Politics

“திமுகவை ஒருகாலமும் யாரும் அசைத்துப் பார்க்க முடியாது!” : ED அச்சுறுத்தலுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

அமலாக்கத்துறையை கொண்டு ஒன்றிய பா.ஜ.க அரசு விடும் மிரட்டலுக்கு தி.மு.க அஞ்சாது என்றும், பா.ஜ.க.விற்கு துணை நிற்கும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமியின் அச்சத்தை விமர்சித்தும் அமைச்சர் பி.கே. சேகர்பாபு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளவை பின்வருமாறு,

“தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். டாஸ்மாக் நிறுவன விசாரணைக்கு பயந்துதான் கூட்டத்தில் பங்கேற்றார்’’ எனக் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

‘பயம்’ பற்றியெல்லாம் ‘கோழை’ பழனிசாமி பேசலாமா? பாஜகவோடு நேரடிக் கூட்டணி இல்லாமல் கள்ளக் கூட்டணி காலத்தில்கூட பாஜகவுக்குப் பயந்த பயந்தாங்கொள்ளிதானே பழனிசாமி. அதிமுகவின் தீர்மானங்களில் கூட மோடியையோ ஒன்றிய அரசையோ கண்டிக்காமல் ‘வலியுறுத்துகிறோம்’ என்ற வார்த்தையைப் போட்டுத் தப்பித்த சூராதி சூரர் அல்லவா பழனிசாமி.

பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத் துறை பயம், சிபிஐ பயம், வருமானவரித் துறை பயம், ஆளுநர் பயம், ரெய்டு பயம், தேர்தல் ஆணையம் பயம், இரட்டை இலை சின்னம் பயம். இப்படி எல்லாவற்றுக்கும் பயந்து பாஜகவோடு கூட்டணி சேர்ந்தவர்தான் பழனிசாமி. ’புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என் மீது படுங்கள்’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஊருக்குள் புலி வந்தும் எல்லோரும் ஓடினார்கள் அந்தப் புலியிடம் இருந்து தப்பிக்கப் பெரிய வீரனைப் போல் பேசிய ஒருவன், ’என் மீது படுத்துக் கொள்ளுங்கள், நான் காப்பாற்றுகிறேன்’ என்றானாம். புலியிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு அவன் போட்ட தந்திரம் அது. அந்த புலிப் பாண்டிதான் பழனிசாமி.

பாஜகவுக்குப் பிடிக்காத கட்சிகளைப் பழிவாங்க விசாரணை அமைப்புகளை ஏவிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. மோடி ஆட்சியில் அதிகார அமைப்புகள் பா.ஜ.க-விற்கு ஆள் சேர்க்கும் அடியாட்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. ரெய்டு, மிரட்டல்களுக்கு உள்ளானவர்கள் பா.ஜ.க-வில் சேர்ந்ததால் ‘புனிதர்கள்’ ஆகிவிடுகிறார்கள். அந்த ‘புனிதர்கள்’ மேல் உள்ள வழக்குகள் காணாமல் போய்விடுகின்றன. அந்த பாஜக வாசிங் மிஷினுக்குள் குதித்தவர்தான் பழனிசாமி. வழக்குகளில் சிக்கிய அதிமுகதான் அதில் விழுந்திருக்கிறது. திமுக அல்ல.

மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸின் சுவேந்து அதிகாரி, அஸ்ஸாம் காங்கிரஸின் ஹிமந்த பிஸ்வா, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ராணே, சிவசேனாவை சேர்ந்த பாவனா கவாலி, சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக் போன்வர்கள் பாஜக வாசிங் மிஷின் விழுந்தது போலத் திமுகவினர் விழுந்தார்களா? திமுக ஆட்சி அமைந்தது முதல் இந்த நான்கு ஆண்டுகளில் மோடி அரசின் எத்தனை எத்தனை அடக்குமுறைகள் பழிவாங்கல் நடவடிக்கைகளை திமுக எதிர் கொண்டது. ஆனால் அத்தனை அடக்குமுறைகளையும், அமலாக்கத்துறை சோதனைகளையும் தீரத்தோடு எதிர்த்துநின்றது திமுக! ஆனால் ஒரு ரெய்டுக்கே பயந்து பாஜகவோடு கூட்டணி சேர்ந்தது அதிமுக.

“பாஜகவோடு வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி இல்லை” என வீராவேசமாகப் பேசிய பழனிசாமி, தன் குடும்பத்திற்குப் பாதிப்பு என்றதும் டெல்லிக்கு ஓடிச் சென்று அமித்ஷாவின் காலடியில் அதிமுகவை அடகு வைத்தார். கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டது. சரியாக மூன்றே மாதத்தில், அதாவது ஏப்ரல் 11-ஆம் நாள் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்தார் பழனிசாமி.

அதிமுக போல பாஜகவோடு திமுக சமரசம் செய்திருந்தால், எந்தச் சோதனையும் நடந்திருக்காது. சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள். யாரிடமும் மண்டியிட மாட்டோம். கூவத்தூரில் ஊர்ந்து போய் சசிகலா காலில் விழுந்து பதவி பிடித்த பழனிசாமி, அதன்பிறகு மோடியின் கால்களைப் பிடித்துக் கொண்டார். அமலாக்கத் துறையின் அடாவடியை என்றைக்காவது பழனிசாமி எதிர்த்திருக்கிறாரா? அதன் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறாரா? திமுக உச்சநீதிமன்றம் வரையில் சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.

நெருக்கடி நிலைமையை எதிர்த்து எப்படி நெஞ்சுரத்துடன் திமுக நின்றதோ, அப்படித்தான் இன்றைக்கும் ’யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்போதும் அஞ்சோம்’ எனப் பாரதியாரின் வார்த்தைகளைப் போல நாங்கள் பா.ஜ.க.வின் அடக்குமுறைகளை துணிந்து எதிர்த்து நிற்கிறோம். பழனிசாமியைப் போல டெல்லி எஜமானுக்குப் பயந்து, அமித்ஷா வீட்டுக்குப் போக பல கார்களில் பதுங்கிப் போன பயந்தாங்கொள்ளி பழனிச்சாமி அல்ல நாங்கள்.

“என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை. பழனிசாமியிடம் இருப்பது போலக் காவிக் கொடியும் இல்லை” என எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்ட பிறகும் அரைத்த மாவையே மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சியில் இருந்த போது ஆயிரம் கோடிகளில் அடித்த கொள்ளை நிதியும் அதனைக் காப்பாற்றிக் கொள்ள அடிமை கால்களை மாற்றிக் கொள்ளும் காலடி சரணாகதியும் இந்துத்துவாவைத் தூக்கிப் பிடிக்கும் காவிக்கொடியும்தானே பழனிசாமிக்கு மூலதனம்!

முகாந்தரமற்ற கற்பனைக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளைப் புனைந்து, எதிர்க்கட்சிகளை முடக்குவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கிறது பாஜக. வடக்கே அமலாக்கத்துறையை வைத்து பாஜகவிற்கு ஆள் பிடித்த பார்முலாவை இங்கே செய்து பார்க்கலாம் எனக் கணக்கு போடுகிறது பாஜக.

முதுகெலும்பில்லாத அதிமுக கோழைகள் வேண்டுமானால் பாஜகவின் சித்து விளையாட்டிற்குப் பயந்து பாஜகவை ஆதரித்து அடிபணியலாம்; ஆனால் ஒருகாலமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைக்கோடித் தொண்டனையோ, திராவிட மாடல் அரசையோ துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது என்பதை பயந்தாங்கொள்ளி பழனிச்சாமிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read: “மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் முன்னோடி இயக்கம் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!