
நாடு முழுவதும் இன்று உலகப் பத்திரிகை சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்திரிகை சுதந்திரத்தைக் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதபதிவில், ” ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இடம் 151 என படுபாதாளத்தில் உள்ளது. காரணம் என்ன?
ஏனென்றால் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி கேள்விகளைக் கண்டாலே அஞ்சுகிறது. ஊடக அலுவலகங்களில் ரெய்டு நடத்துகிறது, செய்தியாளர்களைச் சிறையில் தள்ளுகிறது, பா.ஜ.க. அரசின் ஊழல்கள், உரிமை மீறல்கள் மற்றும் பெரும்பான்மைவாதப் போக்கை அம்பலப்படுத்துவோர்களை அடக்குகிறது.
உலகப் பத்திரிகை சுதந்திர நாளான இன்று, 'யாருக்கும் அஞ்சாத ஊடகவியல் இல்லையென்றால் மக்களாட்சி இருளில் மாண்டு விடும் என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்வோம். அதனால்தான், பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பது என்பது ஊடகங்களுக்காக மட்டும் அல்ல, குடிமக்கள் அனைவரின் கேள்வி கேட்கும், உண்மையை அறிந்துகொள்ளும், அதிகாரத்தை நோக்கி உண்மையை உரைக்கும் உரிமைக்கானதாக ஆகிறது" என தெரிவித்துள்ளார்.








