Politics

மருத்துவக் கல்வி ஆசையை கைவிட சொல்கிறாரா நடிகர் விஜய்? : மாநில அளவில் விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு!

திரையுலக பயணத்தின் உச்சத்தில் இருப்பதாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் நடிகர் விஜய், தனது ரசிகர்களை வைத்து, தமிழ்நாட்டின் திடீர் முதலமைச்சராக ஆட்சியமைக்க திட்டம் தீட்டி வருகிறார்.

அதற்காக, இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களை, தனக்கே உரித்தான பனையூருக்கு அழைத்து நிவாரணம் வழங்குவது, குளறுபடி கொள்கைகளை மேடையில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

அதுபோன்ற குளறுபடி கொள்கைகள் கொண்ட விஜயின் பேச்சு, இன்று (30.05.25) மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சென்னையில், நடிகர் விஜய் தலைமையில், 2024 - 2025 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று (30.05.2025) நடைபெற்றது. அப்போது விழா மேடையில் பேசிய விஜய், “நீட் மட்டும்தான் உலகமா? அதனைக் கடந்து உலகில் சாதிக்க வேண்டிய செய்திகள் பல இருக்கிறது” என்று கூறியதுதான் அந்த சர்ச்சை பேச்சு.

மருத்துவக் கல்வி கனவோடு ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக் கல்வி முடித்து வரும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு, கல்வி வாய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசின் நீட் நுழைவுத் தேர்வை ஒழித்திட வேண்டும் என்ற சமூக நீதிப் பயணத்தை தமிழ்நாடே மேற்கொண்டு வரும் வேளையில், அதற்கு எதிர்மறையான, அதாவது பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கருத்தியலுக்கு ஒத்த வகையில், “மருத்துவக் கல்வியில்லாமல், வேறு கல்வி இல்லையா?” என்பது போன்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் விஜய்.

கனவை நனவாக்குவதை களைந்து, கனவையே கைவிடும் நடவடிக்கை எவ்வாறு சரியானதாக அமையும் என விஜயின் கருத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து, தி.மு.க மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி, தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை.

நீட் மட்டும்தான் உலகம்னு இங்க யாரும் சொல்லல… நீட் தாண்டி மிகப்பெரிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், நீட் என்ற பெயரில் எங்கள் பிள்ளைகள் தாங்கள் ஆசைப்படும் கல்வியை பெறுவதில் சமவாய்ப்பை மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் அயோக்கியத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதால்தான் திராவிட மாடல் அரசு சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது” என விமர்சித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும், நடிகர் விஜயின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவுசெய்ய வேண்டும்!” : RBI கட்டுப்பாடு தளர்வு குறித்து முதலமைச்சர்!