Politics

“வரலாறும், உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது!” : அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!

உலகின் மூத்த குடி, ‘தமிழர் குடி’ என்ற வரலாற்று சிறப்புமிக்க உண்மையை, உலகளவில் பல்வேறு அறிக்கைகள் வழி அறிஞர் பெருமக்கள் உறுதி செய்தாலும், ஆரியக் கண்ணோட்டம் உடையவர்களால் அது ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மையாகவே இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாகவே, அறிவியல் சார்ந்த தமிழரின் வரலாற்றுச் சிறப்பை உலகிற்கு மேலும் ஒரு முறை உணர்த்தும், கீழடி அகழாய்வை, மறைக்கவும் மாற்றவும் திட்டமிட்டு வருகிறது ஆரியக் கண்ணோட்டம் கொண்ட ஒன்றிய பா.ஜ.க அரசு.

குறிப்பாக, கீழடியால் தமிழரின் பெருமை மேலோங்கும் என்பதை உணர்ந்து, கீழடி ஆராய்ச்சியை இடைநிறுத்தியதோடு மட்டுமல்லாமல், கீழடி ஆராய்ச்சி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து வருகிறது ஒன்றிய அரசு.

இது குறித்து, தமிழ்நாடு வந்த ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்” என்று கூசாமல் பதிலளித்திருக்கிறார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள்.

கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.

5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?

மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்!

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read: “மாட்டு கோமியம் கிடைக்க வாய்ப்பில்லை அமைச்சரே!“: கீழடியை விமர்சித்த அமைச்சருக்கு குவியும் கண்டனங்கள்!