Politics

இரண்டு ஆண்டுகளாக தொடரும் மணிப்பூர் மக்களின் துயரம் : கண்டுகொள்ளாத பிரதமர் மோடி!

இந்தியா என்கிற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமை (வாக்களிக்கும் கடமை) ஆற்றுவதில் முன்னணி வகித்து வந்த மாநிலமான மணிப்பூரின் நிலை, பா.ஜ.க ஆட்சியில் கடும் அவலத்தை சந்தித்துள்ளது.

மே 3, 2023ஆம் ஆண்டு தொடங்கிய மதக்குழுக்களுக்கு இடையிலான இந்த கலவரம், பா.ஜ.க.வின் பாரபட்ச நடவடிக்கையால் வெடித்ததே தவிர, இயல்பு நிலைக்கான எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், மணிப்பூர் மக்கள், “எங்களை விடுதலையாக விட்டுவிடுங்கள், எங்களுக்கு இந்த நாடே வேண்டாம்” என்கிற மனநிலையை அடைந்துள்ளனர். இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, அங்கு பா.ஜ.க ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது.

ஆட்சியில் மாற்றம் என்ற பெயர் இருந்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும், மணிப்பூரில் நடக்கிற வன்முறைகள், இந்தியாவின் மதிப்பினை குலைத்துவிடுமோ என்ற அச்சத்தில், அங்கு நடப்பதை மறைக்க இணைய முடக்கம், மின்சார துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் மதிப்பு என்பது நாட்டு மக்கள் மனநிலை பொறுத்ததே தவிர, இதர நாடுகள் இந்தியாவின் மீது வைத்திருக்கிற பார்வை பொறுத்தது இல்லை என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே, தற்போதைய நிலைப்பாடுகள் உணர்த்துகின்றன.

இந்த நிலைப்பாட்டிற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், நாடாளுமன்றத்தில் மணிப்பூரின் பிரதிநிதித்துவம், ஒன்றிய ஆட்சியில் எவ்வித மாற்றத்தையும் செய்திட முடியாது என்பதே முதன்மை காரணமாக இருக்கிறது.

மணிப்பூரில் கிளர்ந்தெழுந்த மக்கள் எதிர்ப்பு, உத்தரப் பிரதேசத்தில் எழுந்திருந்தால், இந்நேரம் பா.ஜ.க.வின் செயல்களும், நடவடிக்கைகளும் வேறாக இருந்திருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

காரணம், நாடாளுமன்ற மக்களவையில் உத்தரப் பிரதேசம் பெற்றிருக்கிற பிரதிநிதித்துவம் 80. ஆனால், மணிப்பூர் பெற்றிருக்கிற பிரதிநித்துவம் 2. இதனால்தான், மக்கள் தொகை சார்ந்த தொகுதி மறுசீரமைப்பிற்கு தென் மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை முன்னிறுத்தி வருகின்றன.

குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு தற்போது இருக்கிற 39 மக்களவை உறுப்பினர்களையே, பல நிலைகளில் உதாசீனப்படுத்திவரும் ஒன்றிய பா.ஜ.க அரசு, குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட தமிழ்நாட்டை கண்டுகொள்ளவே செய்யாது என்பதே, தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பிற்கு முதன்மை காரணம்.

இவ்வாறான சூழலில், மணிப்பூரில் நடைபெற்றுவரும் கலவரம் இன்றுடன் (03.05.2025) 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆண்டுகள் கடந்தாலும், கலவரம் தீர்ந்ததாக இல்லை. தற்போது கூட, சுமார் 60,000 மக்கள் வீடுகளின்றி முகாம்களில் அவதியுற்று வருகின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “மணிப்பூர் மக்கள் சுமார் 2 ஆண்டுகளாக கலவரத்திற்கு இடையே வாழ்ந்து வருகின்றனர். எனினும், பிரதமர் மோடி அது குறித்து கவலைகொள்வதாக தெரியவில்லை. உலகம் முழுக்க சென்று வர நேரம் இருக்கும் மோடிக்கு, இதுவரை மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்கவில்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 44 முறை வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. இது தவிர 250 முறை உள்நாட்டு பயணங்களும் மேற்கொண்டுள்ளார். எனினும், ஒரு நொடி கூட மணிப்பூருக்கு ஒதுக்கப்படவில்லை. மணிப்பூர் மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மீளா துயரில் ஆழ்ந்துள்ளனர். அம்மாநிலத்தின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சி கண்டுள்ளது” என தனது X வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read: ”பத்திரிகை சுதந்திரத்தைக் பாதுகாக்க வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!