Politics

“மாட்டு கோமியம் கிடைக்க வாய்ப்பில்லை அமைச்சரே!“: கீழடியை விமர்சித்த அமைச்சருக்கு குவியும் கண்டனங்கள்!

உலகின் மூத்த குடி, ‘தமிழர் குடி’ என்ற வரலாற்று சிறப்புமிக்க உண்மையை, உலகளவில் பல்வேறு அறிக்கைகள் வழி அறிஞர் பெருமக்கள் உறுதி செய்தாலும், ஆரியக் கண்ணோட்டம் உடையவர்களால் அது ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மையாகவே இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாகவே, அறிவியல் சார்ந்த தமிழரின் வரலாற்றுச் சிறப்பை உலகிற்கு மேலும் ஒரு முறை உணர்த்தும், கீழடி அகழாய்வை, மறைக்கவும் மாற்றவும் திட்டமிட்டு வருகிறது ஆரியக் கண்ணோட்டம் கொண்ட ஒன்றிய பா.ஜ.க அரசு.

குறிப்பாக, கீழடியால் தமிழரின் பெருமை மேலோங்கும் என்பதை உணர்ந்து, கீழடி ஆராய்ச்சியை இடைநிறுத்தியதோடு மட்டுமல்லாமல், கீழடி ஆராய்ச்சி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து வருகிறது ஒன்றிய அரசு.

இது குறித்து, தமிழ்நாடு வந்த ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்” என்று கூசாமல் பதிலளித்திருக்கிறார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ““இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால் அப்படி எந்த ஆய்வும் நடைபெறவில்லை.

கீழடியின் வரலாறு குறித்து அறிவியல் பூர்வமான நிறுவனங்களால் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது.

கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “இன்று செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், கீழடி ஆய்வறிக்கை வெளியிடுவதற்கு இன்னும் ஆதாரங்கள் தேவை என்று கூறியுள்ளார்.

ஆய்வறிக்கையின் இரண்டு கட்ட அகழ்வாய்வின் அறிக்கையை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, பின் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறுவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

ஆரம்பத்தில் இந்திய தொல்லியல் துறை நடத்திய இரண்டு அகழாய்வுகளிலும் 88 கரிம பொருட்கள் கிடைத்தன. இவற்றில் 18 கரிமப் பொருட்கள் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் ஏஎம்எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

5 கரிமப் பொருட்கள் புது டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிடி அக்சலரேட்டர் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

எத்தனை அறிவியல்பூர்வ ஆய்வுகள் நடத்தினாலும், ஒன்றிய அரசு, அதை ஏற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்துவது உள்நோக்கம் கொண்ட செயலாகும். உடனடியாக கீழடி ஆய்வறிக்கை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: போலி ஆவணங்கள் தயாரித்து சொத்தை அபகரிக்க முயற்சி - பாஜக பெண் நிர்வாகி அதிரடி கைது!