Politics

இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் : தமிழ்நாடு அரசைப் பாராட்டிய இந்தியாவின் முன்னணி நாளேடுகள்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மசோதாக்களை நிறுத்திவைத்த ஆளுநரின் செயல் சட்டவிரோதம் என கண்டனம் தெரிவித்தது. ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது. ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்படும் மசோதாக்கள் மீது முடுவு எடுக்க ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரை காலக்கெடு நிர்ணயித்தும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியது. தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று முன்னணி ஆங்கில நாளிதழ்கள் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மசோதாக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை என்பதையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக, அதிகாரங்களை வரையறுக்கும் அரசியல் சாசன பிரிவு 200-ன் வழிகாட்டுதல்களை, ஆளுநர் கடைபிடிக்க வேண்டும் என நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளதாகவும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்றும், அரசியல் ஆதாயத்திற்காக, மக்களின் விருப்பத்திற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதில், ஆளுநர் விழிப்புடன் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பதையும் டைம்ஸ் ஆஃப் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

ஆளுநர் என்பவர், மாநில அரசின் நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருக்க வேண்டுமே தவிர, அரசியல் காரணங்களால் அரசியலமைப்புக்கு மாறாக செயல்படக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாக The Tribune பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசு செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆளுநர்களுக்கு முழு அதிகாரம் வழங்குவதை ஒன்றிய அரசு இனியாவது தவிர்ப்பது நல்லது என்றும் அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் போக்குகாட்டுவது சரியல்ல என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதை Deccan Chronicle சுட்டிக்காட்டியுள்ளது.

ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டு வழங்கியிருக்கின்ற இந்த தீர்ப்பு ஜனநாயகத்தை வலுப்படுத்தக்கூடிய தீர்ப்பு என்றும், ஆளுநர் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துவதில் ஒரு மைல்கல் என்றும், தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக Deccan Herald குறிப்பிட்டுள்ளது.

ஆளுநர் பதவியில் இருப்பவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மதித்து செயல்பட வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதாக The Economic Times செய்தி வெளியிட்டுள்ளது.

Also Read: 32 லட்சம் வேலைவாய்ப்புகளை பெற்று தமிழ்நாடு சாதனை! : ஒன்றிய அமைச்சகம் புகழாரம்!