Politics

கொள்ளை லாபம் ஈட்டும் ஒன்றிய அரசு! : பெட்ரோல், டீசல் கலால் வரி உயர்வுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக விளங்கும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் வாழ்க்கை நடத்துவதற்கான செலவு அதிகம், அதாவது Living Expenses அதிகம்.

உணவு, சுகாதாரம், வீடுகள், போக்குவரத்து, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இந்திய மக்களுக்கு ஆகும் செலவை விட, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் ஆகும் செலவு ஆகும்.

ஆனால், அப்படி இருக்கிற நாடுகளில் கூட, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100-ஐ விட குறைந்த அளவிலேயே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காரணம், கச்சா எண்ணெய் விலை குறைவு.

வரலாறு காணாத வகையில், கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து வருகிறது என்றாலும் அது இந்தியாவில் எதிரொலிக்காமல் இருப்பதற்கு ஒன்றிய அரசு முக்கிய காரணமாக விளங்குகிறது. குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவைகளுக்கு அதிகப்படியான வரி விதித்து, அதில் ஒன்றிய பா.ஜ.க அரசும், எண்ணெய் நிறுவனங்களும் குளிர் காய்ந்து வருகின்றன.

இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதன்மூலம் ஒன்றிய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் அடைகின்றனர். விவசாயிகள், நடுத்தரக் குடும்பத்தினர், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உரிமையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு, கச்சா எண்ணெய் விலை குறையும் வேளையில், பெட்ரோல், டீசல் ஒரு லிட்டருக்கு கலால் வரி ரூ 2 என்ற அளவில் ஒன்றிய அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள்.

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்கவேண்டும். ஏற்றப்பட்ட கலால் வரியை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்திருப்பதால் அதன் பலன்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: வட்டி தள்ளுபடி திட்டம் : சட்டப்பேரவையில் 35 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் முத்துசாமி!