதற்குப் பின்பும் வெளியிடவில்லை.
இந்த நிலையில்தான் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பினோம். பின்னர் ஒன்றிய கலாச்சார துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அதற்குப் பின்புதான் விரைவில் வெளியிடுவோம் என்று நாடாளுமன்றத்தில் உறுதி கொடுத்தார்கள். அந்த உறுதி மொழியை கூட காப்பாற்றவில்லை. கூட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மே 21ஆம் தேதி நீங்கள் செய்த அகழாய்வில் கூடுதல் அறிவியல் ஆதாரம் வேண்டும் என்று அதற்கு விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளார்கள்.
கூடுதல் ஆதாரம் வேண்டும் என்றால் இவர்கள் நீதிமன்றத்திலேயே சொல்லி இருக்கலாம். நீதிமன்றத்தில் 11 மாதங்களில் அறிக்கை வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டு, நாடாளுமன்றத்தில் இந்த அறிவியல் ஆதாரங்கள் போதாது கூடுதல் அறிவியல் ஆதாரங்கள் வேண்டும் என்று சொல்லியோ இருக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் விரைவில் வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டு, இப்போது கடைசி கட்டத்தில் வந்து கூடுதல் அறிவியல் ஆதாரம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாகதான் ஒன்றிய பண்பாட்டுத்துறை அமைச்சர் கடந்த 10ஆம் தேதி சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் வந்து “இதை ரீஜினலாக பார்க்காதீர்கள், கூடுதலாக அறிவியல் ஆதாரம் தேவை” என்று சொல்லுகிறார். இந்தப் பின்னணியில் இயக்குநராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா ஆவணப்படுத்தும் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த ஆவணப்படுத்தும் பிரிவில் எவ்வளவு பேர் பணியாற்றுகிறார்கள் என்று விசாரித்தபோது, அநேகமாக இவர் மட்டும்தான் அனுப்பப்படுகிறார் என்று தகவல்கள் வந்தது.
ஒரு ஆய்வை நடத்தியதற்காக ஒரு ஆய்வாளர் எப்படி எல்லாம் வேட்டையாடப்படுவார் என்பதற்கு தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நிகழ்த்தி காட்டிக்கொண்டே இருக்கிறது. நாங்கள் விரும்புவதைப் போல் நீங்கள் இல்லை என்றால், எங்களுடைய கருத்துக:ளுக்கு நீங்கள் இசைவாக இல்லை என்றால், நாங்கள் என்னவெல்லாம் செய்வோம் என்பதைத்தான் ஒன்றிய பாஜக அரசு காட்டிக்கொண்டிருக்கிறது.
மே 23 ஆம் தேதி இந்தப் பிரச்சினை தொடர்பான அறிக்கையை நான் வெளியிட்டேன். அன்றிலிருந்து இன்று வரை 20 நாட்களாக தமிழ்நாட்டில் பேசுபொருளாக ஆய்வறிஞர்கள், வரலாற்றாளர்கள், தமிழக முதலமைச்சர், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பேசிக் கொண்டே இருக்கும் நிலையில், தற்போது அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஒன்றிய அரசு தங்களுடைய கொள்கையில் எப்படி உறுதியாக இருக்கிறது என்பதை தமிழ்நாட்டிற்கு அமர்நாத் ராமகிருஷ்ணா மூலம் எடுத்துச் சொல்லும் நடவடிக்கையாகதான் இதை நாங்கள் பார்க்கிறோம். தமிழ்நாட்டுக்கு எதிராக, தென்னிந்தியாவிற்கு எதிராக, தென்னிந்தியாவின் வரலாற்றுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு எடுத்து வரும் பாரபட்சமான நடவடிக்கை இது.
தனிமனிதனை இது போன்று வேட்டையாடுவதனால் வரலாற்று உண்மைகளை மறைத்து விட முடியும் என்ற ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு தமிழ்நாட்டு மக்கள் அரசியல் களத்தில் அதற்கான பதிலை அளிப்பார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
Also Read
-
“அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி” : அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!
-
சென்னை பறக்கும் ரயில் நிறுவனத்தை மெட்ரோவுடன் இணைப்பது எப்போது? - கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
-
"திராவிட மாடல் ஆட்சியில் கோயம்புத்தூர், மதுரை IT நகரங்களாக உருப்பெறுகிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
இனி பேரிடர் குறித்து கவலையில்லை... நாசாவுடன் சேர்ந்த இஸ்ரோ : விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள் !
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் : "நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்" - உச்சநீதிமன்றம் கருத்து !