Politics

”PM SHRI திட்டத்தில் கையெழுத்திட வற்புறுத்தும் ஒன்றிய அரசு” : கேரள அமைச்சர் சிவன்குட்டி குற்றச்சாட்டு!

ஒன்றிய பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதேநேரம் பல்வேறு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்யாமல், அம்மாநில வளர்ச்சிகளுக்கு தடையை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் ஒன்றிய அரசின் திட்டங்களை ஏற்றுக் கொண்டால்தான், நிதி வழக்க முடியும் என பகிரங்கமாகவே மோடி அரசு மாநில அரசுகளை மிரட்டி வருகிறது. 100 நாள் வேலை திட்டம் தொடங்கி மாணவர்களின் கல்வி திட்டங்கள் வரை மாநிலங்களுக்கு தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

குறிப்பாக PM SHRI திட்டத்தில் சேர வேண்டும் என மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து கல்விக்காண நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கான நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் PM SHRI திட்டத்தை தமிழ்நாடு ஏற்காது என துணிச்சலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.

தற்போது தமிழ்நாடு வழியில், கேரள அரசும் PM SHRI திட்டத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி,"PM SHRI திட்டத்தில் கையெழுத்திட்டால் மாலைக்குள் பணம் கிடைக்கும் என ஒன்றிய கல்வி அமைச்சர் கூறுகிறார்.

PM SHRI திட்டத்தில் இருக்கும் சில கூறுகளை நாங்கள் எதிர்க்கிறோம். ரூ.1,500 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளதால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இலவச சீருடை, பாடப்புத்தகங்கள், நூலகத்திற்கான மானியங்களுக்கு நிதி கிடைக்காததால் பாதிக்கப்பட்டுள்ளன.

கல்வி நிதியை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். தமிழ்நாடு அரசும் PM SHRI திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசுடனும் ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “பா.ஜ.க-வின் அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்” : கழக மா.செ கூட்டத்தில் முதலமைச்சர் அதிரடி!